RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

உணர்வூட்டும் கதைகள் - உண்மைச் சம்பவங்கள் - 2

08.04.21 07:14 PM By thanjavur

உணர்வூட்டும் கதைகள் -2

ஒரு திருடன் - ஒரு பாபா - ஒரு மாற்றம்

நதி சூழ்ந்த காஜிப்பூரில், மரங்களின் நடுவே பவஹாரி பாபாவின் ஆசிரமம்.

அங்கு கீரிக்குஞ்சுகள் படுக்க, பாம்புகள் படுக்கை விரிக்கும். பாபாவின் கருணை அப்படி!

ஆசிரமத்தில் அன்று நடந்த பிரவசனத்தில், ஒருவர் நாமதேவரின் சரிதையைக் கூறிக் கொண்டிருந்தார். பக்தர்கள் பக்தியில் தோய்ந்திருக்க, ஒருவன் மட்டும் எல்லாவற்றையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.

பொருளுக்காக அற்பப் புழுவாகும் திருடன் அவன். இரக்கமின்றிப் பலரது உடைமைகளைப் பறிப்பான், எதிர்த்தால் உயிரையும்தான்! பிரவசனம் தொடர்ந்தது.

நாமதேவருக்குத் தன் குருகிருபையால் ஆன்மிகத்தில் ஓர் அற்புத நிலை சித்தித்திருந்தது. அன்று நாமதேவர் உணவருந்த அமர்ந்தார். காய்ந்த, சற்றுக் கடினமான ரொட்டித் துண்டுகள் தட்டில் வைக்கப்பட்டிருந்தன.

அருகில் வெண்ணெய்க் கிண்ணம். நாமதேவர் கண் மூடிக் கடவுளை வணங்கி, உண்ண ஆரம்பிக்கலாம் என எண்ணியபோது, எங்கிருந்தோ வந்த ஒரு நாய் அந்த ரொட்டியைக் கவ்விச் சென்றது.

தன் உணவு களவாடப்பட்டது என எண்ணம் கூட நாமதேவருக்கு இல்லை. 'அடடா, அந்த நாய் வெண்ணெய் தடவப்படாத ரொட்டியை உண்டால், அதன் வாய் வலிக்குமே' என்றே நினைத்தார்.

உடனே நில், நில் என்று கூறியபடி, வெண்ணெயுடன் நாயின் பின்னே ஓடினார் நாமதேவர். சொற்பொழிவாளர் இதை விவரித்தபோது அழுதேவிட்டார், பக்தர்களும்தான்.

ஆனால் திருடனோ 'இப்படியும் ஒரு பைத்தியக்காரனா? பக்தர்கள் சரியான அசடுகள்' என்று சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

இரவு வரை இருந்தால்தானே திருட முடியும். அதனால் அவனும் அவர்கள் மத்தியில் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு, கண்ணீரை வரவழைத்துக் கொண்டான். சொற்பொழிவாளர் தொடர்ந்தார்:

நாயின் பின் ஓடிய நாமதேவர் களைப்புடன், "தெய்வமே, நிற்க மாட்டாயா? நான் வழங்கும் வெண்ணெயை ஏற்க மாட்டாயா?” என்று கேட்டதும் ஓர் அதிசயம் நடந்தது.

நாய் மறைந்தது, நாயகன் – ஆம், லோகநாயகன் தோன்றினார் அங்கு. 'விட்டலா' என்று மூர்ச்சித்து விழுந்தார் நாமதேவர். அச்சுதன் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்.

"எல்லாவற்றுள்ளும் என்னையே காணும் உன் பக்குவத்தை உலகிற்குக் காட்டவே இந்த ஓட்டம்” என்று கூறி விட்டலன் மறைந்தார்.

'இதெல்லாம் கட்டுக்கதை' என்று கூறி, அத்திருடன் பல்லைக் கடித்தபடி அமர்ந்திருந்தான். பக்தர்கள் பவஹாரி பாபா வாழ்ந்து வரும் குகைக்கு வெளியே இருந்தபடி வணங்கிச் சென்றனர்.

