- சுவாமி விமூர்த்தானந்தர்
தோட்டத்தில் ரோஜாக் கன்றுகளை நட்டுக் கொண்டிருந்தேன். குழி தோண்டி, எரு விட்டு, பசும்சாணம் சேர்த்து, ரோஜாச் செடியினை வைத்து நீரூற்றுவது போன்ற பணிகள் எல்லாம் ஆண்டவன் தந்த வரங்களே. நீங்களும் இதுபோன்ற வாய்ப்பினை, அல்ல, வரத்தினை உங்கள் இல்லங்களில் உருவாக்கிக்கொள்ளுங்கள் அன்பர்களே.
ஆர்வத்துடன் ரோஜாச் செடியை நட்டுக் கொண்டிருந்தபோது சட்டென்று அதன்முள் என் விரலில் குத்திவிட்டது. வலித்த விரலில் வழிந்த ரத்தத்தால் வலி.
மற்ற நேரங்களில் முள் குத்தியிருந்தால் நம் கையின் ரத்தத் துளியை என் வாயினால் உறிஞ்சியிருக்கலாம். ஆனால் சேறானகையில் அது சாத்தியமில்லை. சில நிமிடங்களில் மண்ணைக்கிளரிவிடுவதிலும் அள்ளுவதிலும் செடிகளை நடுவதிலும் கவனம் கொண்டு பணிகளைத் தொடர்ந்தேன். மேலும் பல ரோஜாக் கன்றுகள் பூமி மாதாவின் பாதுகாப்பில் தஞ்சமடைந்தன.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு திடீரென நினைவிற்கு வந்தது – என்ன ஆயிற்று எனது விரலின் வலிக்கு என்று! ஆம்,வலி மறந்தே போனது.
செடிகளை நடும் பணி செம்மையாகவும் சந்தோஷமாகவும் இருந்ததால் வலி சிறுத்துவிட்டதோ!
உயர்ந்த அனுபவங்களுக்காக ஏங்குவதுகூட ஓர் ஆன்மீகச் சாதனை என்றே தோன்றுகிறது. ‘பெரிதினும் பெரிது கேள்’ என்றுதானே பாரதியார் நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்.
ஒரு சம்பவம்.
எப்போதும் எதையும் தானே முதலில் சாப்பிட வேண்டும் என்று அந்தச் சிறுவன் ஆசைப்படுவான். அன்று அவனது தாய் அவனிடம் சில இனிப்புகளைக் கொடுத்து அதனை வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களுக்குப் பரிமாறச் சொன்னார். ‘அவர்கள் சாப்பிட்டப் பிறகு மீதமிருப்பது அனைத்தும் உனக்கே’ என்று கூறியதால் சிறுவன் வேகவேகமாக, ஆசை ஆசையாகப் பரிமாறினான்.
வந்திருந்த உறவினர்கள் வயதானவர்கள். ஆதலால் இனிப்பு அவர்களுக்குக் கசந்தது. ஒவ்வொருவரும் ஏதோ கொஞ்சம் எடுத்துவிட்டு சிறுவனது பரிமாறும் குணத்தைப் பாராட்டினார்கள். அவர்கள் தலையைக் கோதி விட்டோ, கன்னத்தைக் கிள்ளியோ, தாடையைத் தொட்டோ அவனைக் கொஞ்சினார்கள்
அந்தப் பாராட்டு அவனுக்குள் ஒரு தனி சுகத்தைக் கொடுத்தது. நானே முதலில் உண்பதைவிட மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டு, நான் கொஞ்சம் சாப்பிட்டாலும் எனக்கு இவ்வளவு சந்தோஷம் இருக்கிறதே என்று மகிழ்ந்தான். ஆம், பசியாறுவதைவிட பரிமாறுவது சிறந்தது என்ற மேம்பட்ட அனுபவம் அவனை முன்னேறிய சிறுவனாக மாற்றியது. பிறகு அவனே வீட்டிலுள்ள பிற அங்கத்தினர்களுடன் அந்த இனிப்புகளைச் சேர்ந்து உண்டான்.
இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அந்தச் சிறுவன் உலகளாவிய ஓர் உயர்ந்த சேவை அமைப்பில் நல்ல நிலையில் இருக்கிறார் என்பது நல்ல அனுபவங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம்.
இந்த இரண்டு சின்ன அனுபவங்கள் சொல்லும் செய்தி அருமையானது. உயர் அனுபவங்களில் கவனம் கொண்டால் சில்லறை அனுபவங்கள் நமக்குச் சுமையாவதில்லை. நமது உடலுக்கும் உள்ளத்திற்கும் கிடைக்கும் அனுபவங்களை மேலானதாக மாற்றிக் கொள்ளும்போது அது இறையருளாகிறதா? ஆம், என்கிறது பகவத்கீதை.
‘ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்ட்டோ மத்த: ஸ்மிருதிர் ஜ்ஞானமபோஹனம் ச’ – ‘நான் (இறைவன்) எல்லோருடைய இதயத்திலும் இருக்கிறேன். ஆன்ம நினைவு, விழிப்புணர்வு, சந்தேகமற்ற நிலை எல்லாம் என்னிடமிருந்தே உண்டாகின்றன’ என்கிறார் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர். அதாவது ‘கடவுளிடத்திலிருந்தே நமக்கு மறதியும், ஞானமும் வருகிறது’.
ஆனால் மனிதன் ஒரே மாதிரியான அனுபவங்களில் உழன்று சுகம் காண்கிறான். இல்லை, சுகம் அடைவதாக நம்பி ஏமாறுகிறான்.
மனிதர்களின் திருஷ்டி பொதுவாக, கீழ் நோக்கியதாகவே, சிற்றின்பங்களிலேயே இருக்கிறது என்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார்.
நல்ல அனுபவங்களைச் சொந்தமாக்கிக் கொண்டு கவிபாடிய பட்டினத்தடிகள் மக்களின் அன்றாட அவல அனுபவங்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்:
அடுத்தடுத்து உரைத்ததே உரைத்தும்
கண்டதே கண்டும் கேட்டதே கேட்டும்
நாம் எவ்வளவு உண்டாலும் அதில் நமக்கு அலுப்பு தட்டுவதே இல்லை. நாம் காண்பதும், கேட்பதும், சந்திக்கும் மனிதர்களும், அவர்களோடு நாம் புரியும் உரையாடல்கள்கூட ஒரே மாதிரியானதே. இவ்வாறு வாழ்ந்து, அதோடு கடவுள் நமக்குக் கொடுத்த வாழ்க்கையை வீணடிக்கிறோம் என்று பட்டினத்தடிகள் கூறுகிறார்.
‘சாதாரண மனிதன் ஒரே நாள் வாழ்வை ஓர் ஆண்டு முழுவதும் அப்படியே மாறாமல் வாழும் அவலத்தை’ அவதானித்துப் பதிவிட்டு இருக்கிறார்.
இந்த ஒருநாள் கூத்து வாழ்க்கை முறை பட்டினத்தாரின் காலத்தில் மட்டுமல்ல, Gadgets Babiesகளாக நெளியும் நமக்கும் இது பொருந்துவது போல் தோன்றுகிறது அல்லவா!
அனுபவங்கள் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு உறவிலும், ஒவ்வொரு கணத்திலும் உயர்ந்த பாடங்களைக் கற்றுத் தரக் காத்திருக்கின்றன.
கற்பதற்கு நாம் தயாரா?
சுவாமி விமூர்த்தானந்தர்
6 நவம்பர், 2020
ராமகிருஷ்ணா மடம், தஞ்சாவூர்