RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

கோமாதாவின் சாந்நித்யம்

26.10.20 10:03 AM By thanjavur

-சுவாமி விமூர்த்தானந்தர்

ஸ்ரீகிருஷ்ணர் பசுவைத் தழுவி நிற்பதை நாம் படங்களில் கண்டிருக்கிறோம். அந்தத் திருவுருவப்படம் நமக்குப் பக்தியைப்  போதிக்கிறது.

‘மிக ஆரோக்கியமும் சகல நலனும் பெற வேண்டுமா?பசுக்களைத் தழுவிக் கொள், அந்தப் பலன் கிடைக்கும்’ என்று டச்சு நாட்டினர் நம்பி வருகின்றனர். இவ்வாறு பிபிசி கூறியுள்ளது.

இந்துக்களாகிய நாம் பசுவைத் தொழுதால் பிற்போக்குவாதிகள் என்று மேலை உலகம் நம்மைக் கேலி பேசும். ஆனால் பிபிசி இவ்வாறு சொன்னால் அந்த மக்கள் ஏற்கிறார்களா?

நார்வே நாட்டில் அண்மையில் ஓர் அரிய சம்பவம் நடந்தது. புல் ஃபைடிங் – Bull Fighting என்பது நமது மஞ்சுவிரட்டு அல்லது ஜல்லிக்கட்டு போன்று கிடையாது. கையில் கூரான வேல் வைத்துள்ள  நான்கைந்து பேர் சேர்ந்து துணியைக் காட்டிஒரு காளையை முட்ட வைத்து, அதனைத் தளர்வடையச் செய்து விரட்டிக் கொல்வார்கள். இது மேலைநாட்டு வீரம்!அண்மையில் நார்வேயில் இது போன்று ஒரு போலித்தனமான துணிவு விளையாட்டு நடந்தது.  திடீரென ஒரு வீரர்களைப்படைந்து ஒதுங்கி ஓரத்தில் அமர்ந்துவிட்டார். அவரால் எழ முடியவில்லை. தலை சுற்றியது. காது அடைத்தது.
அந்தச் சமயத்தில் வேகமாகக் காளை  அவரை நோக்கி வந்தது. அவரைக் குத்திக் கிழிக்கப் போகிறது என்று மற்றவர்கள் பயந்தார்கள்.

ஆனால் அந்தப் பசு நேராக அவர் முன் சென்று அமைதியாக நின்றது. அந்த வீரர்  காளையின் கண்களைக் கண்டார்.
ஆஹா, அது அருமையான தருணம். அந்தக் காளையின் கண்களில் கம்பீரமான அமைதி இருந்தது.

‘மனிதா, நான் உனக்கு என்ன பாவம் செய்தேன்?என்னையும் என் போன்ற மற்ற காளைகளையும் இவ்வாறு வேடிக்கைப் பொருளாக்கி ஓட ஓட விரட்டி எங்களைக் கொடூரமாகக் கொல்வதில் உங்களுக்கு என்னய்யா அப்படி ஒரு சுகம்? இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் அல்லவே! எங்களைப் போன்ற மற்ற ஜீவராசிகளுக்கும் சொந்தமல்லவா? இதில் நீங்கள் மட்டுமே கொழுத்து வாழ வேண்டும் என்று ஆசைப்படுவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா?’ என்று அந்தக் காளை கேட்பது போல் இருந்ததாக அந்த வீரர் உணர்ந்தார்.

உடனே அவர் ‘இனி இது போன்று வெறித்தனமான விளையாட்டில் பங்கு கொள்வதில்லை’ என்று முடிவெடுத்தார்.

பிருந்தாவனத்துப் பசுக்கள் ஸ்ரீகிருஷ்ணரின் நாமத்தையும் ஸ்ரீராதையின் நாமத்தையும் கேட்டால் காதை உயர்த்தி கண்களைக் கூர்மையாக்கிக் கேட்டு அனுபவிப்பதை இன்றும் காணலாம்.

தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடம் 22. 8.2020 அன்று விநாயகர் சதுர்த்தி தினத்தில் தொடங்கப்பட்டது. அன்று காலையில் வேத முழக்கம் முடிந்து கோ பூஜை நடக்க இருந்தது.

வர வேண்டிய பசுவும் கன்றும் வரவில்லை. அதனால் மடத்து தலைமை சுவாமிக்குச் சஞ்சலம் ஏற்பட்டது, அவை வருமா வராதா என்று. சற்று தாமதமாகப் பசுவும் கன்றும் மடத்திற்குள் நுழைந்தன.

சம்பிரதாயப்படி, கோ பூஜை தொடங்கியது.  மந்திர கோஷம் ஒருபுறம், மாலை மரியாதைகள் இன்னொரு புறம் என்று பசு சற்று நெளிந்தது.

மகாலெட்சுமியின் மீதான ஸ்ரீ சூக்தம் முழங்கப்பட்டது. பசுவின் நெற்றியில் மஞ்சளும் குங்குமமும் அணிவிக்கப்பட்டன. தலையில் பூக்கள் சூட்டப்பட்டன. மாலை இடப்பட்டது. பிறகு தீபாராதனை.

ஸ்ரீ சூக்தம் பாராயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போது ஓர் அதிசயம். எங்கே பசுக்கள் பூஜைக்கு வராமல் போய் விடுமோ என்று பயந்த எங்களுக்கு ‘நாங்கள் முறையான அழைப்பிற்கு என்றும் செவிசாய்ப்போம்’ என்ற வகையில் ஒரு பசு அல்ல, இரண்டு அல்ல, ஏழு பசுக்கள் மடத்து வாசலில் வந்து நின்றன. ஸ்ரீ சூக்த பாராயணத்திற்கு மெல்லத் தலையசைத்து அதைக் கேட்டுக் கொண்டும் இருந்தன.

பிருந்தாவனத்தில் மட்டுமல்ல, அன்பாகவும் தெய்வீகத்துடனும் யார் அழைத்தாலும் பசுக்கள் இன்றும் செவிசாய்க்கின்றன.அப்படிப்பட்டதொரு காட்சி தஞ்சை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் 22.8.2020 அன்று நிகழ்ந்தது தெய்வ அனுக்கிரகம்தான்.

பசுக்கள் வந்திருந்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட காட்சியைக் காணுங்கள்.



சுவாமி விமூர்த்தானந்தர்
26 அக்டோபர், விஜயதசமி 2020
ராமகிருஷ்ணா மடம், தஞ்சாவூர்

thanjavur