குட்டி நிவேதிதா தேவி போல் இருப்பாள். ஆறு வயது. ஒருமுறை மடத்தில் நிவேதிதா மற்ற சிறுமி, சிறுவர்களுடன் சேர்ந்து பஜனை பாடினாள்.
மற்றவர்கள் எல்லாம் பாடல் வரிகளைப் புத்தகத்திலிருந்து அவ்வப்போது பார்த்துப் பாடினார்கள். ஆனால் நிவேதிதா மட்டும் 10 பாடல்களையும் ஒருமுறைகூட புத்தகத்தைப் பார்க்காமல் உற்சாகமாகப் பாடினாள். அவள் பாடியதில்தான் அனைவரும் சொக்கினார்கள்.
துறவி அவளிடம் கேட்டார்: "நிவி, நீ புத்தகத்தைப் பாக்கவே இல்லையே, அது எப்டி மா?"
"சுவாமிஜி, அவங்களுக்குப் படிக்கத் தெரியும். அதான் பாத்துப் பாடினாங்க. எனக்குப் படிக்கத் தெரியாதே. நான்தான் ஸ்கூலுக்கே போறதில்லையே....! அதனால எல்லாத்தையும் மனப்பாடம் பண்ணி பாக்காமயே பாடிட்டேன்" என்று சிரித்தாளே பார்க்கலாம். அது வேத ரிஷியின் புன்சிரிப்பின் சாயல்!
நமது பாரம்பரியக் கல்வி மனப்பாடம் -மக்கப் செய்வதல்ல- செய்ய வைக்கிறது. மனதைப் பாடம் செய்ய வைக்கிறது அதாவது பாடம்- பக்குவப்படுத்துதல் என்று அர்த்தம். கற்றதை மனனம் செய்வதற்கு மனப்பாடம் அவசியம். நமது முன்னோர் எதைக் கற்றாலும் மனதையும் மூளையையும் பயன்படுத்தினார்கள்.
ஆனால் இன்று நமது படிப்பு மூளையைப் பயன்படுத்த மட்டுமே கற்றுத் தருகிறது. மெக்காலே வழி படிப்பு நம் மாணவ மாணவிகளின் மனங்களில் படிப்பு என்ற பெயரில் மிக அதிகமான, வாழ்க்கைக்குப் பயன்படாத விவரங்களை எல்லாம் திணித்து மனதையே வேஸ்டாக்கி விடுகிறது. அதனால்தான் இப்போதைய பிள்ளைகளுக்கு மூன்று வயதிலேயே வாழ்வதில் Boredom - போரடிக்கத் தொடங்கிவிடுகிறது.
இன்று நிவேதிதா பள்ளிக்குச் சென்று படிக்காமலேயே பலவிதமான நல்ல விஷயங்களைக் கற்று வருகிறாள். சமஸ்கிருதமும் தமிழும் சரளமாகப் பேச வரும் அவளுக்கு.
சுவாமி விமூர்த்தானந்தர்
23, ஜனவரி 2021
ஞாயிற்றுக்கிழமை
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்