கேள்வி: இந்தக் குடியரசு தினத்தில் எனக்கு 72 வயது ஆகிறது. இந்த வயதில் நான் குடியரசு தினத்தை எப்படி கொண்டாட முடியும்? -திரு. வி. சிவசங்கரன், நந்தியம்பாக்கம்.
பதில்: ஆஹா, உங்களுக்கு இந்த எண்ணம் வந்திருப்பதே பெரிய விஷயம். இது குடியரசு தினமே தனது கஷ்டத்தை நம்மிடம் கூறி வேண்டுவது போல் இருக்கிறது.
1930- இல் காந்திஜி பூர்ண ஸ்வராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர ஜனவரி 26-ஆம் நாள் விடுதலை நாளாக அறிவித்தார். அன்று மக்களிடம் காந்தியடிகள் கீழ்க்கண்டவாறு விடுதலை நாள் உறுதிமொழியை மேற்கொள்ளச் சொன்னார்:
"பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய்நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."
அடடா, என்ன பொருத்தமான உறுதிமொழி....! இது அன்றைக்கு மட்டுமா? இன்று நாம் பெற்றிருப்பதாக நம்பும் அரசியல் மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் நம்மோடு நிலைத்து நிற்க வேண்டும்; அவை நல்ல முறையில் நமக்குப் பயன் தர வேண்டும் என்றால், காந்திஜி கூறும் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்திலும் நம் கவனமும் பலமும் அதிகரிக்க வேண்டும்.
ஆனால் நமது இன்றைய நிலை என்ன?
♦ குடியரசு தினத்தில், தொலைக்காட்சிகளில் தேச விடுதலை வீர வரலாறுகள் காட்டப்பட்டால், நமது வீடுகளிலேயே தேசியக்கொடியைப் பறக்கவிட்ட பெருமை நமக்குக் கிடைக்கும் அல்லவா? ஆனால் அதை யார் நடத்துவது?
♦ 'குடியரசு தினத்தில், தொலைக்காட்சிகளில் கேளிக்கைகளைக் காட்டி அதன்மூலம் நமது குடியரசு தினத்தைக் கேலி செய்யும் எதையும் நான் பார்க்க மாட்டேன்'. - இப்படி ஓர் உறுதிமொழி நம்முள் பலர் எடுத்தாலே நம் டிவிக்கள் நம் பாரம்பரியப் பெருமையைச் சொல்ல ஆரம்பிக்கும். அந்நிய கலாச்சாரத்தை வேரறுக்க அதுவே ஒரு வாய்ப்பு ஆகிவிடும்.
♦ குடியரசு தினத்தை ஓய்வு தினமாக்கிக் கொண்டாடுவது ஒரு சரியான செயலா என்று நாம் யோசிப்போம். அந்தத் தினத்தில் தேசத்திற்காக ஒவ்வொருவரும், ஒவ்வோர் அமைப்பும் இதுவரை என்ன செய்திருக்கின்றன, இப்போது என்ன செய்கின்றன, இனி என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைப் பற்றிப் பெரிய அளவில் ஆலோசிக்க வேண்டும். அந்த ஆக்கப்பூர்வமான பணிகளில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் ஈடுபட வேண்டும்; அவற்றை அவ்வாறு ஈடுபடுத்த அரசு முன்வர வேண்டும்.
♦ குறைந்தபட்சம், குடிகளைக் கெடுக்கும் கடைகளை மூடச் சொல்லி அரசு அறிவித்தால் ஆனந்தம் அடைபவர்கள் அதிகம்.
ம்....., பொதுஜன, வெகுஜன மக்களின் ஆதங்கம்தான் இங்கு பதிவிடப்பட்டுள்ளது. சரி, உங்கள் கேள்விக்கான பதிலுக்கு வருகிறேன்.
♦ குடியரசு தினத்தில், சில குழந்தைகளுக்காவது நீங்கள் நம் உண்மையான வரலாற்றைச் சுவாரஸ்யமாகக் கூறலாம்.
♦ மகாகவி பாரதியாரின் விடுதலைப் பாடல்களை வாய்விட்டுப் பாடுங்கள். நீங்கள் பாடுவதால் உங்களைச் சுற்றியுள்ள சிந்தனை வட்டத்தில் சீரிய கருத்துகள் சேரும். குறைந்தபட்சம் சீரியல் அவலங்கள் உங்களைச் சீண்டாது.
♦ சுவாமி விவேகானந்தரின் தேசபக்த கருத்துகளை உங்களுடன் இருப்பவர்களுக்கு உற்சாகமாக எடுத்துச் சொல்லுங்கள்.
♦ இந்த வயதிலும் உங்களால் நாட்டு நலனுக்காக ஏதாவது நல்லது யோசிக்க முடியும் என்பதை இளம் வயதினருக்குக் காட்டுங்கள்.
♦ நல்ல, துடிப்புள்ள தேசபக்தி கொண்டவர்கள் ஆங்காங்கே பொது நலச் செயல்களைச் செய்து வருகிறார்கள்.
அங்கெல்லாம் சென்று நீங்கள் உங்களுடைய மனதாலும் உடலாலும் பங்கு கொள்ளுங்கள்.
ஐயா, நீங்கள் விவேகானந்தரை வாசித்திருப்பீர்கள். அப்படிப்பட்ட உங்களது எண்ணங்களுக்கு அதிக சக்தி உண்டு. அந்த எண்ணங்களின் சக்தியை வெளிப்படுத்துங்கள். விவேகானந்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
சுவாமி விமூர்த்தானந்தர்
26 ஜனவரி, 2021
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்