நமக்குள்தான் எத்தனை 'கலாம்'கள்!
நமக்குள்தான் எத்தனை 'கலாம்'கள்!
டாக்டர் கலைமகள், நோயாளிகளின் இதயத்துடிப்பு மட்டுமல்லாமல், அவர்களின் உயிரும் துடிப்புடன் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்.
கலைமகள் நம் துறவியை இன்று சந்தித்தார். அரசு மருத்துவமனையில் பல இளம் தாய்மார்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தாய்ப்பாலை அதிகம் சுரக்கச் செய்வதற்காக நீலம் சம்பா, குடவாழை, பூங்கார் போன்ற நெல் மணிகளின் கஞ்சியை அவர்களுக்கு வழங்க டாக்டர் கலைமகள் முயற்சித்தார். ஆனால் அரசு நிர்வாகம் அதற்கு அனுமதி தரவில்லை.
கலைமகளுக்கு இதில் வருத்தம். துறவியிடம் கூறி வருந்தினார். மருத்துவமனையில் யாரோ வந்து நோயாளிகளுக்கு உணவு தருவதில் சிக்கல்கள் உண்டு. அதனால் அவர்கள் அனுமதி மறுத்து இருக்கலாம் என்று துறவி விளக்கினார்.
பிறகு துறவி அவரிடம், "டாக்டர், உங்களது சேவையின் நோக்கம் நோயாளிகளுக்குக் கஞ்சி தருவதா? கருணையுடன் கவனிப்பு தருவதா? மருத்துவம் தருவதா அல்லது உங்கள் பரிவை, அன்பைப் பலவீனர்களுக்குத் தருவதா?" என்று கேட்டார்.
மருத்துவர் சிந்தித்தார். ஆஹா, மக்களுக்குத் தரக்கூடியதில் என்னிடம் பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன! உணவு தர முடியாவிட்டால் என்ன?
நோயாளிகளுக்கு ஆரோக்கியம் பற்றிக் கூறலாம். அவர்களது வீணான பயத்தைப் போக்கலாம். நல்ல வாழ்வியல் நெறிமுறைகளைப் புரிய வைக்கலாம்....
இவ்வளவு 'கலாம்'கள் நம்மிடம் இருக்கும்போது கஞ்சி தர முடியாததற்கு நாம் ஏன் அஞ்சி அமர வேண்டும் என்று துறவி கேட்டதும் கலைமகள் அலைமகளாகப் புறப்பட்டார்.
அடுத்த நாள் தொலைபேசி மூலம் அவர் கூறினார்: "சுவாமிஜி, உணவூட்டுவது சுகம்தான். உணர்வூட்டுவது அதைவிட ஆனந்தமாக உள்ளது. நோயாளிகளுக்கும் அதிக பயன் கிடைக்கிறது".
சுவாமி விமூர்த்தானந்தர்
10.05.2022,
செவ்வாய்க்கிழமை,
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,