WhatsApp Vs Thoughts Up
திருநெல்வேலிக்கே அல்வா என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அதுபோல் சாதுக்களுக்கு உபதேசம் செய்வது சிலருக்குப் பிடிக்கும். இன்று அப்படிப்பட்ட ஒருவரிடம் நம் துறவி மாட்டிக்கொண்டார்.
"எல்லாமே வேகமாக மாறி வருகிறது சுவாமி, நீங்களும் காலத்திற்குத் தகுந்தாற்போல் உங்கள் ஆன்மிக உபதேசங்களையும் upgrade செய்து மாற்றிக்கொள்ள வேண்டும்.
டெக்னாலஜி வேகமாக வளர்கிறது. ஒரு மொபைல்போனிலேயே பல விஷயங்கள் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு, WhatsApp மூலமாக நீங்கள் ஒரே நேரத்தில் 256 பேருக்குச் செய்திகளை அனுப்ப முடியும்" என்பதையெல்லாம் விளக்கினார்.
அவர் கூறியது நன்றாக இருந்தது. தொழில்நுட்பம் என்பது மாறிக்கொண்டிருப்பது. இன்றைய வாட்ஸ்அப்பையும் புறந்தள்ளிவிட்டு வேறு ஒன்று வரத்தான் போகிறது. டெக்னாலஜியை அந்தந்த காலத்திற்குத் தகுந்தாற்போல், தேவைக்கு ஏற்றாற்போல் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். டெக்னாலஜி என்பது உலகியல்ரீதியான, லௌகீகமான விஷயம்.
ஆனால் தத்துவங்கள், பக்தி மார்க்கம், ஞானச் சிந்தனைகள் யாவும் மாறாதவை. இறைவனை மையப்படுத்திய வாழ்க்கை ஒருவரைப் புனிதனாக்கும். பூரணமாக்கும். வேண்டிய எல்லா வளங்களைத் தரும்.
இவ்வாறெல்லாம் அவருக்குப் புரியவைத்து கடைசியில், "தம்பி, துறவிகளாகிய நாங்கள் WhatsApp - ஐக் கவனமாகக் கையாள்கிறோம். அதே நேரத்தில் எங்களது கவனமெல்லாம் Thoughts Up -இல்தான் (மேலான சிந்தனையில்) வைத்திருப்போம். தொழில்நுட்பத்தையும்கூட தெய்வ சேவைக்குப் பயன்படுத்துகிறோம்" என்று துறவி முடித்தார்.
சற்று நேரத்தில் அந்தத் தம்பி மொபைல்போனை சைலன்டில் போட்டுவிட்டுக் கோயிலுக்குப் போனார்.
சுவாமி விமூர்த்தானந்தர்
09, பிப்ரவரி 2021
புதன்கிழமை
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்