ஒரு நிமிட உன்னதம் - 20

11.04.22 04:54 PM - By thanjavur

ஒரு நிமிட உன்னதம் - 20

கடவுளின் பாதுகாப்பில் நாம்.


இன்று நான் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்குப் போனேன். அங்கு அந்தத் துறவி என்னைப் பார்த்ததும், "ஆஹா, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் எப்படி எல்லாம் நம்மைக் காப்பாற்றுகிறார்.... தெரியுமா?" என்று பல முறை சொல்லி ஈரக் கண்களால் ஆனந்தத்தை வெளிப்படுத்தினார்.

                                                                

நடந்தது என்ன?

                                                                

இன்று மடத்தில் எல்லா துறவிகளுக்கும் மதிய உணவு பிக்ஷை வெளியில் ஏற்பாடாகியிருந்தது. அந்தத் துறவி மட்டும் மடத்தை விட்டு வெளியில் செல்ல விரும்பவில்லை. அதனால் மூத்த துறவியிடம் தனக்கு ஒரு வேலை இருப்பதாகவும் தன்னைச் சந்திக்க ஒருவர் வருவதாகவும் கூறினார்.

                                                                

அது உண்மை அல்ல, a white lie. துறவியாக இருந்து பொய் சொல்லி விட்டோமே என்று அவருக்கு நெஞ்சு குறுகுறுத்தது. மனமுருகி ஸ்ரீராமகிருஷ்ணரிடம் மன்னிப்பு வேண்டினார். கலியுகத்தில் தவம் உண்மை பேசுவது என்றல்லவா ஸ்ரீராமகிருஷ்ணர் உபதேசித்தார்.

                                                                

தன்னைச் சந்திக்கச் சிலர் வருவர் என்று பொய்யாகச் சொன்ன அதே நேரத்தில் ஒன்பது பேர் மடத்திற்கு வந்தனர். செருப்புகளைச் சீராக்கும் சக்கிலியர்கள் அவர்கள். தங்கள் பகுதியில் கட்டப்பட்டு வரும் எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்காகத் துறவியின் உதவியை நாடினர். பேசினர். போயினர்.

அப்போது மடத்திற்குச் சென்ற என்னிடம் துறவி, "இந்த நேரத்தில் மடத்திற்கு யாரும் வருவதில்லை. தன்னைச் சேர்ந்த ஒருவன் தெரிந்தோ, தெரியாமலோ செய்துவிட்ட பிழையிலிருந்தும், குற்றத்திலிருந்தும் ஏன், பாவத்திலிருந்தும்கூட ஸ்ரீராமகிருஷ்ணர் பலரையும் காப்பாற்றிய வரலாறு உண்டு. 


"நான் அவசரத்தில் சொல்லிவிட்ட ஒரு சிறு பொய்யை, அது பொய்யாகிடக் கூடாது என்பதற்காக பகவானே என் மீது இரக்கமுற்று அறிமுகமற்ற சிலரை அனுப்பியுள்ளார். இது எனது நம்பிக்கை மட்டுமல்ல, பல நேரங்களில் பலருக்கும் நடக்கும் அருள் சுரக்கும் அனுபவமும்கூட" என்றார்.

                

சத்தியநிஷ்டரான ஸ்ரீராமகிருஷ்ணர் தன்னைச் சார்ந்தவர்களின் சமய ஒழுக்கத்தைக் காப்பாற்றி வருவதை அன்று அவதானித்தேன்.

சுவாமி விமூர்த்தானந்தர்

11.04.2022,

திங்கட்கிழமை,

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,

thanjavur