உயிரிழந்தவர்கள் உங்களுக்கு உதவ முடியுமா?
'எங்கள் குடும்பவிளக்கு அணைந்துவிட்டது. என் மாமனார் என் தந்தையை விட மேலானவர். சிரமப்படுபவர்களுக்கு எல்லா வகையிலும் அவர் உதவுவார். எனக்குக் கணவர் சரியாக அமையவில்லை. மொத்த குடும்பப் பொறுப்பு, சொத்துக்கள், சொந்த பந்தங்கள், என் மகனை வளர்த்துப் பெரியவனாக்குவது என எல்லாவற்றையும் என் மாமனார்தான் தாங்கி வந்தார். அவர் போன வாரம் திடீரென இறந்துவிட்டார்.'
இவ்வாறு அந்தப் பக்தை துறவியிடம் கூறி அழுதாள். நாம் உயிருக்கு உயிராக நேசிப்பவர்கள் திடீரென்று நம்மை விட்டுப் போவது ஒரு புதிர்தான்.
மரணமே, நீ எங்களுக்கு எப்போதும் இழப்பினைத்தான் கொண்டு வருவாயா?
நாம் நம் உறவினரை நேசித்தது அவரது உடலையா? மனதையா? சொத்தினையா? அவர் தந்த பாதுகாப்பினையா? போன்ற கேள்விக்கு நமது பதில் ஆழமாக இருந்தால் நமது துக்கம் விரைவில் மறையும்.
பொதுவாக, அன்பிற்குரியவர்களை உயிருக்கு உயிராக நேசித்திருந்தால் அதிக கஷ்டமும் நஷ்டமும் ஒருவர் உணர்வதில்லை. ஏனென்றால் அவர்கள் ஆண்டவனிடம் சென்றுவிட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கை பிறக்கிறது.
உயிரைக் கொடுத்து நேசித்த ஒருவர் அகால மரணத்தால் உடலை விட்டு விடுகிறார். அந்த ஜீவன் அடுத்த பிறவியில் அதே குடும்பத்தில் ஏதோ ஒரு வகையில் சுற்றிச் சுற்றி வருவதைப் பெரியோர்கள் கவனித்துள்ளார்கள்.
உடலில் உயிர் இருந்து செய்ய முடியாத காரியங்களை உடலை இழந்து விட்ட பிறகு அந்த அன்பான உயிர் செய்கிறது.
அப்பா இருந்தவரை தறுதலையாகச் சுற்றிய மகன் திடீரென்று பொறுப்பு மிக்கவனாக மாறுவான். பயம் மிக்க மனைவி பெண் சிங்கமாக மாறுவார். மறைந்துவிட்ட உயிர் தன் சொந்த பந்தங்களுக்கு உறவினர்களின் பரிவு மூலம் காட்டும். மறைந்த உயிரின் சக்தி குடும்பத்தில் கூடுதல் பொறுப்பாக வரும். தைரியமாக மிளிரும்.
ஆதலால் அன்பானவர்களின் உயிரை நேசிப்போம். அப்போது நமது உயிர்சக்தி அதாவது ஆன்ம சக்தி வெளிப்படும்.
நமது சிற்றுயிர் பேருயிராக மலர அது வழிவகுக்கும்.
சுவாமி விமூர்த்தானந்தர்
26.04.2022,
செவ்வாய்க்கிழமை,
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,