முடிவெடுக்கும் திறனில் சீதையும் சாரதையும் சமம்
சரியான நேரத்தில் தரமான முடிவெடுப்பது ஒரு கலை; அது பெரியோரின் ஆசீர்வாதம்; தெய்வத்தின் அருள்.
திறமையான முடிவெடுத்தவர்கள் அருமையாக வாழ்கிறார்கள். முடிவெடுக்கும் திறன் தனிமனித வாழ்க்கையிலும் குடும்ப மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிலும் மிக அவசியமாகத் தேவைப்படுகிறது.
ஸ்ரீமத் ராமாயணத்தின் சாரம் என்பது சீதாதேவியின் இரண்டு துல்லியமான முடிவுகள்தான் என்றால் அது மிகையில்லை. அந்த இரண்டு முடிவுகளை சீதாதேவி திறம்பட எடுத்ததால்தான் ராமாயணமே நிலைத்து நிற்கிறது.
முதல் முடிவு:
ஸ்ரீராமர் காட்டிற்குச் செல்கிறார். சீதாதேவி வனத்திற்கு ராமருடன் செல்ல முற்பட்டார். காட்டில் கொடிய விலங்குகள் இருக்கும், சுட்டெரிக்கும் நெருப்பு போல் சூரியன் கொதிப்பான் என்றெல்லாம் ஸ்ரீராமர் கூறி சீதையைத் தடுத்துப் பார்த்தார்.
தேவியோ தான் எடுத்த முடிவில் தெளிவாக இருந்து '....ஈண்டுநின் பிரிவினும் சுடுமோ, பெருங்காடு?' என்றாள் சீதா தேவி. -கம்பராமாயணம்- 222.
ராமர் சீதையை உடன் அழைத்துச் சென்றார், வேறு வழியின்றி அல்ல. சீதையால்தான் தமக்கு எல்லா வழிகளும் திறக்கும் என்பதால்தான்.
அடுத்த நிகழ்வு. அதே சீதாதேவி அசோகவனத்தில் சிறைப்பட்டிருந்தாள். ராவணனை வதைக்கும் தெய்வீக சக்தியைக் கொண்டிருந்தாலும் சீதை அதைப் பயன்படுத்தவில்லை.
காரணம் தனது சக்தியால் ராவணனை அழித்துவிட்டால், மனைவியைச் சிறை மீட்க முடியாத ராமர் என்ற அவப்பெயர் தன் தலைவனுக்கு வந்து விடும்; அது நடக்காமல் ஸ்ரீராமரின் வில்லின் மகிமை வெளிப்பட வேண்டும் என்பதற்காகத் தன் சக்தியை மறைத்துக் கொண்டார் சீதாதேவி.
“.....எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்”. -கம்பராமாயணம் (48).
கஷ்டத்திலும் நஷ்டத்திலும் குரு போன்று அமைந்துள்ள கணவருடன் இருப்பதே குலப்பெண்ணின் லட்சணம். இந்தப் பண்பு ராமாயண சீதையிடமும் ராமகிருஷ்ணாயன சாரதையிடமும் மிளிர்கிறது.
முதல் நிகழ்ச்சி: 1885, மே 5. அன்று குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் பானிஹாட்டி திருவிழாவிற்குச் சென்றார். அவருடன் 25 பக்தர்களும் சென்றனர். அன்னை ஸ்ரீ சாரதா தேவிக்கு குருதேவருடன் சென்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆவல் இருந்தது. ஒரு பக்தர் மூலமாக அந்த விருப்பத்தை குருதேவரிடம் தெரியப்படுத்தினார்.
குருதேவர் யோசித்தார். துறவறத்தில் மிளிரும் பரமஹம்சரான தன்னுடன் தனது மனைவி வருவதை ஏனோ அவர் ஏற்கவில்லை. சாதாரண மனிதர்களின் வீண் விமர்சனங்களைத் தவிர்க்க நினைத்தார் போலும். அதனால் சாரதா விரும்பினால் வரட்டும் என்று மட்டும் கூறினார். குருதேவரின் வார்த்தைகளில் இருந்த ஆழமான அர்த்தங்களைக் கேட்டவுடன் அன்னை அந்த விழாவிற்குச் செல்லவில்லை.
இதை நாம் அலசிப் பார்த்தால், அன்னையின் கூர்த்த அறிவைக் காணலாம். பொதுவாக, கணவன் கூறுவதை மனைவியோ, பெற்றோர் கூறுவதைப் பிள்ளைகளோ எதைக் கேட்டாலும் தங்களது விருப்பங்களை மட்டுமே அதிலிருந்து புரிந்து கொள்கிறார்கள். எதையும் தங்களுக்குச் சாதகமாக, சுயநலமாக, தாங்கள் நினைத்ததை மட்டுமே கேட்கிறார்கள்; காண்கிறார்கள்; கூறுகிறார்கள்; புரிந்துகொள்கிறார்கள். அதனால் பல உறவுகள் உணர்வுகளின் ஆழம் இல்லாமல் சிதைந்து போகின்றன.
தலைவர் என்ன நினைக்கிறாரோ அதை நிறைவேற்றுவதுதான் அவரோடு பணி புரியும் அதிகாரிகளின், ஊழியர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். குரு-சிஷ்ய உறவிலும் இந்தப் பிரச்னை தலைகாட்டும்.
ஸ்ரீராமகிருஷ்ணர் கூறிய "அவள் விரும்பினால் வரட்டும்" என்ற ஒன்றில் அன்னை மூன்று விஷயங்களைப் புரிந்து கொண்டார்.
1. அன்னை தன்னோடு செல்வதில் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு முழு விருப்பம் இருந்திருந்தால் நேராக அவரே 'புறப்படு சாரதா' என்று சொல்லியிருப்பார்.
2. சாரதாவையும் வரச் சொல் என்று யாரிடமாவது சொல்லியிருந்தாலும் அதுவும் குருதேவரது விருப்பமாக - அனுமதியாக- சந்தோஷ சம்மதமாக இருந்திருக்கும்.
3. மாறாக, விழாவிற்கு வரும் முடிவை அவளே எடுக்கட்டும் என்பதில் உள்ள முழு விருப்பமின்மையை- நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் வரும் மக்களின் விமர்சனத்தை- குருதேவர் சூசகமாகக் காட்டினார்.
விழாவிற்கு ஹம்சமும் (பரமஹம்சர்) ஹம்சியும் விழாவிற்கு ஜோடியாக வந்துள்ளனர் என்று மக்கள் கேலியாகப் பேசுவார்கள். இதை விரும்பாத குருதேவரின் உள்ளக்கிடக்கையைப் புரிந்துகொண்ட அன்னை தன் குருவின் விருப்பமே தன் விருப்பம் என்று முடிவெடுத்தார்.
தலைமை சரியாக இருக்கும் கம்பெனி நிர்வாகத்திற்கும், நல்ல குடும்ப நிர்வாகத்திற்கும் மேற்கூறிய மூன்று நிலைகளையும் புரிந்து கொள்ளும் கூர்த்த அறிவு, மனப்பக்குவம், சுயநல மறுப்பு, தன்னைவிட தன் தலைவனுக்கு அல்லது நிர்வாகத்திற்குப் புகழ் சேர்க்கும் பெருந்தன்மை ஆகியவை அவசியம்.மற்றொரு நிகழ்ச்சி.
இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் நோய்வாய்ப்பட்டார். பக்தர்கள் சிகிச்சைக்காக அவரை சியாம்புகூருக்குக் கொண்டு சென்றனர். நோய்வாய்ப்பட்டிருந்த ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அன்னை சாரதை வந்து சமைத்துத் தந்தால் நன்றாக இருக்கும் என்றனர் பக்தர்கள்.
அந்த நேரத்திலும் ஸ்ரீராமகிருஷ்ணர் அன்னையை அழைத்துக் கட்டளையிடவில்லை; எனக்கு வந்து சேவை செய் என்று நேரடி அழைப்பும் விடுக்கவில்லை.
மாறாக, பக்தர்களிடம், "சாரதாவின் விருப்பத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அவள் நாணமே வடிவானவள். ஆண்கள் மட்டுமே இருக்கும் இடத்தில் அவள் விரும்பினால் வரட்டும்" என்றார்.
தனது குருவின்/ கணவரின் கஷ்டமான நேரத்தில் சேவை செய்வதா அல்லது தனது அசௌகரியத்தைப் பெரிதாகப் பார்ப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டம். நாணமும் அழகும் கொண்ட 32 வயதான அன்னை ஸ்ரீசாரதாதேவி பதியின் சேவை செய்ய உடனே புறப்பட்டார்.
பானிஹாட்டி நிகழ்ச்சியின்போது தன் தலைவனின் - தன் குருவின் பெருமைக்குச் சிறு குறையும் விமர்சன வடிவில் வந்துவிடக் கூடாது என்பதற்காக குருதேவரின் விருப்பத்தை அன்னை ஏற்று அவருடன் செல்லவில்லை.
சியாம்புகூர் நிகழ்ச்சியின்போது குருதேவரின் தொண்டுக்காகத் தனது நலனை விட்டுச் சேவையைத் தேர்ந்தெடுத்தார் அன்னை.
பதியின் பெருமையைப் பறைசாற்றுவதிலும் பதிக்குத் தொண்டாற்றுவதிலும் சீதையும் சாரதையும் சமமாக மிளிர்கிறார்கள்.
சுவாமி விமூர்த்தானந்தர்
25 நவம்பர், 2021
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்