குருவி = துறவி
- சுவாமி விமூர்த்தானந்தர்
ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சேவைகள் பற்றி அறியாத ஓர் இளைஞரைத் துறவி இன்று சந்தித்தார்.
கஷ்டமான கொரானா காலத்தில் ஒரு கோடி ரூபாய் திரட்டி சேவை செய்ததைத் துறவி அவரிடம் கூறிக் கொண்டிருந்தார். நல்ல காரியத்திற்குப் பக்தர்களும் நல்ல நிறுவனங்களும் நிதியுதவி செய்வது வாலிபனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
"சுவாமி, இவ்வளவு பணம் வரும்போது அவற்றை மிஸ்யூஸ் செய்ய உங்கள் மனதில் சஞ்சலம் வராதா?" என்று வாலிப முறுக்கில் கேட்டார்.
மை டியர் பாய், அங்கே பார், அந்த மைனா குருவியின் வாயில் என்ன இருக்கிறது?
ஒரு புழுவை வாயில் வைத்துக் கொண்டு அது ஏன் தின்னவில்லை?
சுவையான அந்தப் 'புழு உணவை' அது தன் குஞ்சுகளுக்குத் தர காத்திருக்கிறது. தான் உண்பதை விட குஞ்சுகளுக்குத் தருவதில்தான் அதற்கு அலாதி சுகம்.
பணத்தைத் திரட்டிக் கையாள்வதற்கும் மைனாவுக்கும் என்ன சம்பந்தம்?
துறவிகளாகிய எங்களுக்குப் பணம் பொருள் புகழ் மக்கள்தொடர்பு அந்தஸ்து மரியாதை வசதிகள் எல்லாம் குருதேவரின் அருளால் கிடைக்கின்றன. அந்த வாய்ப்புகளில் சிக்கிவிடாமல், அவற்றைக் கொண்டு ஸ்ரீராமகிருஷ்ண ஆண்டவருக்குச் சேவை செய்வதில்தான் எங்களது வாழ்க்கையின் நிறைவும் மகிழ்ச்சியும் இருக்கிறது.
ஒரு குருவி தான் அனுபவிப்பதைவிடத் தன் குஞ்சுகளுக்குத் தருவதில் தியாக சுகத்தை அனுபவிக்கிறது. ஒரு குருவிக்கு இருக்கும் தியாகபுத்தி துறவிக்கு இருக்காதா தம்பி?
வாலிபன் எழுந்தான். துறவியை வணங்கினான்.
குரு + வி - குருவி = துற + வி - துறவி. விடவேண்டியதை விட்டால் துறப்பவன் குருவாகிறானோ!
சுவாமி விமூர்த்தானந்தர்
14.07.2022,
வியாழக்கிழமை,
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,