RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

ஒரு நிமிட உன்னதம் - 17

29.03.22 07:37 PM By thanjavur

ஒரு நிமிட உன்னதம் - 17

                உறவுகளை மேம்படுத்துங்கள்!


அவரும் நானும் பல வருடங்களுக்கு முன்பு சேர்ந்து எங்களது கிளப்பின் மூலமாக இளைஞர் முன்னேற்றத்திற்காகப் பல நற்காரியங்களைச் செய்தோம். நாங்கள் செய்த காரியங்களில் எங்களுக்குள் பரஸ்பர வியப்பானந்தம் ஏற்பட்டது.

    

எங்கள் பயணம் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. ஆனால்...., எங்களது வேலைப் பளு அதிகரித்தது. அவரது தொண்டுகளில் நான் முக்கியமானவன் ஆகிவிட்டேன். ஆம், நான் அப்படி நம்பிவிட்டேன். அதனால் அவரிடம் எனக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. அதோடு அவரது அப்போதைய சில நடவடிக்கைகளில் எனக்கு ஒப்புதல் ஏற்படவில்லை.

    

விளைவு.... விரிசல்.

    

நாங்கள் சண்டையிடவில்லை. வாக்குவாதம் இல்லை. ரயில் பயணத்தில் எனக்கான ஸ்டேஷன் வந்துவிட்டது போல் உணர்ந்தேன். இறங்கிவிட்டேன். அவருடன் பணிபுரிந்ததில் எனக்குச் சந்தோஷம். அவரைப் பிரிந்ததில் வருத்தமில்லை.


வாழ்க்கை விசித்திரமானது. எட்டு வருடங்கள் கழிந்தன. திடீரென்று அவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். எங்கள் நட்பு விட்ட நல்ல இடத்திலிருந்து மீண்டும் தொடங்கியது. 

YouTube - இல் நல்ல ஒரு படைப்பைப் பார்க்கும்போது மோசமான விளம்பரங்கள் சில வரும். அவை போன்ற நிகழ்வுகளாகத் தோன்றிய எங்களது கடந்த கால கசப்புகளைப் பற்றி இருவருமே பேசவில்லை. இப்போதெல்லாம் அடிக்கடி பேசி வருகிறோம், இன்றைய வாழ்க்கையைப் பற்றி மட்டுமே.

 

எனக்குள் ஓர் எண்ணம் குடைந்து கொண்டிருந்தது. நான் அவரிடமிருந்து திடீரென்று விலகியதை அவர் எவ்வாறு பார்க்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள எனக்கு ஆவலாக இருந்தது.

 

அவர் கூறினார்: முதலில் எனக்குச் சிரமமாக இருந்தது. யோசித்து பார்த்ததில், நான் செய்து வருவது தெய்வ காரியம். தெய்வமே எல்லா வேலைகளையும் என் போன்றவர்கள் மூலமாகச் செய்து கொள்வதை உணர்ந்திருக்கிறேன். எந்தச் சேவையை யாருடைய துணையுடன் அடியேன் செய்ய வேண்டுமென்பதை தெய்வம் காட்டி வருகிறது.

 

‘என்னை நம்பி காரியமாற்று. உனக்குப் பிடித்தவர்களை மட்டும் வைத்துக் கொண்டு எனது சேவையைச் செய்ய முயலாதே’ என்று இறைவன் எனக்குப் பாடம் கற்பித்ததை உணர்ந்தேன். இதைத்தான் சுவாமி விவேகானந்தர் ‘Less help from men, more help from God’ என்று கூறுகிறாரோ!

 

பிறகு, எங்களது நட்பு விலகலை அவர் ஓர் அருமையான உதாரணத்துடன் விளக்கினார்: "சினிமாவில் நமக்குப் பிடித்த கதாநாயகன் அல்லது கதாநாயகி சிறப்பாக நடித்திருந்தால் அந்தக் காட்சியை மட்டும் நாம் மனதில் கொள்வோம். அவர்களது டப்பாங்குத்து மற்றும் சோபிக்காத காட்சிகள் நம்மை ஈர்க்காவிட்டால் அவற்றைக் குறை கூறிக் கொண்டே இருப்போமா, என்ன?".

 

ஆஹா, நட்பு, அன்பு, பாசம், குரு-சிஷ்ய உறவு, இல்லற உறவு - இவை போன்ற உறவுகள் எல்லாம் நம் கற்கும் திறமைக்கேற்ப நமக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டே வருகின்றன.

 

ம்...., சொல்ல மறந்துவிட்டேனே, என்றும் மதிப்பிற்குரிய அவர் ஒரு துறவி ஆவார்.

சுவாமி விமூர்த்தானந்தர்

29.03.2022,

செவ்வாய்க்கிழமை,

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,

thanjavur