ஆசிரமத்தில் ஓரிருவரைத் தவிர, இப்போது வேறு யாரும் இல்லை. திருடன் ஓரிடத்தில் ஒளிந்து கொண்டான்; எதையோ மெத்து மெத்தென்று தான் மிதிப்பதை உணர்ந்தான்; காலால் தள்ளிவிட்டான். 'ஐயோ' என்று கத்தத் துடித்தான், ஆனால் அது முடியாதே!

அது வேறு ஒன்றுமல்ல, ஒரு பாம்பு மெல்ல அந்தப் பக்கமாகச் சென்றது. அதன் மீது கால் வைத்தும் அது கடிக்கவில்லையே!

பாபாவின் ஆசிரமத்தில் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் அமைதியாக உலவுவது சகஜம் என அவன் கேள்விப்பட்டிருக்கிறான்.

'சே, இந்த பாழாய்ப் போன நேரம் நகர மாட்டேன் என்கிறதே' என்று தவித்தான் அவன். 

சிறிது நேரத்தில் இருட்டியது. உடனே ஆசிரமத்திலுள்ள பொருள்களை வேகவேகமாக அவன் மூட்டை கட்டினான். இவற்றை விற்றால் எத்தனை நாட்கள் வேலை செய்யாமல் உண்ணலாம் என எண்ணிக் குதூகலித்தான்.

மூட்டையை முதுகில் கட்டிக் கொண்டான். 'நல்ல வேளை, யாரும் பார்க்கவில்லை' என நினைத்தான்.

'ம், எவனாவது என்னைப் பிடிக்க வந்தால், இது இருக்கு' என இடுப்பிலிருந்த கத்தியைத் தொட்டுப் பார்த்து மனம் இன்னும் கடுமையாகிப் போனான். சுற்றுமுற்றும் பார்த்தபடி திருடனுக்குரிய பயத்துடன் அவன் நழுவியபோது...,

நிசப்தத்தில் நாதமாக, இருளில் ஒளியாக, பசிக்கு அமுதமாக 'சோர்பாபா (திருட்டு பாபா)' என்று ஒரு குரல் அழைத்தது.

அவன் திணறிவிட்டான்.

இவ்வளவு இனிய குரலா? குரலில் ஒருவர் இவ்வளவு அன்பை வார்த்தெடுக்க முடியுமா?

'சோர்பாபா நில்' என மீண்டும் அந்தக் குரல் கேட்டதும் திருடன் பயந்தேவிட்டான். அது பவஹாரி பாபாவின் மதுரக்குரல் என்பது அவனுக்குத் தெரிந்ததோ?

இதுபோல் மாட்டிக் கொண்டால் தீட்டிய கத்தியை எடுப்பவன், இன்று ஓட்டம் எடுத்தான். புத்தியைத் தீட்டும் பாபா இருந்ததால் அவன் கத்தியைப் பிடிக்கவில்லையோ!

மூச்சிறைக்க ஓடுபவனின் பின் மூச்சையே ஆகாரமாகக் கொள்ளும் பவஹாரிபாபாவும் (பவஹாரி = காற்றைப் புசிப்பவர்) ஓடினார்.

அவன் பேயாய் ஓடினான்; பாபா காற்றாய்த் தொடர்ந்தார்.

திருட்டு மூட்டையைச் சுமந்து, நாய் போல் தான் ஓடுவதாக அவனுக்குத் தோன்றியது. நாமதேவரைப் பரிகசித்தவன், இன்று பாபா தன்னைத் தொடர்வதை நம்ப முடியாமல் ஓடினான்.

மூட்டையைக் கீழே போட்டுவிட்டால் அவர் துரத்த மாட்டார் என எண்ணி மூட்டையை விட்டான். ஆனால் பாபாவோ, அந்த மூட்டையைத் தூக்கியபடி முன்பைவிட வேகமாக அவனைத் துரத்தினார்.

இப்போது பாபா ஏன் துரத்துகிறார் என்று அவனால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.

தான் சிரமத்துடன் அந்த மூட்டையைச் சுமந்தபோது பாவ மூட்டையாகவும், பாபா அநாயாசமாகச் சுமந்து ஓடி வரும்போது அதுவே பரிசு மூட்டையாகவும் மாறிவிட்டதாக அவனுக்குத் தோன்றியது.

