அமுதம் பருக வந்த பாம்போ!
தினமும் மாலையில் மடத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் வகுப்பு நடக்கும். துறவி இன்று அந்த நூலை வாசிக்க ஆரம்பித்ததும் சற்று தூரத்தில் அவரது பார்வை சென்றது. லேசாக அவர் துணுக்குற்றார். பிரார்த்தனை மண்டபத்தில் ஓரத்தில் ஒரு பாம்பு நெளிந்து கொண்டிருந்தது.
பக்தர்கள் பலர் அங்கு கூடியிருந்தனர். பாம்பை அடித்து விடுங்கள் என்று யாராவது கூறியிருந்தால் அனைவரும் கலவரம் ஆகிவிடுவார்கள். அந்தச் சிற்றுயுயிரை அடித்துக் கொல்வதில் தங்களது வீரத்தைக் காட்டியிருப்பார்கள். பாம்பும் உயிருக்குப் பயந்து அட்டகாசம் செய்திருக்கும். அதனால் மடத்தின் அமைதி குறைந்துவிடும்.
பாம்பு படமெடுக்குமா என்று ஒரு கணம் யோசித்த துறவி மறுகணம் பாடமெடுக்க தியான மந்திரத்தைக் கூற ஆரம்பித்தார். பக்தர்கள் அடிக்கடி பாம்பைப் பார்ப்பதும் பாடத்தைக் கேட்பதுமாக இருந்தனர்.
"வாழ்க்கையில் ஒரு பக்தர் இப்படித்தான் இருக்க வேண்டும். நல்லவற்றை ஆர்வமாகக் கேட்க வேண்டும். அதே சமயம் அவருக்கு ஒவ்வாத அல்லது வேண்டாததைப் பற்றிய விழிப்புணர்வும் இருக்க வேண்டும். இப்போது பாம்பு உங்களை வந்து தீண்டிவிடக் கூடாது என்ற கவனம் இருக்கிறது. அதேசமயம் குருதேவரின் அமுதமொழிகள் பாடமும் கவனத்தில் இருக்கிறது, அல்லவா? இதைத்தான் நம் முன்னோர்கள் ‘ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே, காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே’ என்றனர்" என்று கூறிக்கொண்டே சென்றார் துறவி.
இதற்குள் தாரணியம்மா என்ற பக்தை, "பாம்பு ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்களைக் கேட்க வந்திருக்கலாம், மகராஜ்" என்றார் புன்னகையுடன்.
பாடம் தொடர்ந்தது. பயம் மறந்தது. வகுப்பு முடிய 20 நிமிடம் ஆனது. அப்போது பாம்பு மெல்ல மண்டபத்திலிருந்து வெளியே செல்வதைத் துறவி கவனித்தார். பிறகு அது சாலையைக் கடந்து எதிர்புறம் சென்று புதருக்குள் மறைந்துவிட்டது.
வகுப்பிற்குப் பிறகு பக்தர்கள் யாரும் பாம்பு பற்றிப் பேசவில்லை; பரமஹம்ஸர் அன்று அடித்த ஜோக்கைப் பற்றி ஆனந்தமாக உரையாடினர். ஸ்ரீராமகிருஷ்ணர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், அந்தப் பாம்பிற்கும் அன்று ஏதோ உபதேசம் செய்திருப்பாரோ!
ஒரு பிரச்னையை எவ்வாறு பெரிது படுத்தலாம் அல்லது அமைதியாக எவ்வாறு தீர்வு காணலாம் என்பதைத் துறவி அன்று கற்றார்.
சுவாமி விமூர்த்தானந்தர்
25, மார்ச் 2021
வெள்ளிக்கிழமை
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்