RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

ஒரு நிமிட உன்னதம் - 18

05.04.22 02:23 PM By thanjavur

ஒரு நிமிட உன்னதம் - 18

Makeup or Wakeup?

 

இன்று நம் துறவி இணையதளத்தில் ‘அக அழகு' பற்றிப் பேச இருக்கிறார். அதன் பொருட்டு வீடியோ எடுக்க ஓர் இளைஞர் வந்திருந்தார்.

 

துறவறம் பற்றி அறியாத அவர் துறவியின் உதவியாளரிடம், "சாமியிடம் கொஞ்சம் மேக்கப் செய்து கொண்டு வரச் சொல்லுங்கள்" என்றார். துறவியின் நான்கு நாள் தாடி மீசை, சாதாரண வேஷ்டி சட்டை, அதிகம் சிரிக்காத முகம் இவையெல்லாம் அவரைக் கவரவில்லை.

 

துறவி உரையாற்றுவதற்கான ஏற்பாடுகளைப் பார்த்து விட்டு தமது அறைக்குச் சென்றார். அப்போது இளைஞர் ஒரு தாளில் make up என்று எழுதி உதவியாளரிடம் கொடுத்து நினைவூட்டச் சொன்னார். அதனை உதவியாளர் துறவியிடம் காண்பித்தார். துறவி புன்னகைத்தார்.

 

துறவி சிறிது நேரத்திற்குப் பிறகு வந்தார். ஆனால் அதே.... தாடி மீசை சட்டை எல்லாம் அதே பழைய கோலம். அய்யே....கேமராமேன் விக்கித்து நின்றார். இளைஞர் தந்த தாளில் இருந்த Make up என்ற வார்த்தையில் உள்ள M ஐ அடித்து W என்று மாற்றியிருந்தார் துறவி. 

துறவி உரையாற்றும் முன்பு விழிப்பான wake up நிலையில் இருப்பதில்தான் கவனம் செலுத்தினார். எவ்வாறு?

 

அறையில் அவர் தன் உரையின் மூலம் பக்தர்களின் உள்ளங்களில் நல்ல கருத்துகள் விதைக்கப்பட வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தித்தார். அக அமைதிக்காகச் சில நிமிடங்கள் தியானம் செய்தார். சொல்ல வந்த கருத்துகளை மனதில் முறைப்படுத்திக் கொண்டார்.

 

பிறகு ஆண்டவனின் பிரதிநிதியாக உரையாற்றினார். உள்ளங்களைக் கொள்ளை கொண்டார்.

 

ஆண்டவன் பார்ப்பதும் எதிர்பார்ப்பதும் புறத்தின் make up அல்ல; அகத்தின் wake up தான்.

சுவாமி விமூர்த்தானந்தர்

05.04.2022,

செவ்வாய்க்கிழமை,

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,

thanjavur