அலைபாயும் மனதையே அடக்கியாளும் ஒரு யோகிக்கு அற்பன் ஒருவனையா பிடிக்க முடியாது? சட்டென்று திருடன் முன்னே நின்றார் பாபா. கரங்களை மேலே தூக்கினான் அவன்.

எங்கே போனது, கத்தி பிடித்து மிரட்டும் அவனது கொடூரக் கை!

பயந்து கையைத் தூக்கி நின்ற அவனது எதிரில் சட்டென்று பாபா கை கூப்பி, "சோர்பாபா, நில். 
நீ எடுத்து வந்தவை யாவும் உன்னுடையதே. அதை நீ எடுத்துப் போகும்போது நான் வந்து இடைஞ்சலாகிவிட்டேன். இவற்றை ஏற்றுக்கொள்ளப்பா, எல்லாம் உனதே' என்று வினயத்துடன் அந்த மூட்டையைக் கொடுத்தார்.

பசித்த குழந்தையின் வாயில் ஒரு துளி தேன் தடவிய தாயாக நின்றார் பாபா. அன்பை முதன் முதலில் தரிசித்த சுகத்தில் திருடன் திக்குமுக்காடிப் போனான்.

பாபாவின் கருணையால் அவன் அழத் தொடங்கினான். அவரைப் பார்க்கக்கூட அவனால் முடியவில்லை. பாபா அவனது தலையைக் கோதிக் கொடுத்தார். அவன் அழுதான். அழுகிப் போயிருந்த அவன் உள்ளம் கரையத் தொடங்கியது.

சட்டென அவன் கண்ணைத் துடைத்துக் கொண்டான். பாபாவைப் பார்த்தபடி, "என்னை மன்னிச்சிடுங்க பாபா” என்று கூறிவிட்டு மீண்டும் ஓடினான்.

முதல் ஓட்டம் புறமுதுகிட்டு ஓடிய திருட்டு ஓட்டம். இதுவோ ஏதோ ஒன்றைப் புரிந்துகொண்ட ஓட்டம். பாபாவின் ஆன்மிக இருப்பு அவனது வேண்டாத ஈர்ப்புகளை விழுங்கிவிட்டதோ!

அன்று முதல் அவனுக்குச் சேராத எதைத் தூக்கினாலும், நாய் ரொட்டியைத் தூக்கிச் செல்வதாகவே அவனுக்குத் தோன்றும். அவமானமாக இருக்கும்.

அவன் தனது கடந்த காலச் செயல்களுக்காக நாணத் தொடங்கினான். 'நாணுவது இவ்வளவு நலத்தைத் தருமா? சிந்தித்தால் இத்தனை சுகமா?' என்று வியந்தான்.

அவன் தனிமையில் இருக்கும்போதெல்லாம் 'சோர்பாபா' என்ற குரல் அவனது காதுகளில் ஒலிக்கத் தொடங்கியது.

அவ்வப்போது திருட ஆசை வரும். உடனே 'நில், சோர்பாபா' என்ற மதுரக் குரல் அவனை அடக்கிவிடும். அந்த வாக்கியத்தை அவனே வாய்விட்டுச் சொல்லிப் பார்த்துச் சுகமடைவான் - 'நில், சோர் பாபா நில்'.

'தன்னிடமிருந்த அனைத்தையும் பாபாவால் எப்படித் தர முடிந்தது? அப்படிக் கொடுத்த பிறகும் அவர் ஆனந்தமாக இருந்தார் என்றால், அந்தப் பொருள்களைவிட உயர்ந்த ஒன்று அவரிடம் உள்ளது.'

அது என்ன? அவனுக்குத் தலை சுற்றியது. திடீரென்று ஒரு நாள் அவனுக்கு அது புரிந்தது.

'அது - பாபாவின் கருணை! பாபாவின் பொருளைக் களவாடத் தெரிந்த எனக்கு அவரது கருணையைக் கவரத் தெரியவில்லையே' என்று அவன் தவித்த தவிப்பு, அவனுக்கு மட்டுமே புரியும்!

