RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

சிந்தனைச் சேவை

23.01.21 08:20 PM By thanjavur

கேள்வி - 6

கேள்வி 6: இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 - வது பிறந்த நாள். அவரிடமிருந்து இன்றைய இளைஞர்கள் கற்க வேண்டிய முக்கியமான பாடங்கள் என்ன? -திரு. இளமாறன், மாரியம்மன் கோவில், தஞ்சாவூர்.

பதில்: நேதாஜியிடமிருந்து இளைஞர்கள் மட்டுமல்ல, எல்லோரும் கற்க வேண்டிய பாடம் பல உண்டு. அவற்றுள் முதலில் வருவது ஆன்மீகம் தழைத்தோங்கும் பாரதத்தின் மீதான அவரது தேசபக்தி.

  

அடுத்து, நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அப்போதிருந்த  புல்லுருவிகளிடம் அடிபணியாதது,

  

மூன்றாவது, தன்னலமற்ற, விசாலமான நோக்கு கொண்ட அரசியல் பார்வை. இது போல் பல  தீவிரமான நற்குணங்கள் உள்ளன.

  


பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரிடமும் சுவாமி விவேகானந்தரிடமும் சிறுவயது முதலே பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்த நேதாஜிக்கு மேற்கூறிய குணங்கள் இருந்தது இயல்புதான். வாலிப வயதில் அவர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து துறவியாகவும் முயன்றார் என்பது அருமையான ஒரு தகவல்.

    

இன்று ஒருவர் முன்னேறினால் அவர் மட்டுமே பயனடைகிறார். அதுவும் ஆயிரக்கணக்கான மக்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவர்கள் மீதேறி ஒருவர் முன்னேறும் சுயநலம் என்ற அவலநிலை உள்ளது.

    

நேதாஜி என்றாலே மரியாதைக்குரிய தலைவர் என்று பொருள். அந்தத் தலைவர் வாலிப வயதில் தனது ஐசிஎஸ் என்ற உயர்ந்த படிப்பைத் தூக்கிப்போட்டுவிட்டு விடுதலை வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

    

அந்த நேதாஜி கூறினார்: 'நான் முன்னேறினால், என் நாடு முன்னேறும்'. அவரது முன்னேற்றம் என்பது தனிப்பட்ட மனிதனின் வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளும் சுயநலமல்ல.

    

'நீயும் முன்னேறு; உன்னை சேர்ந்தவர்களையும் முன்னேற்று' என்ற சுவாமி விவேகானந்தரின் உபதேசத்தை உணர்ந்ததால் நேதாஜி அவ்வாறு கூறினார்.

இது அனைவரும் அவரிடமிருந்து கற்க வேண்டியது.

    

நேதாஜியின் அறிவுக்கூர்மையும் நாம் கற்க வேண்டியதுதான். இந்திய இளைஞர்கள் என்றாலே முட்டாள்கள் என்று நம்பினார் ஓர் ஆங்கிலேய ஆசிரியர்.  மாணவரான நேதாஜியிடம் அவர், "ஸ்டேஷன் மாஸ்டருக்கும் ஸ்கூல் மாஸ்டருக்கும் என்ன வித்தியாசம்?" என்று சம்மந்தமில்லாமல் திடீரென்று கேட்டார்.

    

சுபாஷ் சற்றும் தயங்காமல், 'The Station master minds the train, whereas the school master trains the mind' என்றதும் ஆங்கிலக்கொட்டம் அடங்கியது.

    

அன்பர்களே, நேதாஜி போன்றவர்களை நாம் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது தேசிய வரலாற்றுப் பிழை. அவரது வரலாற்றை நாம் பள்ளியில் படிக்காதது யாருடைய குற்றம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

    

இனிமேலாவது நேதாஜி போன்ற தகுதியானவர்களை நம்  தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கத் தெரிந்து கொள்வோம். ஜெய்ஹிந்த்.

சுவாமி விமூர்த்தானந்தர்

23 ஜனவரி, 2021

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur