இன்று மடத்திற்கு ஒருவர் வந்து பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சன்னிதியில் வேண்டிக் கொண்டிருந்தார். முகம் சிவந்து கண்களில் ஈரம் சுரந்தது. திரும்பத் திரும்ப நமஸ்கரித்தார்.
பிறகு அந்த அன்பர் துறவியிடம் வந்து, "சாமி, நாம நிர்பந்தத்தில, வயிற்றுப் பிழைப்புக்காக, ஒரு காரியத்தில இறங்க வேண்டியிருக்கு. அது சாமிகுத்தமா ஆயிடுமா?" என்று வெள்ளந்தியாகக் கேட்டார்.
"புரியும்படி சொல்லப்பா" - துறவி.
"சாமி, நாங்க பேண்ட் வாசிக்கிறவங்க. போன மாசம் எலக்ஷன் வந்தப்போ நாங்க தெருத் தெருவா கட்சிக்காரங்க முன்னாடி வாசிச்சுகிட்டே போனோம்".
"ஆமா, தேர்தல் நடந்த அந்த ஒரு மாசம் ஒரே சத்தம்." - துறவி.
"எங்க பொழப்பு அப்படி சாமி. ஒரு நா இந்த ராமகிருஷ்ண மடத்துத் தெரு வழியா வந்தோம். அன்னிக்கு தெய்வ நம்பிக்கை இல்லாத ஒரு கட்சிக்காரங்களுக்காக வாசிச்சோம். அவங்க மடத்துக்கு முன்னாடி நின்னு வாசிச்சு சத்தம் செய்யணும்னு எங்களுக்கு உத்தரவு போட்டாங்க. வாங்குன காசுக்கு வாசித்தோம்."
அன்று பூஜை நேரத்தில் மிகவும் தொந்தரவாக இருந்த அந்த நாளை நினைத்துப் பார்த்தார் துறவி.
"நாங்க பூஜை நேரத்தில் தொந்தரவு செஞ்சிட்டோமே சாமிகுத்தம் ஆயிடுச்சேன்னு பயமா இருந்தது" என்றார்.
அந்த ஏழை கலைஞருக்கு ஆறுதல் வழங்கிப் பிரசாதமும் சில நூல்களும் துறவி கொடுத்தார்.
"நா செஞ்ச அபசாரத்திற்காக ராமகிருஷ்ண சாமியிடம் மன்னிப்பு கேக்க இப்போ வந்திருக்கிறேன். நீங்க இப்போ பிரசாதம் கொடுத்ததாலே ராமகிருஷ்ண சாமி எங்களுடைய அபசாரத்தைப் பொருட்படுத்தல்லேன்னு நா நம்புறேன். சரியா சாமி?" என்று கேட்டு வீழ்ந்து வணங்கினார்.
கோவிலுக்குள் ஸ்ரீராமகிருஷ்ணர் தெய்வீகப் புன்னகையுடன் காட்சி அளித்தார்.
சுவாமி விமூர்த்தானந்தர்
08.04.2022,
வெள்ளிக்கிழமை,
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,