ஒரு நிமிட உன்னதம் - 21

18.04.22 11:55 AM - By thanjavur

ஒரு நிமிட உன்னதம் - 21

நம் தேவைகளுக்கு யாரிடம் செல்வது?

        

♦ கடவுளிடம் நாம் பிச்சை கேட்பது நமக்கு இழுக்கு!

♦ ‌கடவுளிடம் நீ எதையாவது கேட்டுக்கொண்டே இருந்தால் அவரது பரிவுமிக்கப் பொறுப்பினை நீ நம்பவில்லை என்று அர்த்தம்.

♦ அருளைக் கேட்காமல், பொருளைக் கேட்டு நீ  கடவுளை அவமதிக்கிறாய்.

♦ பின் நமது விருப்பங்களையும் தேவைகளையும் யாரிடம் போய்க் கேட்பது? யார் நம்மைப் புரிந்து கொள்வார்கள்?

♦ ‌நாம் சொல்லித்தானா கடவுளுக்கு நம் தேவைகள் தெரியும்?

♦ ‌சரி, கடவுளிடம் கேட்காவிட்டால் வேறு யாராவது ஒருவரிடம் கேட்டுத்தானே ஆக வேண்டும்? கையேந்த வேண்டிய நிலை வந்தால் அதைக் கடவுளிடமே ஏந்தலாம்!

♦ நாமாக எதையும் கேட்காமல் ஆண்டவனாகவே நமக்குத் தரும்படி நம்மால் இருக்க அல்லது நடந்து கொள்ள முடியுமா?

♦ ‌ஒரு தடவை இறைவனிடம் சொல்லிவிட்டால் போதும். பிறகு அதை அவர் பார்த்துக் கொள்வார்.

♦ ‌'வேண்டத்தக்கது அறிவோய் நீ...' என்றல்லவா மணிவாசகர் பாடினார்.

♦ அந்த உயர்நிலை எனக்கு வாய்க்கவில்லையே?

♦ ‌நமக்கு என்ன வேண்டும்? எப்போது தர வேண்டும்? எதைத் தர வேண்டும் என்பதெல்லாம் கடவுளுக்கு நன்றாகவே தெரியும்.

        

இவ்வாறு அந்த சத்சங்கத்தில் கலந்துகொண்ட பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டார்கள்.

எல்லாவற்றையும் கேட்டு விட்டு துறவி கூறினார்:


"சக்ரவர்த்தியிடம் சுண்டைக்காயும் கருவேப்பிலையும் கேட்பவன் அறிவிலி" என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.


அதே சமயம், இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். கொள்ளையடிப்பதாக இருந்தால், குடிசையில் அடித்து என்ன பயன்? அரண்மனையில் அல்லவா கொள்ளையடிக்க வேண்டும்!

இதைக் கூறிவிட்டு துறவி படிக்காசுப்புலவர் பாடியதைக் கூறினார்:

  

"வேல்கொடுத்தாய் திருச்செந்தூரர்க்கு அம்மியின் மீது வைக்கக் 
கால்கொடுத்தாய் நின்மணவாளனுக்கு கவுணியர்க்குப் 
பால்கொடுத்தாய் மதவேளுக்கு மூவர்பயப்படச் செங்
கோல் கொடுத்தாய் அம்மையே எனக்கேதும் கொடுத்திலையே!"

  

பொருள்: தாயே பராசக்தி! கந்தனுக்கு வேல் கொடுத்தாய்; உனக்கு மெட்டி அணிவிக்க சிவபெருமானுக்குப் பாதம் தந்தாய்; சம்பந்தருக்குப் பால் தந்தாய்; மதவேளாகிய மன்மதன் பிரும்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரையும் இல்லறத்தில் ஈடுபட வைத்துத் துணைவியரைக் கொடுக்க ஆவன செய்தாய்.

ஆனால் தாயே, எனக்கு நீ ஒன்றும் தரவில்லையே?

  

இவ்வாறு புலவர்  பராசக்தியின் பெரும் சக்தி படைத்த வள்ளல் தன்மையைப் போற்றிவிட்டு, பிறகு மெல்லத் தன் நிலைமையை ஒரு குழந்தையாகப் பக்தியுடன் வேண்டுகிறார்.

  

இவ்வாறு துறவி கூறி முடித்ததும் அவரது நெஞ்சில் ஒரு வேத மந்திரம் ஸ்புரித்தது:

  

'யத் பத்ரம் தன்ன ஆஸுவ'- இறைவா, எது நன்மையோ அதை எங்களுக்குத் தந்தருள்!

சுவாமி விமூர்த்தானந்தர்

18.04.2022,

திங்கட்கிழமை,

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,

thanjavur