கேள்வி 3: நான் ஒரு ரமண பக்தன். மகரிஷியின் வழியில் ஆன்ம சாதனை செய்து வருகிறேன். என்னிடம் பலரும் நீ நல்லா இருக்கியா? என்று கேட்பார்கள். தன்னைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்ட ஒருவர்தானே, தான் எவ்வாறு இருக்கிறார் என்று சொல்ல முடியும்? ஓர் ஆன்மசாதகன் என்ற வகையில் இதற்கு நான் எவ்வாறு பதில் தருவது? - ஓவியர் கோவி, சென்னை.
பதில்: கோவி, முதலில் நான் ஒரு ரமண பக்தர் என்று சொல்வதற்குப் பதிலாக 'ஸ்ரீரமண மகரிஷியின் பக்தன் நான்' என்று மாற்றிச் சொல்லிப் பாருங்கள். நான் என்பதைப் பின்னுக்குத் தள்ளிப் போட்டதால் ரமணர் உங்களிடத்தில் மகிழ்வார்.
நல்லா இருக்கியா என்று நம்மிடம் பலர் கேட்பது ஒரு சடங்கு. ஜம்முனு இருக்கேன் என்று பலரும் சொல்வது ஒரு ஜாலியான பொய்.
பெரியோர்கள் நம்மைப் பார்த்து நல்லா இருக்கியா என்று கேட்டால், நல்லா இரு என்று அவர்கள் நம்மைப் பார்த்து சொல்கிறார்கள் என்பதுதான் உண்மையான அர்த்தம். நல்லா இருக்கியா என்று துறவிகள் கேட்கும் கேள்வியானது அவர்கள் மேற்கொண்டுள்ள வேள்வியின் பிரசாதமாக நல்லா இரு என்று நமக்கு அவர்கள் வழங்கும் ஆசி அது.
ஆழமாக வேதாந்தம் கற்றவர்கள் ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்துக் கொள்ளும்போது 'ஸ்வஸ்தி வா?' ( ஸு + அஸ்தி)- நீ உனது ஆன்மீக இருப்பில், ஆன்மீக உணர்வு நிலையில் பாதுகாப்பாக இருக்கிறாயா? என்று தங்களுக்குள் கேட்டுக் கொள்வார்கள். உணர்வு நிலையில் 'தான் ஆன்மா' என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதால், அந்தக் கேள்வி ஆன்ம அனுபவத்தில், ஆண்டவனுடனான இணக்கத்தில் அவர்களை மேலும் தூண்டுகிறது.
பரமசிவன் கழுத்திலிருந்து சௌக்கியமா என்று கருடனிடம் பாம்பு கேட்டது. யாரும் இருக்கும் நிலையில் இருந்தால் எல்லாம் சௌக்கியமே என்று குண்டலினி சக்தியை, அதாவது விழிப்புற்ற சக்தியைக் குறிக்கும் பாம்பு கூறியது.
மக்களுள் பெரும்பாலோர் சுகம் - துக்கம் போன்ற உணர்ச்சிகளின் வசப்பட்டே வாழ்கிறார்கள். ஆனால் உணர்ச்சிகளைக் கடந்து உணர்வுகளைக் காண ஆன்மீகம் நம்மைத் தூண்டுகிறது.
இந்த விளக்கம் புரிகிறது சுவாமி, ஆனால் இதில் எங்களுக்கு அனுபவம் இல்லையே. நாங்கள் கடைப்பிடிக்கும்படியாக எங்களுக்கு விளக்குங்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
'என்னை நன்றாகப் படைத்தனன், தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே....' என்று திருமூலர் இறைவனிடத்தில் நன்றி மிக்கவராகப் பாடினார். அதன் பொருள் என்னவென்றால், இன்று வாழ்க்கையில் எல்லா வகையிலும் அல்லது ஏதோ ஒரு வகையிலாவது நல்ல முறையில் நாம் இருக்கிறோம் என்றால் அதற்கு மூல காரணம் இறைவன்தான். அந்த நன்றியுணர்வை வைத்திருப்பவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் நன்றாகவே இருப்பார்கள்.
கோவி, இனி யாராவது உங்களிடம் ஹவ் ஆர் யூ? என்று கேட்கும்போது "இறைவன் நன்றாகவே என்னை வைத்திருக்கிறார்" என்று சொல்லிப் பாருங்கள். உங்களை வெறுமனே நலம் விசாரித்தவர் உங்களது உண்மையான நலம்விரும்பியாக மாறுவார்; இறைவன் அவரை அவ்வாறு மாற்றுவார்.
சுவாமி விமூர்த்தானந்தர்
20 ஜனவரி, 2021
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்