'முடியாது, இனியும் காலம் கடத்த முடியாது. என் பாவங்களைக் கரைக்க அது ஒன்றே வழி' என ஒரு நாள் புறப்பட்டான்.

பாபாவிடம் சென்று அடைக்கலமாகிச் சேவை செய்ய ஆவல் கொண்டான். ஆனால், அவனுக்குத் துணிவு வரவில்லை.

பாபாவின் கருணைதான் தனது சம்சார சாகரத்தின் கலங்கரை விளக்கம் என்று எண்ணியெண்ணி, தன் வாழ்நாட்களையும் எண்ண ஆரம்பித்தான்.


இறைவன், இயற்கை, இறைமனிதர்கள் எங்கிருந்தாலும், அவற்றையும் அவர்களையும் தரிசிக்க, சுவாமி விவேகானந்தர் அங்கு சென்றுவிடுவார்.

அவ்வாறு சுவாமிஜி 1888-இல் தமது பரிவ்ராஜக நாட்களில் ரிஷிகேசம் சென்றார். அங்கே ஒரு துறவி மிகுந்த ஆன்ம தாகத்துடன் இறைவனுக்காக ஏங்குகிறார் என்று அறிந்து, அவரைக் காண அவரது குடிலுக்குச் சென்றார் சுவாமிஜி.

இருவரும் கலந்துரையாடினர். பல்வேறு ஆன்மிகக் கருத்துகளில் மூழ்கி முத்தெடுத்தனர்.

சுவாமிஜி தமது நூல் ஒன்றில் வைத்திருந்த பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிறிய திருவுருவப் படத்தைத் துறவி பார்த்தார். உடனே அவர், "சுவாமிஜி, இவர் யார்? இவரது படத்தை நான் பார்த்திருக்கிறேனே!” என்று கேட்டார்.

"இவர்தான் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர். அவரது சீடர்களுள் அடியேனும் ஒருவன்.... மகராஜ், இவரது புகைப்படத்தை எங்கு பார்த்தீர்கள்?” என்று ஆர்வத்துடன் வினவினார் சுவாமிஜி.

"பவஹாரி பாபாவின் ஆசிரமத்தில் பார்த்திருக்கிறேன்” என்று அவர் கூறியதும் சுவாமி விவேகானந்தர் குதூகலமடைந்தார்.

"என்ன, பவஹாரி பாபாவா? அந்த அற்புதமான யோகியை உங்களுக்குத் தெரியுமா? நான் அவரைத் தரிசிக்க மிக ஆவலாக உள்ளேன்” என்றார் சுவாமிஜி. பின் இருவரின் உற்சாக உரையாடலும் பாபாவையே சுற்றிச் சுற்றி வந்தது.

முடிவில் சுவாமிஜி, "மகராஜ், பாபாவின் ஆசிரமத்தில் ஒரு திருடன் வந்தபோது, பாபா அவரைக் கடவுளாகவே பார்த்ததாகக் கேள்விப்பட்டேன். அது பற்றி உங்களுக்குத் தெரியுமா?” என்றார்.

"ஆமாம் சுவாமிஜி, அவன் ஒரு பலே திருடன்” என்று கூறி அந்தத் திருடனின் கதையைக் கூறினார்.

எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட சுவாமிஜி, "பார்த்தீர்களா, ஒவ்வொருவரிடத்திலும் தெய்விகம் உள்ளது. மகான்கள் அதை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறார்கள்...!” என்றார் கண்கள் கசிய.

சிறிது மௌனத்திற்குப் பின் சுவாமிஜி கேட்டார்:

"ஆமாம் மகராஜ், ஆசிரமத்தில் திருடிய அந்தத் திருடன் பின்னாளில் என்ன ஆனான்?”

அத்துறவி அமைதியாக, "அவன் இப்போது உங்கள் முன்னே அமர்ந்திருக்கிறான்” என்றார் குரல் தழுதழுக்க. விவேகானந்தர் வியப்பில் ஆழ்ந்து நின்றார்.

சுவாமி விமூர்த்தானந்தர்

08 ஏப்ரல், 2021

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur