கொரோனா தொற்றுப் பயம் நீங்கி பள்ளி செல்லும் மாணவர்களிடம் பொறுப்பான ஓர் ஆசிரியர் பூரித்துப் பேசுகிறார்:
- சுவாமி விமூர்த்தானந்தர்
அன்பு மாணவ-மாணவிகளே, எத்தனை மாதங்கள் ஆகிவிட்டன உங்களைக் கண்ணாரக் கண்டு. இந்த கொரோனா ’தேவி’ நம்மை இத்தனைக் காலம் பயமுறுத்தி வந்தாள். பாவம் நீங்கள், வீட்டில், தனிமையில் எத்தனைக் காலம்தான் அடைபட்டுக் கிடந்தீர்கள்.
மாணவச் செல்வங்களே! உங்களது நண்பர்களையும் தோழிகளையும் பள்ளியிலும் கல்லூரியிலும் நீங்கள் நேரில் பார்க்கும்போது கிடைக்கும் ஆனந்தம் வேறு எதன் மூலமும் கிடைக்காது.
என்னதான் பாடம் ஆன்லைனில் நடத்தினாலும் மாணவக் கண்மணிகளுடைய கண்களைப் பார்க்கும் சுகமே தனிதான்; அந்த இணக்கமும் நெருக்கமும் ஒவ்வோர் ஆசிரியரையும் சிந்திக்க வைக்கிறது. பொறுப்பைக் கூட்டுகிறது. மாணவன் இல்லையேல் ஆசிரியருக்கு ஏது மதிப்பும் மரியாதையும்!
பாடம் நடத்துவது என்பது புத்தகச் செய்திகளை மாணவர்களின் மூளைக்குள் திணிப்பதல்ல. பாடம் நடத்துவது, ஆசிரியரின் நன்னடத்தையை மாணவனின் நடத்தையாக மாற்றுவது என்பதை நான் உணர்கிறேன்.
அந்த அடிப்படையில் சில முயற்சிகளையும், சிந்தனைகளையும், சங்கல்பங்களையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள எண்ணுகிறேன். செவிமடுத்து என்னைச் சிறப்பிக்க வேண்டும். செய்வீர்களா, தம்பி தங்கைகளே?
விடலைப் பையன்களாகத் தெரிந்த பலரும் தொற்றுநோய் காலத்தில் பலருக்கும் தொண்டு செய்ததை அறிந்து மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
அதிக மதிப்பெண் வாங்கியவனே புத்திசாலி என்ற அறியாமை என்னிடமிருந்து விலகிவிட்டது. மாணவன் என்றாலே பொறுப்பானவன் என்பது எத்தனை எத்தனை பேர் சேவை புரிந்து என்னைப் போன்றோருக்குத் தெளிவு ஏற்படுத்தினீர்கள்.
புத்திளம் புஷ்பங்களே! கொரோனா காலத்து மோசமான நிலை இனி எங்கும், என்றும் தொடராதிருக்க, இறைவனை இறைஞ்சுவோம். தோளுக்கு மேல் வளர்ந்துள்ள மாணவனே! கொரோனா காலத்தில் ‘சிக்கலான சமயத்தில் நாம் செம்மையாகச் செயல்பட வேண்டும்’ என்பதைக் கற்றோம். அந்தப் பொறுப்பை உன் தோள் மீது ஏற்றிக்கொள்ள உன்னை வரவேற்கிறேன்.
இனி நீ பாடச்சுமையை உணராதபடி உன் ஆசிரியரான நான் சுவையுடன் பாடம் நடத்துவதாகச் சங்கல்பம் எடுத்துக் கொண்டுள்ளேன். இனி உனது மதிப்பெண்ணை மட்டுமே வைத்து உன்னை மதிப்பதைவிட, உன் தனித்திறன் என்னவென்று கண்டுபிடிப்பதில்தான் என் திறமையே உள்ளது.
இனி ஜுரத்தில் சில தினங்கள் படுத்த பிறகு, நீ பள்ளிக்கு வந்தால் உன்னிடம் ‘லீவ் லெட்டர் எங்கே?’ எனக் கேட்காமல், ‘இப்போது நீ நலமா இருக்கிறாயா? ஓய்வும், உணவும், உடற்பயிற்சியும் முறையாக வைத்திருக்கிறாயா?’ என்று கேட்ட பின்பே லீவ் லெட்டரை நினைவுபடுத்துவேன்.
வகுப்பு நிர்வாகம் முக்கியம்தான். ஆனால் உன் மன நலனும் நட்பும் எனக்கு மிக மிக முக்கியம், தம்பி! மாணவ மாணவியே, நீ பள்ளியில் பிறர் அறியாமல் அலைபேசியில் அட்டகாசம் செய்த போதும்..., கிரிக்கெட், இணையதளம், திரைப்படங்கள் என்று பலவற்றிலும் உன் கவனம் ஈர்க்கப்படும்போதும்..., நான் ஒன்றைக் கற்றேன்.
நான் நடத்தும் பாடம் உன் காதுக்கு மட்டுமே போய்ச் சேருவதாக இனி இருக்காது. மாறாக, உனது கண், காது, வாய், தொடு உணர்ச்சி போன்ற எல்லாப் புலன் அறிவுகளையும் ஈர்க்கும் வகையில் அன்பாய் கூறியோ, செய்து காண்பித்தோ, வேறு வகையில் புரியவைத்தோ பாடங்களை நடத்துவதற்குத் திட்டமிடுகிறேன்.
இனி வகுப்பில் நான் பாடம் நடத்துபவராக இல்லாமல், கற்பதையும் கற்பிப்பதையும் நீயும் நானும் சேர்ந்து ஓர் இனிய செயலாக மாற்றிவிடுவோம், வா! எப்படி....?
உனக்கு கிரிக்கெட் பிடிக்குமென்பதால் உன் பாணியிலேயே ஒன்று கூறுகிறேன். நீ பந்தை விளாச நிற்கும் ‘ஸ்ட்ரைக்கர் பேட்ஸ்மேன்’ என்றால், நான் உன் எதிரில் காத்திருக்கும் ‘நான் - ஸ்ட்ரைக்கர் பேட்ஸ்மேன்!’ உன் எதிரில் உள்ள நான் வகுப்பை எப்படியாவது வளப்படுத்தலாம் என்று உறுதி கொண்டுள்ளேன்!
பாடங்களை நடத்தும்போது நீ காதால் கேட்பவனாக மட்டும் இருப்பதால்தான் போரடிக்கிறது. நாம் இருவரும் சேர்ந்து கற்றால் பாடத் திட்டத்தைச் செயல்திட்டமாக மாற்றிவிடலாமே!
என் வகுப்பில் நீ தூங்கிவிட்டால் நீ என்னை மதிக்கவில்லை என்று முன்பெல்லாம் கருதி வந்தேன். ஒரு மாற்றுச் சிந்தனையாக உன் கவனத்தை ஈர்ப்பதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என இனி நினைத்துப் பார்ப்பேன். வாலிப வயதில் உன் விளையாட்டுப் புத்தியை மாற்ற, உன்னை மன இறுக்கத்தில் வருந்தவிடாமல், விளையாட விடுவேன்.
உனக்குத் தெரியுமா, இப்போதெல்லாம் நீ உன் வீட்டில் ‘ஹோம் ஒர்க்’ செய்ய வேண்டும் என்பதற்காக, நானும் உனக்காக ‘ஹோம் ஒர்க்’ செய்து வருகிறேன் என்று?
நீ என்னிடம் இயல்பாகப் பேசாமல், என்னிடம் சரளமாகப் பழகப் பயந்தால் எனக்கு வருத்தம் ஏற்படுகிறது. நீ என்னிடமிருந்து தள்ளி நின்றாலோ, என்னிடமும் என் கற்பிக்கும் முறையிலும் என்ன குறை என யோசிப்பேன்.
மாணவனே, உனக்கும் எனக்கும் இருக்க வேண்டிய உறவுமுறை - பாலுக்கும் நெருப்பிற்கும் உள்ளது போன்றது.அக்கினி சுடேற்றுவதோ பாத்திரத்தை! பால் பக்குவப்படுவதோ சூடான பாத்திரத்தில்!
ஆசிரியர் - மாணவர் இருவரது கவனமும் பாத்திரத்தில்தான்! ஓட்டையற்ற பாத்திரத்தில் ஆர்வமெனும் அக்கினியை நான் செலுத்துகிறேனா என்பதில் என் கவனம் உள்ளது. நல்ல பாத்திரத்தில் உள்ள பாலைப் போல, மாணவ - மாணவியாக நீ இருக்க வேண்டும் என்பதில் உன் கவனமும் இருக்கட்டும். அப்படியிருந்தால் எத்தனை எத்தனை ஆச்சரியங்களை நாம் பார்ப்போம், தெரியுமா?
நீ வகுப்பைக் கவனிக்க வேண்டுமென்றால், விளையாட்டு மைதானத்தில் குதூகலமாகக் குதித்தாடு. அங்கு நீ உடலால் குதிக்கவில்லை என்றால், வகுப்பில் உன் மனம் அங்குமிங்கும் கூத்தாடும் என்பதை நான் உணர்வேன்.
நீ படிக்க வேண்டிய பாடங்கள் பல. எனக்கு நேரமில்லை என்றுதான் நானும் பலர் கூறுவது போல் நம்பியிருந்தேன். ஆனால் ‘நீ என்னை நம்பி கற்க வந்தவன்’ என்ற ஓர் எண்ணமே எனக்குப் புதுச் சக்திகளை வழங்குகிறது.
தம்பியே! நீ நூலகத்தை நன்கு பயன்படுத்துவதைப் பார்த்தால், நான் பெறும் ஆனந்தம் கூறி முடியுமா?
வெளியில் உன்னைக் கோவிலில் பார்த்தால், ‘இறைவா, என் மாணவர்களைச் சிறந்தவர்களாக்கு’ என்று உனக்காக என் மனம் வேண்டிக்கொள்ளும்.
நீ வாலிபன் / யுவதி என்பதை மறந்து, நான் சில சமயத்தில் சற்றுக் கடுமையாக உன்னிடம் பேசிவிட்டாலும், நீ அதைப் பெரிதுபடுத்தாதபோது..., எனக்கு எப்படிப்பட்ட பெருமை கிட்டுகிறது தெரியுமா?
ஆசிரியர் எனும் நிலத்தில் வளர வேண்டிய வீரிய விதை நீ. விதை வேரூன்றும்போது எந்த நிலமாவது விதை தன்னை மிதிக்கிறது என்று நினைத்து வருந்துமா, சொல்!
எனக்கே தெரிகிறது, நடத்தும் பாடத்தில் நான் தெளிவாக இருக்கும்போது மாணவனே, நீ மரியாதையுடன் என்னிடம் நடந்து கொள்வது!
மாணவ, மாணவிகளுள் ஒருவர் மட்டும் ‘டாப்பர்’ ஆகி - அது ‘பேப்பரில்’ வந்துவிட்டால் அதில் எனக்குப் பெருமை இருப்பதாக நான் நினைக்கவில்லை. இனி, பாட அறிவு என்ற பலம், அது தரும் தைரியம், அதைப் புகட்டக்கூடிய பண்பு மற்றும் பொறுமை ஆகியவற்றுடன் உன் முன் வகுப்பில் நிமிர்ந்து நிற்பேன்.
பாடம் கற்க நீ அமைதியாக அமர மாட்டாயா என்ன? உன் ஆர்வத்தைத் தட்டிவிடாமல், பாடத்தைப் புகட்டுவது தூங்கும் குழந்தையின் வாயில் தேனை ஊட்டுவதுபோல! அதனால் அதிகம் பயனுண்டா?
உனக்கு ஒரு பிரச்னை வந்தால், அதை நீக்கிக்கொள்ள நீ யார் யாரையோ, எதை எதையோ தேடி ஓடுகிறாய். உன் நன்மைக்காக நான் உள்ளேன் என்பது உனக்கு அப்போது ஞாபகம் வராவிட்டால் - உன் நம்பிக்கையை நான் பெறவில்லையே என்று வருந்துகிறேன். என்னை நம்பு, உண்மையில் நான் கதறுகிறேன்.
மறதி மாணவன் - சிந்திக்கக் கற்காதவன் - தாழ்வு மனப்பான்மை கொண்டவள் - படிப்பே போரிங் என்பவள் - டென்சன் பேர்வழி - பரீட்சைப் பயந்தாங்கொள்ளி - இவர்களுக்குக் ‘கற்பது களிப்பானது’ என்று காட்டித் தருவதில்தான் இனி என் கரிசனம் எல்லாம்.
வகுப்பில் சில மாணவரை மட்டும் Outstanding என்று தூக்கி வைப்பதும், மற்றவரை Stand Outside என்று தள்ளி வைப்பதும்தான் நம் கல்வியின் அவலநிலை. இதன் தாக்கத்தை இனி நான் என் வகுப்பிற்குள் அண்டவிட மாட்டேன்.
வா மாணவனே, மாணவியே!
உனது, கவனம் Mark-கிலும், என் போன்ற ஆசிரியர்களது கவனம் Remark-கிலும் இருந்தது போதும். இனி We Are Remarkable என்ற நிலைக்கு வருவதில்தான் உனது கவனமும் எனது முயற்சியும் இருக்க வேண்டும். ஆசிரியரான நான் உன்னை அந்த நிலைக்கு உயர்த்துவேன்.
அறப்பணியான ஆசிரியப் பணியில் மேற்கூறியவற்றைக் கடைப்பிடிக்க நானும் என்னைப் போன்ற ஆசிரியர்களும் ஆண்டு முழுவதும் முயற்சி செய்வோம். எங்கள் இஷ்டதெய்வங்களிடம் வேண்டுவோம்.
மாணவர்களே! எங்களது இந்த முயற்சிகள் வெற்றி பெற உங்களது ஒத்துழைப்பும் மிக அவசியம்! அதன் மூலம் நாங்கள் ஆசிரியர்களாக மட்டும் இருந்துவிடாமல், மேலான பொறுப்புணர்வு மிக்க குரு நிலையில் நின்று உங்களை வழிநடத்தும் ஆச்சாரியர்களாக மாறுவோம்! அதற்கு ஆண்டவா, எங்களுக்கு அருள்புரிவாய்!
சுவாமி விமூர்த்தானந்தர்
09 பிப்ரவரி, 2021
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்