RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

ஸ்ரீசாரதாம்மாவிடம் சொல்லிவிட்டால் போதும்! - சுவாமி விமூர்த்தானந்தர்

19.11.20 10:44 AM By thanjavur

வள்ளியம்மா, தஞ்சாவூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணமடத்திற்குத் தினமும் பால் வழங்கி வருபவர். பசுக்களை வளர்த்துப் பால் கறப்பதைத் தொழிலாகக் கொண்டவர். 47 வயது ஆகியிருந்தாலும் பார்ப்பதற்கு ஒரு பத்து வயது அதிகம் போல் தெரிவார்.

துன்பமே இயற்கையெனும் தொல்லை அறிந்தவர் போல் இருப்பார்.மடத்துப் பரிச்சயத்தினால் வள்ளியம்மாவுக்கு எப்படியோ சாரதாம்மா சொந்தம்மா போலாகிவிட்டார். தினமும் பால் தந்துவிட்டு கோவிலுக்குள் சிறிது நேரம் அமர்வார். தனது அவலங்களை, துன்பங்களை அன்னையின் முன்பு கொட்டுவார். பலன்?

ஸ்ரீசாரதாதேவியின் அருள் அந்தச் சாமானியப் பெண்ணை வளைத்துப் போட்டுள்ளது என்றே தோன்றுகிறது.

வள்ளியம்மா

ஒரு நாள், இரண்டு லிட்டர் பாலை வாங்குவதாகக்கூறியிருந்தஒரு வீட்டிற்குப் பாலை எடுத்துச் சென்றபோது அந்த வீட்டுப் பெண் ‘ஒரு லிட்டரே போதும்’ என்று நறுக்கென கூறிவிட்டார். வள்ளியம்மா வேறு இடங்களில் மீதப் பாலை விற்க முயற்சித்தார். யாரும் வாங்கிக் கொள்ளவில்லை. கடைசியில் அவர் மேற்கொண்டு எங்கும் அலைய சக்தியற்றவராகி மடத்திற்கு வந்துமீதமிருந்த பாலைத்தந்தார். பாரம் நீங்கிய மகிழ்ச்சி. இங்கு ஒரு லிட்டர் பாலின் விலை ரூ. 40/-.

சிறிது நேரம் சாரதாம்மாவின் சன்னதியில் அமர்ந்து விட்டு மடத்து வாசலுக்குச் சென்றார். அவருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி. அங்கு ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்று கிடந்தது.அந்தத் தெருவில் அந்த நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லை.

அது ஒரு புது நோட்டு. வள்ளியம்மா அதை எடுத்தார், இது யாருடையதாக இருக்கலாம் என்று சுற்று முற்றும் பார்த்தார். யாருமில்லை. இந்தப் பணத்தை உண்டியலில் போடலாமென யோசிப்பதற்குள், ‘மகளே,என்னிடம் வந்துஎனக்குப் பாலையும் வழங்கிவிட்டு, நீ எப்படியம்மா வெறும் கையோடு செல்வாய்?’ என்று ஓர் அன்பான குரல் வள்ளியம்மாவின் அடிமனதில்கேட்டதாம்.


Decibel அற்ற, Devotion-ஆல்மட்டுமே கேட்க முடிந்தஅந்தக் குரலை வள்ளியம்மாமீண்டும் கவனித்தார். சாரதாம்மாவின் குரல்இப்படித்தான் இருக்குமோ என்று எண்ண ஆரம்பித்தவர்,அந்தக் குரல் தந்த உற்சாகத்தால் அம்மாவின் குரலில்தான் இவ்வளவு அன்பைக் கொண்டுவர முடியும் என்று நம்பினார். ஸ்ரீசாரதா தேவியே அந்த 50 ரூபாயை அவருக்காகக் கொடுத்துள்ளார் என்று வள்ளியம்மாவுக்குத் தோன்றியது.அதனால் அந்த நோட்டை அவர் பூஜையறையில் இன்றும் வைத்திருக்கிறார்.

அடுத்து, அவருக்கு நடந்த ஒரு சம்பவம் இன்னும் அதிக பக்தியை நமக்குள் கிளரச் செய்யும். வள்ளியம்மாவிடம் 9 பசுக்களும் மூன்று கன்றுக்குட்டிகளும் இருந்தன. சுமார் 40 நாட்களுக்கு முன்பு அவரது ஒரு பசு மேயச் சென்றிருந்தபோது எதையோ மேய்ந்து அன்று இரவு அந்தப் பசுவால் எழமுடியவில்லை. வயிற்றுப்போக்கு ஆகிவிட்டது. வள்ளியம்மாவுக்குப் பயம் வந்துவிட்டது.

