துறவிக்கு இன்று பல்வேறு பணிகள் அழுத்தியதால் மனதில் சோம்பல் வாட்டியது.
நல்ல செயல்கள் செய்வதற்கு இவ்வளவு தடைகளா? மக்களுக்குத் தேவைப்படும் தொண்டுகள் என்று தெரிந்திருந்தும் தங்களது பங்களிப்பைத் தராமல் இருக்கும் சக ஊழியர்கள் எத்தனையோ பேர்!
சேவையின் சுகம் ஏன் சிலருக்குப் புரிவதில்லை? தொண்டு செய்பவர்களைப் பற்றி விமர்சனம், கேலிப் பேச்சு இதெல்லாம் காலம் காலமாக ஏன் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன?
இந்த எண்ணங்களுடன் துறவி நடந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறு தாவரம் அவரைப் பார்த்து சிரித்தது. துறவி அதைக் கண்டார்.
செடி கொடிகள் வளர முடியாதபடிக்கு பூமியைத் திடப்படுத்தி அதன் மீது கற்களை அடுக்கி மனிதன் நடப்பதற்குப் பாதை செய்யப்பட்டிருக்கிறது. கற்களுக்கு இடையே உள்ள இடுக்குகளில் ஆச்சரியமாக அந்தச் சிறு தாவரம் துளிர்த்து வளர்கிறது.
அதன் ஆயுட்காலமோ குறைவு. யாரும் அதன் மீது நடக்கலாம். முக்கியமாக அந்தத் தாவரத்தை வளரவிடாமல் தடுக்கும் பெரும் மண் சுமை, அதன் மீது பலமான கற்களின் சுமை அதை அழுத்துகின்றன.
"இவ்வளவு சுமைகளுக்கு அடியில் இருந்தபடி எப்படித்தான் நீ சிரிக்கிறாய் தாவரமே?" துறவி கேட்டார்.
"துறவியே, என்னை அழுத்தும் விஷயங்களை நான் கவனிக்கிறேன், ஆனால் பொருட்படுத்துவதில்லை. பிரச்னைகள் என்னை அழுத்தினாலும் அந்த அழுத்தத்தை நான் மன அழுத்தமாக்கிக் கொள்வதில்லை. என் கவனம் என் வளர்ச்சியில்தான் உள்ளது. போராடு, போராடு, இயற்கையாக வரும் இன்னல்களை எதிர்த்து நில்" என்றது. துறவியின் மனச்சோம்பல் நீங்கியது.
சுவாமி விமூர்த்தானந்தர்
04, பிப்ரவரி 2021
வெள்ளிக்கிழமை
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்