RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

கேள்வி - 2

19.01.21 07:58 PM By thanjavur

கேள்வி 2: பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் பக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி? - பேராசிரியர் பிரகாஷ் சங்கரன், சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

    பதில்: இந்தக் கேள்வியை அன்னை ஸ்ரீசாரதாதேவியிடம் கேட்டால், அவர் கூறுவார்:
‘குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரே பரம்பொருள். அவர் எல்லையற்ற கருணையாளர். அவர் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவரிடம் எளிய உள்ளத்துடன் பிரார்த்தனை செய்தால் போதும். அவர் நிச்சயம் உங்களுக்கு அருள்வார். அதனால் பக்தி பெருகும்.’

 

சுவாமி விவேகானந்தரிடம் இதே கேள்வியைக் கேட்டால், அவர் கூறுவார்: 'ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். விக்கிரகத்தில், சிலையில் மட்டுமே சிவபெருமானைக் காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில் உள்ளது.'.

 

அதுபோல் ஸ்ரீராமகிருஷ்ணரை அவரது படத்தில் மட்டும் அல்லது மடத்தில் மட்டும் அல்லது கோவிலில் மட்டும் காண்பவன் சாதாரணமானவன். ஆழ்ந்த சமயப் பற்றுடன் ஆண்டவனுக்குச் செய்யும் கைங்கர்யமாக உணர்ந்து தங்கள் குடும்ப மற்றும் சமுதாயக் கடமைகளை ஒவ்வொருவரும் செய்தால் அவர்களிடம் பக்தி ஊற்றெடுக்கும்; பிறகு அதுவே பிரவாகமெடுக்கும் என்பது சுவாமிஜியின் ஆசீர்வாதம்.

 

தங்களிடம் பக்தியை எப்படி வளர்த்துக்கொள்வது என்ற அதே கேள்வியை ஸ்ரீராமகிருஷ்ணரிடமே கேட்டால், அவர் கூறுவார்: 'ஒரு நிமிடம் இரு, நான் என் லோகமாதாவைக் கேட்டு வந்து அவள் கூறும் பதிலை உனக்குச் சொல்கிறேன்' என்பார்.

 

இவ்வாறு நாம் குருதேவரிடம் வேண்டுவதன் மூலம் அவர் நமது பக்தியைப் பெருக்கி, தெய்வத்திடம் நம்மைக் கொண்டு சேர்ப்பார். இதைப் படிக்கும்போது, 'அவனருளாலே அவன் தாள் வணங்கி....' என்ற வரிகள் உங்கள் சிந்தனையில் வந்தால் நீங்கள் பக்தர் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

 

பக்தியை எப்படி வளர்த்துக்கொள்வது என்ற தலைநோவு நமக்கு வேண்டியதில்லை. ஸ்ரீராமகிருஷ்ணரே தமது அருளை நமக்குள் பக்தியாக மலர்விப்பார். அவர் ஞானசூரியன்; நாம் மலர்கள். நம் வாழ்க்கையின் நோக்கமே அவரை நோக்கிக் கொண்டிருப்பதுதான்.

சுவாமி விமூர்த்தானந்தர்

19 ஜனவரி, 2021

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur