நல்லா இருக்கீங்களா?
நல்லா இருக்கீங்களா?
இந்தக் கேள்விக்கு இன்றைய பொதுவான தமிழன் சூப்பராக இருக்கிறேன் என்பான்.
ஆனால் இந்தக் கேள்விக்கு ஒரு superlative ஆன பதில் உண்டு என்று துறவி இன்று காட்டினார்.
இந்த நலம் விசாரிப்புக்கான எந்தப் பதிலும் அது நம் நல்ல நிலைமைக்கும், நல்லது அல்லாத பொல்லா நிலைமைக்கும் நாம் மட்டுமே பொறுப்பு என்ற பித்துகுளித்தனத்தில் பதில் வரும்.
துறவியிடம் நான் இதே கேள்வியைக் கேட்டேன். அவர் உடனே, "பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் என்னை நன்றாக வைத்துள்ளார்" என்று சந்தோஷமாகக் கூறினார். பொதுவாக சாதுக்கள் ஓம் நமசிவாய அல்லது ஜெய் ஸ்ரீ ராம் என்று மட்டும் பதிலளிப்பார்கள்.
என் சந்தேகத்திற்கு அவர் தெளிவைத் தந்தார்:
"நாம் நம் வாழ்க்கையின் முழு பொறுப்பையும் இறைவனிடம் ஒப்படைப்பதற்காகவே ஆன்மீக வாழ்க்கையை மேற்கொள்கிறோம். ஆண்டவரிடம் நம்மை நாம் முழுவதுமாக சரணாகதி அடைந்து விட்டோமா அல்லது அவர் நம் பொறுப்பை ஏற்றுக்கொண்டு விட்டாரா என்பது கேள்விக்குறி. இருந்தாலும், எனக்கு நானே அடிக்கடி நினைவூட்டிக் கொள்ளவே குருதேவர் என்னை நன்றாக வைத்திருக்கிறார் என்கிறேன்.
"நான் எப்போதும் நன்றாக இருப்பதற்குக் காரணம், அவரது பூரண அருள். அந்த அருளின் பாதுகாப்பு அடியேனுக்கு எப்போதும் அவசியம் என்பதற்காகவே அவ்வாறு மனப்பூர்வமாகக் கூறி வருகிறேன்.
"அடுத்து, என்னை நன்றாக வைத்திருப்பது ஸ்ரீராமகிருஷ்ணரின் பொறுப்பு என்பதையும் நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். அதுவே விரைவில் 100% உண்மையாகிவிடும் என்றும் நம்புகிறேன்."
துறவியின் விசுவாசத்தைக் கண்டு நான், அட ஆமால்ல என்று வியந்தேன். வார்த்தைகள்தானே வாழ்க்கையை அமைக்கிறது.
துறவி மேற்கூறியவாறு கூறுவதைக் கேட்டு அவரது குருகூட இப்போதெல்லாம் அவரிடம், "என்ன மகனே, குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் உன்னை நன்றாக வைத்திருக்கிறாரா?" என்றுதான் நலம் விசாரிக்கிறாராம்.
திருமூலரும் 'என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' (திருமந்திரம் 81) என்றுதானே இறைவனிடம் தன் பொறுப்பை ஒப்படைத்தார்.
அடுத்த முறை how are you? என்று யாராவது கேட்டால் உங்கள் பதில் My God is keeping me better என்று கூறிப் பாருங்கள். நாக்கு சுத்தமாகும். நலம் பல விளையும்.
சுவாமி விமூர்த்தானந்தர்
26.04.2022,
செவ்வாய்க்கிழமை,
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,