RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

வ. உ.சிதம்பரனார் ஐயா 150-வது பிறந்த ஆண்டு விழா

23.06.22 04:53 PM By thanjavur

- சுவாமி விமூர்த்தானந்தர்

அனைவருக்கும் வணக்கம்.

வ.உ.சிதம்பரனார் ஐயாவின் தியாகம் மிக்க உழைப்பு, சிந்தனை மிக்க தேசபக்தியை நன்றியோடு நினைத்து பாராட்டுவதற்காக 150 வருடத்திற்குப் பிறகும் நாமெல்லாம் விழா எடுக்க இங்கு கூடியிருக்கிறோம்.

        

'இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்' இதுதான் அன்றைய அடிமை பாரதம் ஆங்கிலேயரின் பிடியில் இருந்த நிலை. அப்படிப்பட்ட ஆங்கில அரக்கர்களை எதிர்த்துப் போரிட்டவர் நமது ஐயா அவர்கள்.

        

கத்திக்குக் கத்தி, கொலைக்குக் கொலை, போருக்குப் போர் என்றுதான் பல நாடுகளின் சுதந்திர வீரர்கள் போராடுவர். ஆனால் வ உ சி ஐயா போரிட்ட முறையோ வேறுபட்டது. உலகம் இதுவரை காணாதது. ஆங்கில கப்பலுக்குச் சமமாக சுதேசிக் கப்பல், அந்நிய வியாபாரத்திற்கு எதிராக சுதேசி கப்பல் கம்பெனியையே ஆரம்பித்து எதிரிகளின் வியாபாரத்தை ஒடுக்கப் போராடிய பெருமை நம் அய்யாவிற்குத்தான் உண்டு.

        

வ உ சி கப்பலோட்டிய தமிழர் என்று மட்டும் அவரைக் குறிப்பிடுவது பொருத்தமான ஒன்றல்ல. விடுதலைப் போராட்டத்தில் அவரது உன்னதமான பங்களிப்பைப் புரிந்துகொண்டு நாம் அவரை நினைவு கூர வேண்டும். எப்படி?


‘உலகில் முதன்முதலில் கப்பலோட்டியே ஆங்கில ஏகாதிபத்தியத்தை ஓட்டிய ஒரே இந்தியர் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி’ என்பதுதான் சரியான புகழாரமாக இருக்கும். இனி நம் வரலாற்றை நாமே எழுதப் போகும் காலங்களில் அவரது தேசபக்தி வேள்வியை வரலாற்றில் இவ்வாறுதான் பதிவு செய்ய வேண்டும். பள்ளிகளில் பாடமாக்க வேண்டும்.

  

Yes, V.O.C was the only Indian freedom fighter in the world to overthrow English imperialism in a unique way. He made an attempt to capture a portion of the imperial business to pave the way to get our political freedom. This historical fact should be given priority when our patriotic nationalists rewrite our history in the future.

 

சொந்தக்காலில் நாம் நிற்க வேண்டும் என்று நமக்குக் காட்டிய ஒரு மாபெரும் சுதேசி வஉசி ஐயா அவர்கள்.


இன்று நாம் ஆத்மநிர்பர் பாரத், தற்சார்பு இந்தியா அல்லது தன்னம்பிக்கை இந்தியா என்று பல திட்டங்கள் மூலம் நம் நாட்டிலேயே நாம் நமக்கு வேண்டிய அனைத்தையும் தயாரிக்க வேண்டும் என்று முழங்குகிறோம். முயற்சிக்கிறோம். இன்று நாம் முழங்குவது சுதந்திர பூமியில். அது பெரிய விஷயம் அல்ல.

 

நம் காலில் நாம் நிற்க வேண்டும் என்று ஒரு சிறு கடையை அல்ல, சொந்த ஒரு நிறுவனத்தை அல்ல, நாட்டிற்காக அதுவும், அடிமை பூமியில் இருந்துகொண்டு ஒரு பெரும் கப்பல் கம்பெனியையே நடத்திய வீரர், தீரர் வஉசி ஐயாதான். ஆத்மநிர்பர் பாரத், தன்னம்பிக்கை இந்தியாவின் முதல் தங்க மனிதர் வஉசி ஐயாதான்.

கப்பலோட்டிய தமிழரின் 150-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு  விவேகானந்தா கேந்திரம் விழா எடுப்பதில் ஒரு தனி முக்கியத்துவம் இருக்கிறது. சுவாமி விவேகானந்தர் முழங்கிய தேசபக்தியை வஉசி அவர்கள் உள்வாங்கியது அவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையைத் தந்தது.

                

ஆம், அது நடந்தது 1906- ஆம் ஆண்டில். வ உ சி ஐயா அப்போது சமய நூல்கள் சிலவற்றை அவசரமாகப் படித்திருந்தார். விளைவு?

                

இந்த உலகமே ஒரு கனவுதான். ‘எதைக் கொண்டு வந்தோம், எதைக் கொண்டு செல்ல?’ என்றெல்லாம் வறட்டு வைராக்கியம் பேச ஆரம்பித்தார். பட்டினத்தாரும் பத்திரகிரியாரும் அவரது பக்கத்துணையாயினர். 

                

தத்துவக் குழப்பத்தோடு சில நாட்களுக்குப் பிறகு வ.உ.சி. அவர்கள் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் என்ற சுவாமி விவேகானந்தரின் சகோதரச் சீடரை சென்னையில் அன்றைய ஐஸ் ஹவுசில், இன்றைய விவேகானந்தர் இல்லத்தில் சந்தித்தார்.

                

வ.உ.சி. ஐயாவிடம் அப்போதிருந்த உலகின் நிலையாமை பற்றிய குழப்பத்தை சுவாமிகள் முற்றிலும் நீக்கினார். மேலும் "தேசியமும் தெய்வீகமும் ஒவ்வொரு இந்தியனின் இரண்டு கண்கள். அதற்காக முதலில் தாய் நாட்டிற்காகத் தொண்டு செய்" என்ற சுவாமி விவேகானந்தரின் தேசபக்தியையூட்டி, சாதாரணமான ஒரு சமயவாதியாக மாறயிருந்த வஉசியை சுவாமி ராமகிருஷ்ணானந்தர் ஒரு தலைசிறந்த தேசபக்தர் ஆக்கினார்.

‘சுதேசியம் ஒன்றே சுகம் பல அளிக்கும். இதே என் கடைப்பிடி என்றனன். அவனுரை வித்தென விழுந்தது. மெல்லிய என்னுளம் சித்தம் அதனைச் சிதையாது வைத்தது!’ என்று வ உ சி ஐயா தமது சுயசரிதத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார்.

        

விவேகானந்தரின் சிந்தனைகளால் அன்று உத்வேகம் பெற்ற வ உ சி க்கு விவேகானந்த கேந்திரம் இன்று 150-வது பிறந்த ஆண்டு விழாவை நடத்துவது சாலச் சிறந்தது.

        

வ.உ.சி ஐயாவின் வரலாற்றைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கொண்டு சென்று நம் இளைஞர்களிடையே உறங்கிக் கொண்டிருக்கின்ற தேசபக்தி என்ற அக்னியைத் தட்டி எழுப்ப வேண்டும்.

        

இன்று சுயநலத்தில் மூழ்கி, செல்போன்களுக்கிடையே செக்குமாடுகளாகச் சுற்றிச் சுற்றி வரும் நம் மக்களுக்குச் செக்கிழுத்த செம்மலின் சரிதம் சொல்லப்பட வேண்டும். 

இந்தச் சொற்பொழிவைக் கேட்க

thanjavur