Torture - Threatening - Training -
இதில் உங்களுக்கு எது பிடிக்கும்?
மேனேஜர் சொன்னால்தான் இந்த சேகர் பையன் எதையும் செய்றான். என்னை அவன் மதிப்பதே இல்லை. திருட்டுப் பயல்.
இது குமாஸ்தா கூறுவது.
சேகர் ஒரு சோம்பேறி; மிரட்டிச் சொன்னாதான் அவன் செய்வான். அவனைக் கண்டாலே எனக்குக் கொதிக்கும். இந்தச் சின்ன வயசிலேயே ஆளப் பார்த்து வேலை செய்றான். இது துணை மேலாளர் கூறியது.
சேகர் அந்த மாலில் பியூன். பதினேழு வயது சிறுவ-வாலிபன். உடலில் திமிரும், மனதில் குழப்பங்களும் நிறைந்தவன். அவனைப் புரிந்து கொள்ளாமல் சிலர் அவனிடம் அதிகாரம் செய்வார்கள். சிலர் ஆணவத்துடன் கட்டளையிடுவர்.
மாலின் மேலாளர் சொல்வதை மட்டும் சேகர் எவ்வாறு கேட்கிறான்? மேனேஜர் என்ற பதவி காரணமா? அவன் அவரை காக்கா பிடிக்கிறானா?
அந்த மேலாளர் இன்று துறவியிடம் பேசிக் கொண்டிருந்தார். "சார், நீங்கள் சேகரை வழிக்குக் கொண்டு வர முடிகிறதா?"
"சுவாமிஜி, அதிகாரமாகச் சொல்வது அவனுக்கு torture ஆகிறது. மிரட்டிச் சொல்வதை அவன் threatening ஆக நினைக்கிறான்."
"பிறகு உங்கள் பாணி என்ன?"
"பாணி அல்ல, சுவாமி, பயிற்சி. அவனிடம் அன்போடு பேசி, கண்டிப்போடு வழிநடத்துவதை நான் எனக்கான TRAINING என்று நினைக்கிறேன். நானும் அவனிடம் கடிந்து கொள்வேன். ஆனால் அவனுக்கு எப்படி சொன்னால் புரியும்? எதை அவனுக்குப் புரிய வைக்க வேண்டும்? என்பதெல்லாம் எனக்கான டிரைனிங் என்று நினைக்கிறேன்."
"அருமை சார்."
அந்த மால் மேனேஜரிடம் பேசி முடித்த பிறகு துறவி சிந்தித்தார். சுவாமி விவேகானந்தர் சொல்வது போல், இந்த உலகமே ஒரு பயிற்சிக் கூடம். ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் பயிற்சி பெறுகிறோம். தெரிந்தோ, தெரியாமலோ ஒவ்வொருவருக்கும் நாமும் பயிற்சி வழங்குகிறோம். தன்னோடு பணிபுரிபவர்களிடம் அன்பைச் செலுத்தி, வேண்டிய அளவிற்குக் கண்டிப்பையும் காட்டி அவர்களை நல்ல மனிதராக, பணியாளராக மாற்றுவது பாராட்டத்தக்கது. அதனை இந்த மேலாளர் கவனமாகவும் பொறுப்புடனும் செய்கிறார்.
அன்பர்களே Torture - Threatening - Training. இந்த மூன்றில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறது?
சுவாமி விமூர்த்தானந்தர்
06.05.2022,
வெள்ளிக்கிழமை,
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,