RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

ஒரு நிமிட உன்னதம் - 37

06.11.22 05:12 PM By thanjavur

ஒரு நிமிட உன்னதம் - 37

ஸ்ரீராமகிருஷ்ணர் வழங்குவாரா?

​- சுவாமி விமூர்த்தானந்தர்

சில தினங்களுக்கு முன்பு நமது துறவி காசி யாத்திரை சென்றார். அங்குள்ள மூத்த துறவிகளைச் சந்தித்து அவர்களது அனுபவங்களைத் திரட்டுவதில் ஓர் அலாதி இன்பம் அவருக்கு. சுவாமி தியாகீஸ்வரானந்த புரி (கிருஷ்ணமூர்த்தி மகராஜ்) தமது ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றிக் கூறினார்:

 

அவர் அப்போது கல்லூரி மாணவர். அவருக்கு பேங்கிங் மிகவும் பிடித்த பாடம். நன்கு படித்து வங்கியில் வேலைக்காக முயன்று கொண்டிருந்தார்.

 

ஸ்ரீராமகிருஷ்ணர் பற்றி அப்போது அவருக்கு அதிகமாகத் தெரியாது.‌ ஒரு வாய்ப்பினால் அவர் சென்னை தி. நகரிலுள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்தார்.

அன்று அவருக்குச் சற்று கடினமான commercial law பரீட்சை. வழக்கம்போல் அவர் கோவிலுக்குச் சென்றார். பரீட்சை நன்றாக எழுத வேண்டும் என்று ஸ்ரீராமகிருஷ்ணரிடம் வேண்டிக் கொண்டார். கூடவே அவருக்கு ஒரு குறும்பான எண்ணம் வந்தது.

      

ஸ்ரீராமகிருஷ்ணருக்கு வங்காள மொழி தவிர வேறு மொழிகள் தெரியாது. வங்காளக் கையெழுத்தும் மெதுவாகவே வரும். படிக்காத இவர் எப்படி பரீட்சை நன்றாக எழுத எனக்கு அருள முடியும் என்று எண்ணினார்.

      

பரீட்சை எழுதினார். முடிவு வந்தது. ஆச்சரியமான ஓர் அதிசயம் அதில் இருந்தது. எந்தப் பாடத்தில் தனக்கு நிறைய மார்க் வரும் என்று எதிர்பார்த்தாரோ, அதில் குறைவாக வந்திருந்தது. எந்த பரீட்சை எழுதும் முன்பு ஸ்ரீராமகிருஷ்ணரைச் சந்தேகித்தாரோ, அதில் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றிருந்தார்.

      

இந்தச் சம்பவத்தை சுவாமிகள் கூறிவிட்டு, "ஸ்ரீராமகிருஷ்ணரைக் குறும்பாக, சந்தேகப்பட்டாலும் அருள்கிறார். Even by teasing him also, you can get his grace" என்றார். அதே சமயம் ஸ்ரீராமகிருஷ்ணர் அவரது பேங்கிங் கர்வத்தையும் களைந்தார்.

      

ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா!

சுவாமி விமூர்த்தானந்தர்

06.11.2022,

ஞாயிற்றுக்கிழமை,

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,

thanjavur