பெண்கள் வாழை இலைகள்
- சுவாமி விமூர்த்தானந்தர்
சென்ற வாரம் நமது துறவி ஒரு பெண்கள் கல்லூரிக்குச் சென்று உரையாற்றினார். அப்போது அவர் பெண்கள் இருக்க வேண்டிய நிலையைப் பற்றிக் கூறினார்.
இன்றைய காலகட்டத்தில் வாலிப வயதினரைக் குறி வைத்து உணர்ச்சிகளைத் தூண்டும் சமூக விரோத சக்திகள் ஒரு புறம். இந்துப் பெண்களைக் குறி வைத்து மதமாற்றம் செய்வதற்காக லவ் படையினர் திட்டமிட்டு அலைவது மறுபுறம்.
இந்தப் பின்னணியில் இளம் பெண்கள் வீட்டிலும் வெளியிலும் இருக்க வேண்டிய நிலையினை ஓர் உதாரணத்தின் மூலம் துறவி விளக்கினார்.
அது பெண்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
துறவி கூறினார்: இளம் பெண்களே, நீங்கள் வாழையிலை போன்றவர்கள். மரத்தில் இலைகள் இருந்தால் மங்களமாக இருக்கும். நன்கு வளர்ந்ததும் அதனைத் திருவிழாக்களுக்கு வாயிலில் கட்டி அழகு பார்ப்பார்கள். அந்த இலையில் மக்கள் அன்னம் பாலிப்பார்கள்.
மாறாக, அவசர அவசரமாக மரத்திலிருந்து இலை தானே விடுபட்டு விடக் கூடாது. திருட்டுத்தனமாக யார் யாரோ உங்களைப் பறித்துவிட நீங்கள் அனுமதிக்கக் கூடாது. மரமான தாய் தந்தையரிடமிருந்து ஓடிப் போய் எவனெவன் கையிலோ சிக்கிச் சில காலத்திற்குப் பிறகு எச்சில் இலையாக மாறி, குப்பையாகக் காற்றில் பறக்கும் துர்பாக்கிய நிலை நம் சகோதரிகளுக்கு வந்துவிடக் கூடாது. அதனால் சகோதரிகளே, தைரியமாகவும் மங்களகரமாகவும் இருங்கள்.
பெற்றோருக்குப் பெருமை சேர்க்கும் மகளாக இருங்கள். பேராசிரியர்களுக்குப் புகழ் சேர்க்கும் மாணவிகளாகுங்கள். நாட்டிற்கு நல்ல வலுவான பெண்மணிகளாகத் திகழுங்கள்.
இந்தக் கருத்துகளைக் கூறிவிட்டு மாணவிகளுக்காகத் துறவி பிரார்த்தனை செய்தார். அப்போது பல இளம்பெண்களின் இதயம் கனத்தன; சிலர் விம்மினர்; சிலர் உறுதி பூண்டார்கள்.
ஜெய் ஸ்ரீ சாரதா தேவிக்கு ஜெய்.
சுவாமி விமூர்த்தானந்தர்
19.09.2022,
திங்கட்கிழமை,
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,