RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

ஒரு நிமிட உன்னதம் - 34

08.10.22 07:11 PM By thanjavur

ஒரு நிமிட உன்னதம் - 34

சைதன்யமா? சைத்தானா? - எது மனித சுபாவம்?
​- சுவாமி விமூர்த்தானந்தர்

இன்று நமது துறவிக்கு எதிர்பாராத ஓர் அதிர்ச்சி. நல்லவர் என்று நம்பிய ஒருவர் மோசம் செய்துவிட்டார். என்னையா ஏமாற்றினாய் என்ற எண்ணமே தனது அகங்காரத்திற்கு விழுந்த அடி என்று துறவி உணர்ந்தார்.

 

‘அந்த மனிதரை நீ சரியாக கணிக்காதது உன் குற்றம்' என்று துறவியின் மனது குத்திக் காட்டியது.

 

எல்லோரும் தெய்வத்தின் குழந்தைகள் என்ற பாரமார்த்திக உண்மையைக் கடைபிடிக்கும்போது பல அல்லல்கள், அவலங்கள் வருகின்றன; ஏமாறுகிறோம்; உறவுகள் முறிகின்றன. வாழ்க்கை கசக்கிறது.

 

அதற்காக அனைவரும் அயோக்கியர்கள், மிருகங்கள், பாவிகள் என்று நினைத்து மக்களைப் புறக்கணிப்பதா? கடவுள் பாதி; மிருகம் பாதி கலந்த கலவைதான் மனிதனா? இல்லை. அது திரை அனுபவமாக இருக்கலாம்; ஆனால் இறை அனுபவமல்ல!

 

பாரமார்த்திக சத்தியத்தின்படி, ஒவ்வோர் ஆன்மாவிலும் உயிரிலும் மனிதரிடத்திலும் தெய்வீக சக்தி குடி கொண்டிருக்கிறது. அந்தச் சக்தியை மனிதன் வெளிப்படுத்தும்போது அவனால் அளவற்ற நன்மை நிகழ்கிறது என்பது சுவாமி விவேகானந்தரின் கோட்பாடு.

 

அதே சமயம், வ்யவகாரிக சத்தியத்தின்படி அதாவது நடைமுறை உலக உண்மையின்படி, மக்களிடத்தில் பழகும் போதும், சமுதாயத்தில் வாழும் போதும் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் தங்களது தெய்வீகத்தை மறப்பதற்கான, மறைப்பதற்கான குட்டிச்சாத்தான் அல்லது குட்டிச்சாத்தான்களை ஈன்று கொண்டிருக்கும் பெரிய சாத்தான்கள் எல்லோரிடத்திலும் உள்ளனர். 

 

பேரறிவும் பேருணர்வுமான சைதன்ய நிலைதான் மனிதனின் ஆன்மீக இயல்பு. அதுவே அவனது இயற்கைச் சுபாவம் என்கிறது உபநிஷதங்கள். அந்தப் பெருநிலையிலிருந்து அவன் இறங்கும்போது சைத்தான்- பாவ புருஷன் அவனைப் பிடிக்க- பீடிக்க ஆரம்பிக்கிறான். 

மக்களிடத்தில் விழிப்புணர்வுடனும், தெய்வத்திடம் பக்தியுடனும், அதோடு நாம் உணர்வும் அறிவும் மிக்கவர்கள் என்ற சைதன்ய நிலையில் இருந்தால்தான் உலகில் மனிதன் சிறக்க முடியும்.

 

சுவாமி விவேகானந்தர் தமது ஞான யோகத்தில் The Real Man and the Apparent Man - உண்மை மனிதனும் தோன்றும் மனிதனும் என்ற அருமையான உரை நிகழ்த்தினார். 

 

‘எல்லா உயிர்களிலும் இறைவன் குடி கொண்டிருக்கிறார். அதற்காகப் புலியைக் கட்டிக் கொள்வாயா?' என்று ஸ்ரீராமகிருஷ்ணர் துறவியிடம் கேட்பதாக உணர்ந்தார். இந்தக் கேள்வி அவரது இதயத்தில் ஒலித்தபோது ஒரு பொறி தட்டியது, அட, ஆமால்ல...!

 

மனிதன் மற்றும் உலகம் பற்றிய உயர் ஆன்மீக உண்மை மற்றும் நடைமுறை உலகியல் உண்மை ஆகிய இரண்டையும் சரியாகப் புரிந்து கொண்டு நடப்பவர்களுக்கு உலகம் தனது அற்புதங்களைக் காட்ட காத்திருக்கிறது. 

 

அன்று துறவி தமது அனுபவத்தை டைரியில் இவ்வாறு எழுதினார்:

 

* All are good, not always..... as you are. எல்லோரும் நல்லவர்கள், எப்போதும் அல்ல....., உன்னைப் போல!

* When you are among people, be a pupil. மக்கள் மத்தியில் மாணவனாக இரு.

சுவாமி விமூர்த்தானந்தர்

08.10.2022,

சனிக்கிழமை,

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,

thanjavur