RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

ஒரு நிமிட உன்னதம் - 26

28.05.22 02:09 PM By thanjavur

ஒரு நிமிட உன்னதம் - 26

ஐந்தறிவு உதவுகிறது; ஆறறிவு உரைக்கிறது!

நாம் சற்றும் எதிர்பாராத விதத்தில் குழந்தைகளின் பதில்கள் சில சமயங்களில் அமையும் .


பெரியவர்கள் பேசியதை அவர்கள் பேசுவார்கள். வாழ்க்கையை அனுபவித்தவர்களாகப் பேசுவார்கள். முன் ஜென்மத்து அனுபவ அறிவோ என்று வியக்க வைக்கும்படி அவர்களது பதில்கள் சில சமயம் அமையும்.


அது போன்ற ஓர் அனுபவம் துறவிக்கு இன்று கிடைத்தது. குழந்தைகளுக்கான புத்துணர்வு முகாமில் துறவி ஒரு வீடியோ பதிவைக் காண்பித்தார்.


விபத்தில் அடிபட்டு நாய் ஒன்று எழ முடியாமல் தண்டவாளத்தின் நடுவில் கிடக்கிறது. அதனது 'நண்பன் நாய்' அடிபட்ட நாயைத் தூக்கிச் செல்ல முடியாமல் தவிக்கிறது. திணறுகிறது.

                                                                                                                                

முடிவில், அதனுடனேயே இருந்து வாழ்வா, சாவா என்று பார்த்துவிடத் தீர்மானிக்கிறது. பல ரயில்கள் அந்தப் பாதையில் செல்லும் போதும் அடிபட்ட நாய் எழ முடியாமல் பெட்டிகளுக்கு நடுவில் கிடக்கிறது. நண்பனை விட்டுச் செல்ல மனமில்லாமல் நண்பன் நாயும் குனிந்து ஒவ்வொரு முறையும் உயிர் தப்பிக்கிறது. 


முடிவில், யாரோ சிலர் இரண்டு நாய்களையும் காப்பாற்றிவிட்டனர். இந்தச் சம்பவத்திலிருந்து என்ன கற்றீர்கள் என்று துறவி குழந்தைகளிடம் கேட்டார்.

நண்பனின் தகுதி, உயிரே போனாலும் நட்பை விடாதே போன்றவையெல்லாம் நல்ல பதில்களாக வந்தன.

ஆனால் 9 வயது யாழ்நிலா என்ற சிறுமி சட்டென்று ஒன்றைச் சொல்லி நம் சிந்தனைக் கதவைத் திறந்தாள்.


அவள் என்னதான் அப்படி சொன்னாள்?

                                                                                                 

"நாய்களுக்கு ஐந்தறிவுதான் இருக்கு. அதனால அது ரொம்ப யோசிச்சு குழப்பிக்கல்ல. ஆனா இதே நிலையில மனுஷன் இருந்தா தன்னோட ஆறாவது அறிவால அதிகமா யோசிப்பான். தான் செய்றது நல்லதா, கெட்டதா? அதனால தனக்குப் புண்ணியம் கெடைக்குமான்னு யோசிச்சு யோசிச்சு... ஒன்னுமே செய்யாம போயிடுவான்" என்றாளே பார்க்கலாம்!

                       

ஆம், விலங்குகள் உதவிடத் தீர்மானிக்கிறது; மனிதன் சிந்தனை செய்வதில் மட்டுமே சுகம் காண்கிறான். இதுவும் வாழ்க்கை பற்றிய ஓர் உண்மைதானே!

சுவாமி விமூர்த்தானந்தர்

25.05.2022,

வெள்ளிக்கிழமை

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,

thanjavur