"நாங்க குடும்பத்தில் இருக்கிற பலரையும் அரவணைச்சி, சகிச்சிகிட்டு போக வேண்டியிருக்கு சுவாமிஜி? ம்.... " என்று கூறி பெருமூச்சு விட்டார் அந்தப் பக்தர்.
"ஏன் ஐயா, என்ன ஆயிற்று?" துறவி வெள்ளந்தியாகக் கேட்டார். பக்தர் தனது குடும்ப கஷ்டங்கள், சில்லரைத் தொந்தரவுகள், பிரச்னைகள் போன்ற பலவற்றையும் சொன்னார். துறவி ஓர் உதாரணம் கேட்டார்.
"சுவாமி, நான் டெய்லி பூஜை செய்வேன். அப்போ எனக்கு ரொம்பவும் வேர்க்கும். ஆனால் என் மனைவி பூஜையிலிருந்து என்னைச் சீக்கிரம் எழுப்ப வேண்டுமென்றே மின்விசிறியை அணைத்து விடுவாள். இதை நான் பல காலம் சகித்துக் கொண்டு வருகிறேன்".
தனது பிரச்னையை எளிதாகச் சமாளித்து வருவதாக காலரைத் தூக்கிக் கொண்டார் அவர். உன்னை விட நான்தான் அதிகம் சிரமப்படுகிறேன் என்ற ஒரு குழந்தை கர்வம் அது.
துறவி யோசித்தார். மடத்தில் பொதுச் சேவையில் ஈடுபட்டுக் காரியங்களைச் செய்யும்போது அதில் தனக்குச் சிலரால் வரும் சிக்கல்கள், ஏளனங்கள், ஒத்துழைப்பின்மை, நிதி பற்றாக்குறை - இவற்றையெல்லாம் இவரிடம் சொல்லிப் பயனில்லை என்பதைப் புரிந்து கொண்டார்.
தமக்கு வரும் 108 பிரச்னைகளைச் சமாளிப்பதற்கு அவர் 108 முறை இறைநாமத்தை முறையாக ஜபிப்பதால்தானே முடிகிறது என்பதை துறவி சொல்லவில்லை.
பிறகு பக்தரிடம் விளக்கினார். "ஐயா, பூஜையின்போது மின்விசிறி இல்லாமல் அல்லது கரண்ட் போய்விட்டால் மூன்று விதத்தில் நமக்கு இறையருள் கிடைக்கிறது என்று நான் புரிந்து கொண்டுள்ளேன்."
"எப்படி சுவாமிஜி?" என்றார் பக்தர்.
"முதலாவது, மின்விசிறி நின்றுவிட்டால், அந்த நேரத்தில் கடவுளின் கருணை, தென்றல் காற்றாக வந்து என்னைக் குளிர்விப்பதை அனுபவித்துள்ளேன்.
இரண்டாவது, உடலின் சூட்டை நம் மனம் பொருட்படுத்தாமல் பூஜையில் ஆர்வமும் கவனமும் அதிகரிப்பதை அவதானித்து உள்ளேன்.
மூன்றாவது, நானே உடல் என்ற எண்ணம் அதாவது தேகாத்ம புத்தி இருப்பதால்தான் நமக்கு இது போன்ற சிறு பிரச்னைகள்கூட மிரட்டுகின்றன.
"இது போன்ற நேரங்களில் நமக்கு உடல் உணர்வு கடந்த அல்லது தேகாத்ம புத்தி இல்லாத நிலை வாய்க்க வேண்டுமே என்று கடவுளிடம் மன்றாடுவேன். அப்போது தேகாத்ம புத்தியைக் கடந்த அல்லது மறந்த ஓர் ஆனந்த நிலையை அனுபவித்திருக்கிறேன்.
"ஒரு சம்பவம் கேளுங்கள். ஒரு கோடைக்காலத்தில் பிற்பகல் சென்னையில் கடுமையாக வெயில் அடித்தது. சுவாமி ராமகிருஷ்ணானந்தர் என்ற சசி மகராஜ் சூடு தாங்க முடியாமல் சிரமப்பட்டார். அது சிறிது நேரம்தான்.
"எனக்கு இப்படி சூடாக இருக்கிறது என்றால் கோவிலில் தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருமேனிக்கும் சூட்டினால் சிரமம் இருக்கும் என்று யோசித்தார்.
"மறுகணம் விசிறி எடுத்துக்கொண்டு பூஜையறையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண திருவுருவப் படத்திற்கு விசிற ஆரம்பித்தார். அப்போது ஓர் ஆச்சரியம் அங்கு நிகழ்ந்தது.
"தெய்வத்தின் சூட்டைத் தணிப்பதற்காக விசிறிய பூஜாரியான சசி மகராஜின் உடல் சூடு உடனே நீங்கிக் குளிர்ந்தது. இது பக்தி செய்த விந்தை."
"ஐயா பக்தரே, இப்படி பல விதங்களில் துறவிகளாகிய நாங்கள் நன்கு சிந்தித்து பிரார்த்தனை செய்து பிரச்னையைத் தீர்த்துக் கொள்கிறோம்" என்றார்.
பங்குனி மாத உஷ்ண காலத்தில் மெல்லிய தென்றல் வீசுவதைப் பக்தர் உணர்ந்தார்.
சுவாமி விமூர்த்தானந்தர்
28, மார்ச் 2021
திங்கட்கிழமை
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்