கால்நடை மருத்துவரிடம் கேட்டுப் பார்த்ததில் அவர் வந்து மருந்தைக் கொடுத்தார். பலனில்லை. வள்ளியம்மா வழக்கம்போல் அம்மாவிடம் குறையைக் கொட்டினார். மூத்தத் துறவியிடம் விபரத்தைக் கூறினார். அவர் ஆறுதல் வழங்கினார்.

ஆனால் என்ன பயன்? அடுத்த நாளே பசுக்களின் எண்ணிக்கை எட்டாகக் குறைந்துவிட்டது. மிகுந்த துக்கத்துடன் சாரதாம்மாவிடம் வந்து நடந்ததை முறையிட்டார். ஒரு பதிலும் இல்லை.

வருத்தமாகஇருந்த வள்ளியம்மாஇரண்டு தினங்களுக்குப் பிறகு மடத்திலிருந்துவீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார். ரயில்வே தண்டவாளத்தைத் தாண்டி அவர் தனது இடத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு ஒரு சிறிய பள்ளி – ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலயா தொடக்கப்பள்ளி.

அங்கு அப்போது நிறைமாத கர்ப்பிணிப் பசு ஒன்று பிரசவ வேதனையில் தவித்துக் கொண்டிருந்தது. ஓரிருவர் வேடிக்கைதான் பார்க்க முடிந்ததே ஒழிய, யாரும் அந்தப் பசுவிற்கு வேண்டிய உதவியைச் செய்ய முடியவில்லை. வள்ளியம்மா உடனே சுகப்பிரசவத்திற்கு உதவினார்.

ராமகிருஷ்ண மடம் அமைத்திருக்கும் வீதி…

ஆச்சரியமாக, கன்று ஈன்று விட்டு பசு அங்கிருந்து உடனே எங்கோ ஓடிவிட்டது. நிற்க முடியாத கன்று தனியாக நடுங்கிக்கொண்டிருந்தது. சில தெரு நாய்கள் வெறியோடு காத்துக் கொண்டிருந்தன. ஒருவர் அந்த நாய்களைத் துரத்தினார். ஆனாலும் அவை திரும்பத் திரும்ப வந்தன. கன்றுக்குப் பால் கொடுக்க வேண்டுமே, பசுவைக் காணோமே என்று சுற்றும் முற்றும் பார்த்தார் வள்ளியம்மாள். தாய்ப் பசு வரவில்லை.

பிறகு அங்கிருந்த சிலஎளிய மக்கள், “தாயில்லாத இந்தக் கன்றுக்குட்டியை வீட்டுக்கு எடுத்துப் போய் நீயே வைத்திரு வள்ளி. யாராவது வந்து கேட்டால் திருப்பிக் கொடு” என்றனர்.அந்தக் கன்றுக்குத் தனது மற்ற பசுக்கள் பால் தருமா என்று வள்ளியம்மா முயற்சி செய்து பார்த்தார். ம்ம்கூம்.

இதற்குள் தூரத்தில் கன்றைப் பிரிந்து போன பசு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. கன்று ஈன்றவுடன் பசியினாலோ அல்லது பயத்தினாலோ அது கன்றை விட்டுச் சென்றிருந்தது. இப்போது வந்து கன்றையும் கண்டு கொண்டுவிட்டது. கன்றும் தாயைக் கண்டுபிடித்தது ஆச்சரியமே. தாயும் சேயும் தங்கள் உடல் வாசனைகளைப் பரஸ்பரம் முகர்ந்து கொண்டன. உடனே கன்று துள்ளிக் குதித்தது, தாய்ப்பசு பால் சொரிந்தது.

அந்தப் பசுவும் ஓர் அனாதை பசுதானோ, அதுவும் அடைக்கலம் தேடி ஏங்கித் தவித்துக் கொண்டிருந்ததோ! அதற்கும் அன்னையின் அருள்இப்போது கிடைத்துள்ளதோ!விதி முடிந்து போன ஒரு பசுவிற்குப் பதிலாக பால் கறக்கும் தாய்ப்பசு ஒன்றுசேயுடன் கிடைத்ததில் வள்ளியம்மாவுக்கு சந்தோஷம். அவற்றை அனுப்பியது யார் என்பதில் அவருக்குச் சந்தேகமே இல்லை.

இப்போது தினமும் வள்ளியம்மா மடத்திற்கு வந்து காலையிலும் மாலையிலும் வாசலில் கோலம் இடுகிறார். தன் வீட்டிலிருந்து பூக்களைப் பறித்துக் கொண்டுவந்து சாரதாம்மாவின் சன்னதியில் அமர்ந்து மாலை கட்டுகிறார்; பக்திப் பாடலைப் பாடுகிறார்.

தாய்ப்பசு கன்றுக்கு நன்றாகப் பால் ஊட்டுகிறது!

ஜெய் மா ஸ்ரீசாரதாதேவி!

.
சுவாமி விமூர்த்தானந்தர்
19 நவம்பர், 2020
ராமகிருஷ்ணா மடம், தஞ்சாவூர்

thanjavur