RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

ஒரு நிமிட உன்னதம் - 7

27.01.22 05:57 PM By thanjavur

ஒரு நிமிட உன்னதம் - 7


டாக்டர் பத்மா பிறருக்கு உதவுவதில் சமர்த்தர். அவர் அந்தத் துறவியிடம், "சுவாமிஜி, சில காதொலி கருவிகள்- hearing aids என்னிடம்  இருக்கின்றன, அவற்றை யாருக்காவது கொடுத்து உதவுங்கள்" என்றார்.

 

மடத்தில் சிறு பணிகள் செய்யும் இந்திராம்மாவின் நினைவு துறவிக்கு வந்தது. அந்த அம்மாவிற்குக் காது கொஞ்சம் மந்தம். அதனால் அவரிடம் அந்தக் கருவியைப் பயன்படுத்துகிறீர்களா என்று கேட்டார் துறவி. அதற்கு இந்திராம்மா மறுத்து, "வேண்டாம் சுவாமி. காது கேட்காமல் மிகவும் சிரமப்படக் கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள்; அவர்களுக்கு அந்தக் கருவிகளைக் கொடுங்கள்" என்றார்.


இந்திராம்மா தனியாகச் சொற்ப வருமானத்தில் வாழ்கிறார். அதனால் துறவி ஓரிரு முறை வலியுறுத்தி கூறிப் பார்த்தார்.

 

இந்திராம்மா முடிவில், "மகராஜ், காது கேட்கும் கருவியைப் பயன்படுத்த ஆரம்பித்தால் நான் தேவையற்ற, ஜனங்களின் சாரமற்ற பேச்சு பலவற்றைக் கேட்க வேண்டியிருக்கும். அதற்குப் பதிலாக நானும் ஏதாவது சொல்வேன். எனக்கு இப்போது காது மந்தமாக இருப்பதால் மக்களின் வெற்று இரைச்சலை, ஒலிப்பெருக்கிகளின் காட்டிரைச்சல்களைக் கேட்க வேண்டியதில்லை. குறைவான சத்தத்துடன் வேண்டியதை மட்டும் கேட்கிறேன். அப்படியே இருக்க விரும்புகிறேன் சுவாமி" என்றார்.


குறைபாடுகூட ஒரு பெரிய வாய்ப்போ!

சுவாமி விமூர்த்தானந்தர்

27, ஜனவரி  2021

வியாழக்கிழமை

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்


thanjavur