சத்தியத்திற்காக ஒரு சமுதாயப் புரட்சி
ஸ்ரீராமகிருஷ்ண ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இந்த அருமையான கதையைப் படிப்பது நமது பக்தியை மேலும் பெருக்கும்.
அனைவரும் சமம் என்பது ஆன்மிகத்தின் ஆணிவேர். அதை அறிவதுதான் ஆன்மிகப் புரட்சி.
இங்கே நான்கடி உயரமுள்ள ஒரு புரட்சிக்காரன், 400 வருடமாய் மண்டிக் கிடந்த ஒரு நச்சு மரத்தின் வேரைத் தன் பிஞ்சுக் கையால் பிடுங்கி எறிகிறான்.
இன்று, தாழ்த்தப்பட்டவர்களுடன் ஆலயப் பிரவேசம் செய்வதும், அவர்களுடன் சமபந்தியில் உண்பதும், பிற்படுத்தப்பட்டவரை மணப்பதும் சமுதாயப் புரட்சி என்று சொல்கிறோம்.
ஆனால், சுமார் 186 வருடங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்தின் ஒரு குக்கிராமத்தில் ஒரு புரட்சி நடந்தது. இதோ, அக்கிராமம் உங்களை வரவேற்கிறது.
“நிஜமாவா கதாய்! இந்த ஏழைக்கு நீ அந்தப் பாக்கியத்தைத் தருவாயா, மகனே?” சத்தியமாகத் தருவேன் தனியம்மா (Dhani). நீயும் எனக்கு ஓர் அம்மாதானே!” என்றான் கதாய் என்ற கதாதரன்.
வங்காளத்தின் ஆசாரம் மிக்க பிராமணச் சிறுவன், தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தப் பெண்ணிடமிருந்து தன் உபநயனத்தின்போது ‘அதை’ ஏற்க முடியுமா?
‘ஒரு பிராமணச் சிறுவனுக்கு அதைத் தர, உனக்கு என்ன தைரியம்?’ என்று மேல்ஜாதியினர் சீறி எழுந்தால் என்ன செய்வது? 7 வயது கதாயிடம் 50 வயது தனிக்கு இப்படிக் கேட்க எப்படித் தோன்றியது?
இருக்காதா பின்னே? கதாய் பிறந்தபோது பிரசவம் பார்த்த மருத்துவச்சியே தனிதானே!
தொப்புள் கொடியை அறுத்தபின் தாய் சந்திரமணியைக் கவனித்துவிட்டு, சிசுவைப் பார்த்தால்...,
குழந்தையைக் காணோமே என்று அலறுவதற்கு முன்பே, குழந்தை ‘அவனா’கிக் கிடந்தானே!
ஆம், சிவனின் சாயலில் சிசு.
சந்திரமணியின் குடிசையிலிருந்த அடுப்படிச் சாம்பலில் புரண்டிருந்த இவன் சிவனின் அம்சமோ என்று தனிதான் முதன் முதலில் கருதினாள்.
கதாயைப் பார்க்கும் போதெல்லாம், தன் தோழியின் கடைசி மகன் அவன் என்று மட்டுமல்ல, கடைசி வரை தன்னைக் காப்பான் என்ற நம்பிக்கையும் தனிக்குத் தோன்றும்.
கதாயின் உபநயனத்தின்போது ஆண்டவன் அதைத் தரும் வாய்ப்பை வழங்கினால், தன் வறுமையைக் காட்டாமல், அன்பின் திரட்சியாகத் தான் வழங்கப் போகும் பரிசுகள் இருக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டாள் தனி- நோன்பு நோற்கும்போது காப்பு கட்டிக் கொள்வது போல்!
கதாய் ஆனந்தச் சிறுவன். ஆனந்தம் இல்லாத இடத்தில் அதை விதைப்பான்; அதிகம் இருக்கும் இடத்தில் அதன் தரத்தைக் கூட்டுவான். அதனால்தானோ, காமார்புகூரில் வந்து தங்கும் சாது சந்நியாசிகளுக்கு அவனை மிகவும் பிடித்தது!
அந்தச் சத்திரம் தர்மதாஸ் லாஹா என்ற செல்வந்தருக்குச் சொந்தமானது. அவருக்கோ கதாய் மிகவும் செல்லம். சத்தியவானாக வாழ்ந்து மறைந்த அவரது உயிர்த் தோழர் க்ஷுதிராமின் கடைக்குட்டி ஆயிற்றே, கதாய்!
அவனைப் பாட வைத்து, தன் பிள்ளைகளுடன் விளையாட வைத்து, அவனது சேஷ்டைகளையும் மழலைச் சொற்களையும் ரசிப்பவர் அல்லவா அவர்!
அந்தச் சத்திரத்தில் எல்லாச் சம்பிரதாயங்களைச் சேர்ந்த துறவிகளும் வந்து தங்கிச் செல்வார்கள்.
இன்று கிருஷ்ண பக்தத் துறவி ஒருவர் வந்தால், நாளை ஒரு ராம சாது வருவார். வேதாந்தியும் வருவார்; சித்தாந்தியும் அங்கு செல்வார். அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வார்களா என்பது தெரியாது.
ஆனால் கதாயிடம் எல்லோரும் உருகிப் போவார்கள். ராமசாது கதாய்க்கு நாமமிட்டு அழகு பார்த்தால், கிருஷ்ண சாது அவனுக்குப் புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுத் தருவார்.
ஒரு தியான யோகிக்கு, கதாய் ‘துனி’ வளர்க்க அக்னி மூட்டித் தந்தால், வேதாந்த மார்க்கத் துறவி அவனுக்கு கௌபீனத்தைக் கட்டிவிட்டு தியானம் செய்யப் பழக்குவார்.
எல்லோரிடமிருந்தும் சிறந்ததைக் கற்றுக்கொள்ளும் கதாயை யாருக்குத்தான் பிடிக்காது!
அன்று துவாதசி. முதல் நாள் ஏகாதசி தினத்தன்று அந்த சாது முழு நாளும் உபவாசம் இருந்தார்.
கதாய் அவருக்காகத் தன் வீட்டிலிருந்து துளசி தீர்த்தமும் உணவும் கொண்டு வந்து தந்தான்.
ஜபமும் தியானமும் முடித்த பின் அந்தச் சாது ஆனந்தக் களிப்பில் ஒரு மந்திரத்தை ஓதினார்:
திலேஷு தைலம் ததினீவ ஸர்பி: ஆப:
ஸ்ரோதஸ்ஸு அரணீஷு சாக்னி: I
ஏவமாத்மா ஆத்மனி க்ருஹ்யதேஸௌ
ஸத்யேனைனம் தபஸா யோனுபச்யதி II
பொருள்: ‘எள்ளில் எண்ணெய் போல், தயிரில் வெண்ணெய் போல், நதியில் நீர் போல், அரணிக்கட்டையில் அக்னி போல் தன்னில் இருக்கும் ஆத்மனை சத்தியத்தாலும் தவத்தாலும் சாதகன் காண்கிறான்.’ -ச்வேதாச்வதர உபநிஷதம். 1-15
சாது தமது அடியாழத்திலிருந்து இம்மந்திரத்தை ஓதியபோது, மொழி புரியாவிட்டாலும் அந்த மந்திரத்திற்கு வசப்பட்டு நின்றான் கதாய். ‘வாச்சியார்த்தம்’ அறியாமல் போனாலும் ‘பாவார்த்தம்’ அவனுக்குப் புரிந்தது.
“செல்வா! ரிஷிகளும் முனிவர்களும் பரம்பொருளை அடைய எப்படியெல்லாம் தவமியற்றினார்கள் தெரியுமா? இந்தக் கலிகாலத்தில் நாம் சத்தியத்திலிருந்து பிறழாமல் வாழும் ஒரு தவத்தைச் செய்தாலே போதும், தெய்வத்தை உணரலாம். மகனே, அதனால் எப்போதும் நீ உண்மையே பேசு” என்று கூறி கதாயின் சிரசில் கை வைத்து ஆசி கூறினார் சாது.
விதை முளைவிட்ட சுகம். கதாயின் கண்கள் துடித்தன.
இப்படி பல மகான்கள் தங்கள் அனுபவங்களை கதாயிக்கு அள்ளி அள்ளி வழங்கினார்கள்!
கதாயிக்கு ஒன்பது வயது. அவனது தந்தை திடீரென இறந்துவிட்டதால், மூத்த அண்ணன் ராம்குமார் குடும்பப் பொறுப்பைக் கவனித்து வந்தார்.
கதாதரனுக்கு உபநயனம் நடத்த முடிவானது. ஏற்பாடுகள் தடபுடலானது. ஊரே ஒவ்வொரு நாளும் அந்தத் தினத்தை ஆவலுடன் எதிர்பார்த்தது.
தனியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவள், ஒரு நாள் கொல்லைப்புறத்தில் ஏதோ வேலை பார்த்தபடி, “கதாய், என் கண்ணே, உனக்குப் பூணூல் போடப்
போகிறார்களாமே...?” என்று கேட்டாள்.
தனி என்ன கேட்க வருகிறாள் என்பதைப் புரிந்து கொண்டு கதாய் உடனே, “தனிமா, நான் உன்னையும் மறக்க மாட்டேன். உனக்கு நான் கொடுத்த சத்தியத்தையும் மறக்க மாட்டேன்” என்றான் கம்பீரமாக.
உடனே தனி அவனது முகவாயைப் பிடித்து முத்தமிட்டாள். அப்போது அவள் சிந்திய ஒற்றைத் துளிக் கண்ணீர் அவனது வலது கையில் விழுந்தது.
வங்காளத்தின் புரோகிதர்கள் மத்தியில், ராம்குமாரின் வார்த்தைதான் பிரமாணம். உபநயனத்தின்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும், அதன் தத்துவம் என்ன? என்பதையெல்லாம் கதாயிக்கு அவர் சொல்லிக் கொடுத்தார்.
கதாய் உடனே அவற்றைக் கிரகித்துக் கொண்டான்!
உபநயனச் சடங்கின் முடிவில், முப்புரிநூல் அணிந்தவன் தன் தாயிடம் சென்று பிக்ஷை ஏற்க வேண்டும். அதைப் பற்றி ராம்குமார் சொல்ல வந்தபோது கதாய், “அண்ணா, உபநயனம் முடிந்ததும் முதலில் தனியம்மாவிடமிருந்தே நான் பிக்ஷை வாங்குவேன்” என்றான்.
ராம்குமார் பதறி, கன்னத்தில் போட்டபடி, “ரகுவீரா! ரகுவீரா! என்ன பேசுகிறாய் நீ? அபச்சாரம்!” என்றார்.
“இல்லையண்ணா, தனியம்மாவிற்கு நான் வாக்கு தந்துள்ளேன்” என்றான் கதாய் தீர்மானமாக. கதாயின் பிடிவாதம் ராம்குமாருக்குத் தெரியும்.
அதனால் மேலும் பேச அவர் விரும்பாமல், “சரி, இதெல்லாம் பெரியவர்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்...” என்றார்.
கதாய் அவரது கண்களை நோக்கியவாறே, “அண்ணா, ஸ்ரீராமரிடம் காட்டிற்குப் போகாதே என்று அவரது அம்மாக்கள், மந்திரிகள் என எல்லாப் பெரியவர்களும் கூறினர். பெரியவர்களின் பேச்சைவிட, ஸ்ரீராமர் - தன் வார்த்தையைக்கூட அல்ல - தன் தந்தையின் வாக்கைக் காப்பாற்றத்தான் காட்டிற்குப் போனார், இல்லையா?....”
“நானும் தனியம்மாவிற்குக் கொடுத்த வாக்கைக் காக்கத் தவறினால் சத்தியம் தவறியவன் ஆகிவிடுவேன். சத்தியத்திலிருந்து விலகிய ஒருவனுக்குப் பூணூல் அணிய என்ன யோக்கியதை இருக்கிறது?” என்று கதாய் முகம் சிவக்கக் கேட்டான்.
தம்பியின் முகத்தைக் காண்பதைத் தவிர்த்தார் ராம்குமார். தம்பி கூறுவது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஊருக்கு உபதேசிக்க வேண்டிய தானே, இப்படி மரபு மீறும் இந்த அபச்சாரத்தை எப்படி ஏற்பது?
தன் குடும்பத்தை ஊரார் ஒதுக்கிவிடுவார்களோ? தம்பியின் இந்தப் பிடிவாதத்திற்கு இடம் கொடுத்தால் இனி இந்த ஊரில் புரோகிதம் செய்ய முடியாதே என்று தர்மசங்கடத்தில் ஆழ்ந்தார் ராம்குமார்.
மேலும், யார் எது கூறினாலும் தன் தம்பி யாரையும் பொருட்படுத்தாது, தனக்குச் சரி என்று பட்டதைச் செய்து முடிப்பவன் ஆயிற்றே என்றும் குழம்பினார்.
தன் தந்தைக்குச் சமமான தர்மதாஸ் லாஹாவிடம் ஆலோசனை கேட்க அவரிடம் சென்றார் ராம்குமார்.
எல்லாவற்றையும் கேட்ட தர்மதாஸ் அமைதியாக, “ராம், எனக்கு கதாய் பற்றித் தெரியும். அவன் ஒரு லட்சியவாதி, பிடிவாதக்காரனல்ல” என்றார்.
“ஆனாலும் ஐயா, முதல் பிக்ஷை தாயிடமிருந்து பெறுவதுதான் மரபு. ஆனால் இவனோ வேறு ஜாதிப் பெண்ணிடமிருந்துதான் பெறுவேன் என்கிறானே!”
“ராம், அவன் ஏன் அப்படிச் சொன்னான் என்பதைக் கவனித்தாயா?” என்று தர்மதாஸ் கேட்டார்.
“தனியிடம் வாக்கு தந்தானாம். வாக்கு மீறுபவன் பூணூல் அணியலாமா என்று பெரிய மனிதன் மாதிரி பேசுகிறான் ஐயா” என்றார் ராம்குமார் படபடப்புடன்.
கதாய் சத்தியத்தின் மீது கொண்டுள்ள பற்றை நினைத்து மகிழ்ந்தார் தர்மதாஸ். ராம்குமாரோ, சடங்குகளில் உடும்புப்பிடியாக இருந்தார்.
தர்மதாஸ் அமைதியாக, “கதாய் கூறுவது சரிதான். உலகில் வாழ்ந்தபடி உத்தமனைத் தரிசிக்கத்தானே உபநயனம் போன்ற சடங்குகள் வகுக்கப்பட்டன. தெய்வத்தைத் தரிசிப்பதற்கான நயனம்தானே உபநயனம்!” என்றார்.
“அது சரிதான் ஐயா, ஆனாலும் சம்பிரதாயம்..?” என்று ராம்குமார் இழுப்பதற்குள், “இல்லை ராம், கதாய் தனியிடமிருந்து பிக்ஷை பெறுவதால் உன் குடும்பத்திற்கு எந்த தோஷமும் வராது என நம்புகிறேன். இதுபோல் இதற்கு முன் சில இடங்களில் நடந்திருப்பதாகவும் கேள்விப்பட்டுள்ளேன்” என்றார்.
“ராம், இன்று உன் அப்பா இருந்திருந்தாலும் இப்படித்தான் செய்திருப்பார் என நம்புகிறேன். அதோடு, உபநயனம் ஏற்கும் பிள்ளையின் மகிழ்ச்சி அவனது மனநிறைவு ஆகியவை மிக முக்கியம், இல்லையா?” என்றார் அவர்.
ராம்குமார் ஒரு கணம் தனியை நினைத்துப் பார்த்தார்: ‘உடலால் அவள் காளியின் நிறம்; உள்ளமோ வாணி அமரும் பூவின் வண்ணம். சொந்த மகனைப் போல் கதாயிடம் எவ்வளவு பாசம் வைத்துள்ளாள்!’.
இவை யாவும் தெரிந்தாலும் ராம்குமாரால் முடிவெடுக்க முடியவில்லை. அவரது மனதில் சாஸ்திர விதிமீறல் என்பது சஸ்திரமாக உறுத்திக் கொண்டிருந்தது.
அன்று காமார்புகூர் கிராமமே திரண்டுவிட்டது.
ஊருக்கே செல்லப்பிள்ளையான கதாயிக்கு உபநயனம் என்றால் சும்மாவா?
பிரசித்தி பெற்ற வேத பண்டிதரான ராம்குமாரின் வீட்டு உபநயனம் என்பதால் சுற்று வட்டாரப் புரோகிதர்கள் யாவரும் அங்கு திரண்டுவிட்டார்கள்.
மங்கல வாத்தியமான, ‘ஷெனாய்’ ஒலிக்க ஆரம்பித்தது. முக்காடிட்டப் பெண்கள் ஆடி ஓடி வேலை பார்த்தார்கள். அந்தணர்கள் பாராயணம் செய்தார்கள். வாசலில் கோமாதா நின்றிருந்தாள் தன் கன்றுக்குட்டியுடன்.
கதாயிக்குக் குடுமி வைத்து, நெற்றியில் பட்டையாக விபூதி பூசப்பட்டிருந்ததால் அவன் ஜொலித்தான்.
புது வஸ்திரம் அணிந்து, வலது கையில் தண்டம், இடது கையில் கமண்டலத்துடனும் அவன் நின்றதைப் பார்த்தவர்கள் சாக்ஷாத் வாமனனோ இவன் என வியந்தார்கள்.
ஹோமத் தீ ஓங்கி வளர்ந்தது. ராம்குமார் சடங்குகளை நிறைவேற்றி வைத்தார். காயத்ரி மந்திரம் கதாதரனுக்கு உபதேசிக்கப்பட்டது. ஊர்ப் பெரியவர்கள் அவனை ஆசீர்வதித்தார்கள்.
பிக்ஷை ஏற்பதற்கான நேரம் வந்தது.
அதுவரை அமர்க்களமாக இருந்த அந்த இடத்தில் திடீரென ஓர் இறுக்கம் ஏற்பட்டது. விழா பரபரப்பில் சிறுவன் தான் கேட்ட ‘பிக்ஷை விவகாரத்தை’ மறந்திருப்
பான் என்று ராம்குமார் எதிர்பார்த்தார்.
தாய் சந்திரமணி தேவி மற்றும் பல தாய்மார்கள் கதாயிக்கு பிக்ஷையிடக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கதாயோ தனது தோளில் தொங்கிய துணிப் பையுடன் தனியம்மாவைத் தேடினான்.
தூரத்தில் தனியம்மா.., பயந்தவாறு அதே சமயம் ஆர்வத்துடன் தான் மறைவாகக் கொண்டு வந்திருந்த அரிசி, பழங்கள், காய்கறிகள், புஷ்பங்கள், புதுத்துணிகளுடன் காத்திருந்தாள்.
சிறுவன் ஆதிசங்கரன் ஓர் ஏழைப் பெண்ணிடமிருந்து காய்ந்து போன நெல்லிக்கனியை பிக்ஷையாகப் பெற்ற சம்பவத்தை, ஓர் உபந்நியாசத்தில் கேட்டிருந்தது தனிக்கு நினைவிற்கு வந்தது.
தான் அந்த ஏழைப் பெண்மணி, கதாய்தான் சங்கரன் என்று அவளுக்குத் தோன்றியது.
எல்லோரது பார்வையும் கதாய் மீதே இருக்க, கதாயின் திருஷ்டியோ சத்தியத்தின் மீதிருந்தது!
அவன் நேராக தனியம்மாவிடம் சென்றான்; அவளை வீழ்ந்து வணங்கினான். பிறகு எழுந்து நெஞ்சுக்கு நேரே கைகூப்பி நின்றான். ஆ, என்ன இது!
ஆசாரம் மிக்க ஒரு பிராமணச் சிறுவன், ஜாதியால் தாழ்த்தப்பட்ட ஒருத்தியிடம் மிக முக்கியமான சடங்கின்போது இவ்வாறு செய்ததைக் கண்டு எல்லோருக்கும் அதிர்ச்சி.
