RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

சிந்தனைச் சேவை - 7

24.01.21 07:58 PM By thanjavur

சிந்தனைச் சேவை - 7

மனதை எப்போதும் உயர்ந்த நிலையிலே வைத்திருப்பது எப்படி? 

- திருமதி. ராஜராஜேஸ்வரி, காஞ்சிபுரம்.

பதில்: ‌ மனதை மேம்படுத்துவதற்கான உத்திகளை, நுட்பங்களை, techniques பற்றித் தெரிந்து கொள்வதைவிட, மனதைப் பற்றிய மேலான அறிவைப் பெறுவது மிக அவசியம். உயர் நிலையில் நம் மனதை வைத்திருக்க வேண்டும் என்று எல்லா சமயப் பெரியோர்கள் கூறி வருகிறார்கள்; சாஸ்திரங்களும் அவ்வாறே கூறுகின்றன. 

 

மனதை உயர்நிலையில் வைத்திருக்க மூன்று கவனங்கள் தேவை என்று தோன்றுகிறது:

 

    1. ஒவ்வொருவரும் முயன்று அடைய வேண்டிய உயர் மனநிலை என்று ஒவ்வொருவருக்கும் ஒன்றுள்ளது. அந்த மனநிலையிலிருந்து செயல்படும்போது அனைவரும் நல்ல முடிவெடுத்துத் திறம்படச் செயல்படுகிறார்கள். அது அவர்களுக்கும் பயனளிக்கிறது; பிறருக்கும்தான்.

 

    

பல நேரங்களில் நாம் மனதின் போக்கை அறியாமல் மனோ சக்தியை வீணாக்குகிறோம்; தேவையற்ற விஷயங்களில் அதைச் சிதறடிக்கிறோம் என்று சுவாமி விவேகானந்தர் எச்சரிக்கிறார்.

தனது உயர்ந்த மனநிலையை எவ்வாறு தக்க வைத்துக் கொள்வது என்று ஒருவர் எவ்வளவு விரைவில் கண்டுபிடிக்கிறாரோ, அந்த அளவிற்கு அவர் விரைவில் முன்னேறுகிறார்.

இதற்கானப் பயிற்சி: ♦  பிரார்த்தனை செய்யுங்கள்.

♦ உயர்ந்த விஷயங்களை வாசியுங்கள்; அதன்படி வசியுங்கள்.


 2. ஆசை, அலைச்சல், அதீதப் பற்று, தீவிர எதிர்பார்ப்பு, வருத்தம், இலக்கு இல்லாத போக்கு போன்றவை இல்லாதபோது மனது நன்றாகச் செயல்படுகிறது. அந்த மனநிலையை நாம் ஒவ்வொரு நாளும் அடிக்கடி சுவைக்கத் தெரிந்திருக்க வேண்டும். யாரெல்லாம் அது போன்ற நிலையில் கனிவுடனும் கம்பீரத்துடனும் இருக்கிறார்களோ, அவர்களுடன் இணக்கத்தில் இருக்க வேண்டும்.

இதற்கானப் பயிற்சி: ♦ புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் தொடர்ந்து சென்று நீங்களும் ஒரு ஜடப் பொருளாகவே மாறி விடாதீர்கள். Whatsapp-ற்குக் கவனம் கொடுங்கள்; ஆனால் Thoughts up-ற்கு உயிரைத் தாருங்கள்.

♦ உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு நாளில் சில நிமிடங்களாவது செலவழியுங்கள்.

3. 'இந்திரியாணாம் மனச்சாஸ்மி' அதாவது 'இந்திரியங்களில் நான் மனதாக இருக்கிறேன்' என்று ஸ்ரீகிருஷ்ணர் பகவத்கீதையில் கூறுகிறார். மனம் என்பது இறையம்சம் கொண்ட உயர்ந்த ஒன்று. அதைப் பற்றிப் புரிந்து கொள்ளாததால்தான் நாம் சர்வ சாதாரணமாக மனதைக் குறை கூறிக்கொண்டே அலைகிறோம்.

நம் மனதுடனான இணக்கத்தைப் பெற்றோம் என்றால், நம் மனதைப் போன்ற ஒரு நல்ல நண்பன் கிடையாது; அது போன்ற அருமையான குரு நமக்கு வாய்க்க முடியாது. மேன்மக்கள் தங்கள் மனதை உயர்நிலையில் என்றும் வைத்திருக்கப் பாடுபடுவார்கள். அதோடு, அவர்களைச் சேர்ந்தவர்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வார்கள்.

இதற்கானப் பயிற்சி: ♦சத்சங்கத்தில் ஈடுபடுங்கள்.

♦ உங்கள் தன்னம்பிக்கையே உங்களை தெய்வ நம்பிக்கைக்கு இட்டுச் செல்லும்.

சுவாமி விமூர்த்தானந்தர்

24 ஜனவரி, 2021

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur