அந்தத் தாகம் இன்றும் இருக்கிறது!
- சுவாமி விமூர்த்தானந்தர்
நமது மடத்திற்கு பிரசன்னமான ஒரு துறவி வந்தார்.
அவரோடு உரையாடும்போது, "சுவாமிகளே, இத்தனை வருட உங்களது துறவற வாழ்க்கையில் நீங்கள் கண்ட ஓர் அனுபவ உண்மையைக் கூற முடியுமா?" என்று நம் துறவி கேட்டார்.
பெரிதாக ஒன்றுமில்லை என்று கூறிவிட்டுத் தப்பிக்க முயன்றார் வந்தவர். நமது துறவியோ பல்வேறு வகையில் அதே கேள்வியைக் கேட்டார்.
முடிவில், வந்த துறவி ஆழமான உணர்வுடன், "நான் மடத்தில் சேர்ந்த போது பெயர் புகழுக்கு மிகவும் ஆசைப்பட்டேன். என்னை எல்லோரும் பாராட்ட வேண்டும் என்ற தவிப்பு எப்போதும் எனது ஆழ்மனதில் இருந்தது" என்றார்.
"இப்போது அதைக் கடந்து விட்டீர்களா சுவாமிஜி?" - நம் துறவி.
"இல்லை. இப்போதும் அந்தத் தாகம் இருக்கிறது"
".....!!!!"
"ஆம், இப்போதும் அந்தத் தாகம் இருக்கிறது. 25-களில் எனது ஏக்கம் மனிதர்கள் என்னைப் பாராட்ட வேண்டும் என்றிருந்தது. ஆனால் இன்று நான் செய்யும் ஒவ்வொரு செயலும் ஏன், ஒவ்வோர் எண்ணமும் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு ஏற்றவையாக இருக்கிறதா? இருக்குமா? அவர் என்னைப் பாராட்டுவாரா? அல்லது அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறேனா என்ற ஏக்கம், கேள்வி, யோசனை, தவிப்பு போன்றவைதான் எனது நோக்கமாக உள்ளன".
இவ்வாறு கூறிவிட்டு அவர் மேலும் சொல்லாமல் நிறுத்திக் கொண்டார். நம் துறவி அவர் கூறிய உண்மையின் மீது தியானித்தார்.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அந்தத் துறவியைப் பாராட்ட வேண்டும் என்றால், ஸ்ரீராமகிருஷ்ணரின் சாந்நித்தியத்தில் அவர் எப்போதும் இருக்க வேண்டும் அல்லவா? தெய்வ சாந்நித்தியத்தில் நிற்பதே மாபெரும் தவம் அல்லவா? அவரது தவிப்பு, கேள்வி இவை எல்லாம்கூட பக்தியில் உதித்தவைதானே!
ஒருவருடைய இயல்பு மாறாமல்கூட போகலாம். ஆனால் அதனை பக்தியின் மூலமாக மடைமாற்றம் செய்ய முடியும் என்று நம் துறவி சிந்தித்தார்.
அந்தத் துறவியை நாமும் வணங்குவோம்.
சுவாமி விமூர்த்தானந்தர்
29.09.2022,
வியாழக்கிழமை,
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,