ஷெனாய் ஒரு கணம் நின்றது,
வாசலில் நின்றிருந்த கன்றுக்குட்டிகூட வாலாட்டுவதை நிறுத்தி, காதுகளைத் தூக்கி கதாதரனைக் காண, என்ன நடக்கிறது என்று பெண்கள் பரபரக்க, இதை ஏற்பதா என்று சில பிராமணர்கள் யோசிக்க, ராம்குமார் அவர்களைக் கண்டு அஞ்சி நிற்க,
தர்மதாஸ் லாஹா சிறுவனின் சத்திய நிஷ்டையைக் கண்டு, ‘இவன் நசிகேதனோ, துருவனோ, பிரஹலாதனோ’ என்று வாய் பிளந்து நிற்க,
சாதுக்கள், ‘கதாய் செய்வது சரியே’ என்று ஆசீர்வதிக்க....,
இவ்வாறான பலரது சஞ்சலங்களுக்கும் தவிப்புகளுக்கும் கதாயின் கணீரென்ற ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்ற மந்திரமே பதிலானது.
நடுங்கியபடி கதாயிக்கு பிக்ஷையிட்டாள் தனியம்மா. அவளது கண்களிலோ கங்கைத் துளிகள்! தன் இஷ்ட தெய்வமே, தனது எல்லாக் கர்மங்களையும் ஏற்பதுபோல் உணர்ந்தாள் போலும்!
கதாயின் சத்திய நிஷ்டை, தனியம்மாவின் அன்பு இரண்டையும் உணர்ந்த, வம்பளக்கும் சில புரோகிதர்கள்கூட வாய்பொத்தி நின்றது ஆச்சரியந்தான்! ‘தாலவ்ருந்தேன கிம் கார்யம் லப்யதே மலயமாருதே’ என்ற சாஸ்திர வசனத்திற்கேற்ப, - ‘(கோடையில்) அருளாளர்களின் அன்பு என்ற மலயமாருதமான குளிர்காற்று வீசுகிறது. அதன் முன்பு பனையோலை விசிறி போன்ற சமுதாய, சமயக்கட்டுப்பாடுகள் தேவையா?’ என்ற எண்ணம்தான் ராம்குமார் உட்பட வந்திருந்த சத்தான பிராமணர்களின் உள்ளத்தில் உதித்தது.
இது முறையா? என முறைத்த பெண்கள், தனி போல் தங்களுக்கு கதாயிடம் இவ்வளவு அன்பு இல்லையே என ஏங்கியதால் அவர்களின் நெஞ்சக் கற்கள் கரைந்தன.
இப்படி எல்லோரையும் வியக்க வைத்த அந்தச் சிறுவன் கதாய் யார்? ராமனாக வந்தபோது குகனை அரவணைத்தவர்,
கிருஷ்ணராக உதித்தபோது ஏழை இடைச்சிறுவர்களுடன் ஒன்றாக வளர்ந்தவர், இருவரும் ஒருவராக வந்துதித்து, இப்படிச் சத்தமில்லாமல் சமய - சமுதாயப் புரட்சி ஒன்றைச் செய்த அந்தச் சிறுவன் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரே.
பாரதத்திலேயே மிகப் பெரிய சந்நியாசப் பரம்பரையைத் தொடங்கிவைத்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
அதில் ஜாதி மட்டுமல்ல, சமயமும் கடந்த உலகின் பல்வேறு இன மக்களும் சேர்கிறார்கள்;
மக்களுக்குச் சேவை செய்து இறைவனை அடையும் மார்க்கத்தில் அவர்கள் விரைகின்றார்கள்.
அதற்கு தனியம்மா, நீ போட்ட பிக்ஷைதான் மூலவித்தோ!
(பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் நடந்த ஓர் அற்புத சம்பவத்தைக் கதையாக வடித்தவர் சுவாமி விமூர்த்தானந்தர்.)
சுவாமி விமூர்த்தானந்தர்
14 மார்ச், 2021
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்