பள்ளிக்குச் சென்று படிக்காத ஸ்ரீராமகிருஷ்ணரின் பெயரில் நாடு முழுவதும் எப்படி ஆயிரக்கணக்கான பள்ளிகளும் கல்லூரிகளும் செயல்படுகின்றன ? - முனைவர் தேஜஸ்ரீ, மதுரை
பதில்: பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பற்றிய ஆச்சரியங்களுள் இதுவும் ஒன்று.
அவர் ஏன் பள்ளி சென்று படிக்கவில்லை?
ஸ்ரீராமகிருஷ்ணரின் அறையைச் சுத்தம் செய்து வந்த பிருந்தை என்ற பணிப்பெண், 'எல்லா சாஸ்திரங்களும் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருநாவில் குடி கொண்டுள்ளன' என்று கூறினாள்.
'இறைச்சிந்தனை இல்லாத வாழ்க்கை எண்ணெயற்ற விளக்கு போன்றது' என்பார் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர். இறைவனை ஒவ்வோர் உயிரும் எண்ணி எண்ணி ஒழுக வேண்டும் என்பதை மனிதர்கள் என்றும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீராமகிருஷ்ணர் அவதரித்தார்.
கடவுளை மையப்படுத்தி, அவரை முன்னிறுத்தி வாழ்வதைப் பிரதானமாகக் கொண்டு செயல்பட்டால் மற்ற நமது செயல்பாடுகளும் வளர்ச்சிகளும் இயல்பாக, சுமுகமாக நடைபெறும் என்பது ஸ்ரீராமகிருஷ்ணர் காட்டிய ஆன்மீகக் கோட்பாடு.
இன்று நாம் வாழ்வது கலியுகத்திலா? இல்லை. கல்வி யுகம் என்று கூவியும் கூறியும் சொல்கிறோம். இன்றைய கல்வி எவ்வளவோ நன்மைகளைச் செய்தாலும் மக்களுக்கு சன்மார்க்கத்தைக் காட்டித் தர அதனால் முடிகிறதா?
பட்டப்படிப்பினால் எப்படியாவது அதிகமாகச் சம்பாதிப்பதிலேயே மனிதர்களது கவனம் செல்கிறது. இதனால் சுயநலம் பெருகுகிறது. பிற உயிர்கள் மீதான அவர்களது பொறுப்பையும் மதிப்பையும் புறக்கணிக்க வைத்துவிடுவது மறுக்க முடியாத உண்மைதானே!
நம்மைவிட பலசாலி, தந்திரசாலி, பணக்காரன், திறமை வாய்ந்தவன் போன்றவர்களை நமது படிப்பு நமக்குக் காட்டித் தருகிறது. அவர்களுடன் இணக்கமாக தாஜா செய்து கொள்ளச் சொல்கிறது.
ஆனால் ஒவ்வொரு கணமும் நம்மை இயக்கும் இறைசக்தியைப் பற்றி நமது பட்டங்கள் எள்ளளவும் நினைக்கச் செய்கிறதா? இறைவனுடனான இணக்கம் பற்றிப் புறக்கணிக்க அல்லவா வைக்கிறது!
ஒருவருடைய பெயருக்குப் பின்னுள்ள கல்வித்தகுதிகள் முக்கியம். ஆனால் அதைவிட முக்கியமானது, அவருக்கு மக்களால் வழங்கப்படும் - அவர் ஓர் அரிய மனிதர் போன்ற நற்பெயர் அவரது பெயருக்கு முன்னே நிற்கும். ஒரு டாக்டர் மக்களுக்கு முக்கியமாக, சிரமப்படுபவர்களுக்கு எந்த அளவிற்குச் சேவை உள்ளத்துடன் சிகிச்சை செய்கிறார் என்பதில்தான் அவரது நற்பெயர் உள்ளது.
முன்னே உள்ளது சம்பாதித்துப் பெற வேண்டிய பண்பு மற்றும் புண்ணியம்; பின்னே உள்ளதோ சம்பாதிப்பதற்குப் பெற வேண்டிய பட்டங்கள்.
இங்கு ஒருவர் சம்பாதிக்க வேண்டியது புண்ணியமா அல்லது பணமா என்ற கேள்வி வருகிறது. புண்ணியமான காரியங்களைப் புத்திசாலித்தனமாகச் செய்பவர்களுக்குப் போதுமான வருமானம் வரவே செய்யும். பேய்த்தனமாகப் பணம் பண்ணுபவர்கள் pill இல்லாமல் நிம்மதியாகக்கூட தூங்க முடிவதில்லை.
புத்தகப் படிப்பிற்கு ஸ்ரீராமகிருஷ்ணர் எதிரியல்ல. ஆனால் எந்தப் படிப்பு மனிதனுக்கு இறைவன் தேவையில்லை, விழுமியங்கள் (values) அவசியமற்றது என்று கூறுகிறதோ அல்லது எதைப் படிப்பவர்களின் மனதில் கடவுளைப் புறக்கணிக்க வைக்கிறதோ அந்தப் படிப்பை ஸ்ரீராமகிருஷ்ணர் புறம் தள்ளினார்.
வெறும் டிகிரிகளைப் பெற்றதாலேயே எல்லாம் பெற்றுவிட்டதாக நம்பும் இன்றைய மக்களிடம் ஸ்ரீராமகிருஷ்ணர், 'நான் இந்தப் படிப்பைப் படிக்காமலேயே என்னால் பெருவாழ்வு வாழ முடியும்' என்று அன்றே காட்டினார்.
இன்றோ, இறைஞானம் பெற்ற தம்மால், தமது திருநாமத்தால் கோடிக்கணக்கானவர்களுக்குப் பள்ளிப் படிப்பும் வழங்க முடியும் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் காட்டி வருகிறார், பல்லாயிரம் பள்ளிகளில் மூலமாக.
பரமாத்ம சொரூபமான பரமஹம்சருக்கு சாஸ்திரப் படிப்பே தேவை இல்லாதபோது பட்டப் படிப்பு எதற்கு?
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் பெயரில் பல பள்ளிகள் இயங்குவதற்குக் காரணம், உயர் ஞானம் பெற்ற ஒருவரின் திருநாம பலத்தால் உத்தியோகம் தரும் கல்வி கிடைப்பது சாதாரணம்தான் என்பதைக் காட்டத்தான்!
கதிரவன் உதித்துவிட்டால் காய்கறிகள் விளைவது அதிசயமா என்ன!
சுவாமி விமூர்த்தானந்தர்
10 பிப்ரவரி, 2021
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்