30 வருடங்கள் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் ஒரு தம்பதியினரை நேற்று அவர்களது திருமண தினத்தில் சந்திக்க முடிந்தது.
"உங்கள் நிம்மதி மற்றும் மகிழ்ச்சியின் ரகசியம் என்னம்மா?" என்று அந்தப் பெண்ணிடம் கேட்டோம். தேங்கி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் பெயரைக் கொண்ட - நர்மதா - என்ற அந்த நங்கை கூறினார்:
"என் கணவரை நான் நம்புகிறேன். கொரோனா தொற்று காலத்திலும்கூட அவர் பல்வேறு சமுதாயப் பணிகளில் ஈடுபடுகிறார். என்னால் அந்தத் தொண்டுகளை எல்லாம் செய்ய இயலாது. ஆனால் நற்பணிகளைச் செய்யும் அவரை நான் நன்கு கவனித்துக் கொள்ள முடியும் அல்லவா? மேலும் யாரிடமும் நான் அதிகம் எதிர்பார்ப்பதில்லை; அதனால் ஏமாற்றமும் இல்லை என்று தோன்றுகிறது."
இவ்வாறெல்லாம் கூறிவிட்டு முடிவில் தனது தாய்மொழியான சௌராஷ்ட்ராவில் அந்தத் தாய் ....."புஜ்ஜய்.... அது போதும்" என்றாரே பார்க்கலாம்!
இதைக் கூறியபோது அவரது கண்ணில் ஒரு துளி காவேரி. "என் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் எனக்குக் கிடைத்தது, கடவுளின் அருள் என்று நம்புகிறேன்" என்று அந்தக் கணவரும் கூறினார்.
அருகில் இருந்த துறவி புரிந்துகொண்டார்: "திருப்தியைத் தவிர வேறு செல்வமில்லை; போதுமென்ற மனதைப் போன்ற பொக்கிஷம் எதுவுமில்லை". அன்னை ஸ்ரீசாரதாதேவி கூறும் இந்தப் பொன்மொழிக்கேற்ப வாழும் ஒருவரைக் கண்டதில் மகிழ்ச்சி. குடும்பத்தினரை அரவணைத்துச் செல்லும் பாரதப் பெண்மையின் ஓர் அம்சம் இது. அமைதியாகவே இருந்து அனைவரையும் ஆளும் திறன் இது.
சுவாமி விமூர்த்தானந்தர்
22, ஜனவரி 2021
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்