18.2.22- வெள்ளிக்கிழமை. கேரளாவில் உள்ள திருவல்லா 108 திவ்யதேசங்களில் ஒன்று. ஸ்ரீ வல்லபர் என்ற திருநாமம் கொண்ட விஷ்ணு பகவான் இங்கு கோவில் கொண்டிருக்கிறார்.
இந்தக் கோவிலுக்கு நேற்று இரவு செல்லும் பாக்கியம் கிடைத்தது. இங்கு மாதத்தில் பல நாட்களில் கதகளி நாட்டியம் நடைபெறும். களிப்புடன், இசையுடன் நடனத்துடன், பாட்டுடன் பாவத்துடன் ஸ்ரீமத் பாகவதம், ராமாயணம், மகாபாரதம் போன்ற தெய்வீக கதைகளை இரவு முழுவதும் ஆடியும் பாடியும் அனுபவித்து வருகிறார்கள்.
இரவு 10 மணி முதல் 5 மணி வரை விடிய விடிய கதகளி நடக்கும். சிரத்தையுடன், பக்தியுடன் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியை இரவெல்லாம் யார் பார்ப்பார்கள் என்ற கரிசனம் நமக்கு வந்தது.
அப்போது நிகழ்ச்சி நடத்தும் ஒரு பக்த - கலைஞர் நமது எண்ணத்தைப் புரிந்து கொண்டார்.
ஒரு கணத்தில் நம்மிடம்," நாம் ஆத்மார்த்தமாகச் செய்யும் இந்த நிகழ்ச்சியை அனுதினமும் ஸ்ரீ வல்லபரே, அதோ அந்த மேடையில் அமர்ந்து பார்த்து ரசிப்பார். இது ஐதிகம் மட்டுமல்ல, ஒவ்வொரு கலைஞனின் நம்பிக்கையும்கூட. அந்தச் சமயத்தில் சப்தரிஷிகளும் துர்வாசரும் ஸ்ரீவல்லபரைத் தரிசிக்க வரும் நேரம். ஸ்ரீ வல்லபரை மகிழ்விக்க நாங்கள் கதகளியை நடத்துவதால் கூட்டத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை" என்றார்.
கலைஞர் என்றால் இவரல்லவோ! கோவிலில் உட்புறத்தை வீடியோவில் தரிசிக்கிறீர்கள். அலங்கார வளைவுடன் இருக்கும் மேடைதான் ஸ்ரீ வல்லவர் கதகளி கண்டு ரசிக்கும் இடம்.
சுவாமி விமூர்த்தானந்தர்
18, பிப்ரவரி 2021
புதன்கிழமை
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்