தேக தர்மம் Vs வேத தர்மம்
துறவி இன்று பயணம் மேற்கொண்டார். ரயிலில் ஒரு பிராமணர் துறவியின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். அதிகாலையில் அவரது மனைவி அசதியாகப் படுத்திருந்தாள்.
மகளோ இரவிலும் போன் பேசிக் கொண்டே வந்தாள்.
பிராமணர் காலையில் 5 மணிக்கு எழுந்து மெல்ல சுலோகம் சொல்ல ஆரம்பித்தார். ரயில் பெட்டியில் ஓரத்தில் ஒரு சிறு விளக்கு எரிந்தது. அதனையும் சகபயணிகள் எரிச்சலுடன் பார்த்தார்கள். பிராமணரின் மனைவிகூட "ஏழு மணிக்குத்தான் நாம எறங்குற நேரம். செத்த நேரம் அதிகமா படுத்தா என்ன கொறஞ்சி போயிடும்?" என்று கணவரைப் பார்த்து முணுமுணுத்தார்.
தாடி வைத்திருந்த பிராமணரின் மகன் காலையில் 5 மணிக்கே மீண்டும் வாட்ஸ்அப் போதையில் சிக்கி விட்டான்.
ஆனால் பிராமணரோ, புருஷ சூக்தத்திலும் நாராயண சூக்தத்திலும் திளைத்துக்கொண்டிருந்தார். துறவி ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து ஸ்ரீராமகிருஷ்ண மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பித்தார்.
அவ்வப்போது விழித்துப் பார்த்த பயணிகள் பலரும் துறவியையும் அந்தணரையும் ஜந்துக்களாகப் பார்த்தார்கள்.
மணி 6 ஆனது. எல்லோரும் தாமசத்தில்- தூக்கத்தில் மக்னமாகி இருந்தார்கள்.
பிராமணர் சனாதன ஆன்மீகப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார் என்று அவரை மரியாதையுடன் பார்த்தார் துறவி.
பிராமணரும் அவரைப் பார்த்து குசலம் விசாரித்தார்.
"அளவுக்கு மீறித் தூங்குபவர்களை விழிப்புறச் செய்ய அடியேனால் முடியவில்லை. ஆனால் சனாதன தர்மப்படி வாழ பகவான் அருள் புரிந்திருக்கிறார்.
தூங்கி வழிந்த மனைவியைப் பார்த்தபடி பிராமணர், "நாலரை மணிவரை தூங்கி யாகிவிட்டது. அது தேக தர்மம். இப்போது உஷத் காலத்தில் தெய்வ சிந்தனையில் இருக்க வேண்டிய நேரம். இது வேத தர்மம்" என்றார்.
துறவி மெல்ல கண்ணை மூடி சனாதன ரிஷி பரம்பரையை நெஞ்சுக்குள் காண ஆரம்பித்தார்.
சுவாமி விமூர்த்தானந்தர்
16, பிப்ரவரி 2021
புதன்கிழமை
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்