RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

ஒரு நிமிட உன்னதம் - 8

29.01.22 07:04 PM By thanjavur

ஒரு நிமிட உன்னதம் - 8

SwamI or SwamY- எது சரி?

 

அந்த இளம் துறவி குருவிடம் கேட்டார்:

குருவே, எனது சந்நியாச நாமத்திற்கு முன்பு சுவாமி என்பதை SwamI என்று எழுதவா அல்லது SwamY என்று இருக்க வேண்டுமா? Y or I?


குரு உரைத்தார்: இரண்டு விதத்திலும் புரிந்துகொள் அருமைச் செல்வா. SwamI என்று எழுதுவது பக்தி வழி. நீ புரிய வேண்டிய பகவத் கைங்கரியம் மற்றும் விவேகானந்த சுவாமி வலியுறுத்தும் மக்கள் சேவையிலும் ஈடுபடும்போது உனது தன்முனைப்பை- சுயநல வேட்கையை- பெயர் புகழ் ஆசையை- அகங்காரத்தை- ஈகோவை- I - ஐ எல்லாவற்றிற்கும் பின்னே வைத்துக்கொள். ஈகோவை நன்கு பயன்படுத்து. அதையே முன்வைத்து எதையும் செய்யாதே.

 

சீடன்: I ஐப் பின்னே வைப்பது என்றால்...., குருவே?

 

குரு: ஸ்ரீராமகிருஷ்ணர் கூறும் Riped Ego - பக்குவப்பட்ட ஈகோ என்ற I உனக்குள் கம்பீரமாக இருக்கட்டும்; திமிராக வேண்டாம்.

 SwamY என்பதையும் சரியாகப் புரிந்து கொள். எதையாவது உன் போக்கில் செய்துவிட்டு கடைசியில் ஏன்- Y- Why? இப்படி செய்தோம் என்று உனக்குள்ளேயே நீ கேட்டுக் கொள்ளாமல் இருப்பதற்கு SwamY என்று எழுது.

 

ஏன் உன்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொன்றும் எப்போதும் சாதாரணமாகவே நடக்கின்றன? நீ செய்யும் ஒரு காரியம் சிறப்பாக நடப்பதற்கு ஏன் எல்லோரும் ஒத்துழைக்கவில்லை? என்பதையெல்லாம் யோசி, மகனே.

 

அவ்வாறு ஏன் Y - why என்பதை உனக்குள் நீ கேட்டுக் கொள்ளும்போது நீ கடவுளின் கருவி ஆவாய். இல்லாவிட்டால் உன் வெற்றி மீதான கர்வி ஆவாய். நீ ஆக வேண்டியது கருவியா? கர்வியா?

 

அவ்வளவுதான், குருவின் தாமரைத் திருவடிகளின் தேனைச் சுவைக்க சிஷ்ய வண்டு நுழைந்தது.

சுவாமி விமூர்த்தானந்தர்

29, ஜனவரி  2021

சனிக்கிழமை

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்


thanjavur