இறைநாம அபராதம் தவிர்ப்போம்!
- சுவாமி விமூர்த்தானந்தர்
இன்று துறவி இறைவனின் திருநாமம் பற்றி உரையாற்றினார். செய்த பாவத்திற்கு அல்லது நடந்துவிட்ட அவலத்திற்குப் பிராயச்சித்தமாக பகவானின் திருநாமத்தை ஜபிக்க வேண்டும் என்றார் துறவி.
"ஒருமுறை இறைவனின் திருநாமத்தை ஆழ்ந்த பக்தியுடன் கூறினாலே அனைத்துப் பாவங்களும் நீங்கிவிடும். ஆனால் நீ மூன்று முறை ஜபிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறாயே?" என்று ஜெகந்நாத பண்டிதரை அவரது தாய் கடிந்து கொண்டார். தன் மகனுக்கு இறைநாமத்தில் போதிய விசுவாசம் இன்னும் வரவில்லையே என்றும் வருந்தினார். ஸ்ரீ போதேந்திராள் வாழ்வில் நடந்த இந்த உன்னத சம்பவத்தைத் துறவி விளக்கினார்.
தவமியற்றிய காலத்தில் சுவாமி விவேகானந்தர் தங்கம் போன்று ஒளிர்ந்த மந்திர அக்ஷரங்களைக் கண்களாலேயே தரிசித்தார். இது போன்ற பல கருத்துகளைத் துறவி கூறக் கேட்டார் வெங்கடேசன் என்ற பக்தர்.
"மகராஜ், ஒவ்வோர் எழுத்துக்கும், ஒவ்வோர் அட்சரத்திற்குள்ளும் அபரிமிதமான சக்தி உண்டு என்று இன்று நீங்கள் கூறியது என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. இனி ஜபம் செய்யும்போது மட்டுமல்ல, மற்றவர்களுடன் வார்த்தைகளைப் பயன்படுத்துவதிலும் நான் கூடுதல் கவனம் செலுத்துவேன்" என்றார் வெங்கடேசன்.
கோவிலில் விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் அவர் அப்போது நின்றிருந்தார். துறவி விளக்கியதையும் வெங்கடேசன் கூறியதையும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த கிருத்திகா சட்டென்று, "நீங்க காலைத் தள்ளி வையுங்கப்பா. இது நாம அபராதம் ஆகிவிடும் இல்லியா?" என்று கேட்டாள்.
ஸ்ரீராமகிருஷ்ண மடம் என எழுதப்பட்டிருந்த ஜமுக்காளத்தின் மீது, அந்த அக்ஷரங்களின் மீது தன் தந்தையின் கால் இருந்ததை அவள் சுட்டிக் காட்டினாள். வெங்கடேசன் உடனே அந்த எழுத்துகளைத் தொட்டு வணங்கினார்.
இறைநாமம் பற்றிய சாராம்சத்தை இந்தச் சிறு பெண் எப்படி விரைவில் கிரகித்துக் கொண்டாள் என்று துறவி அந்த உன்னத தருணத்தை உணர்ந்தார்; வியந்தார்.
சுவாமி விமூர்த்தானந்தர்
06.07.2022,
புதன்கிழமை,
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,