RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

உணர்வூட்டும் கதைகள் - 9

06.09.21 08:43 PM By thanjavur

உணர்வூட்டும் கதைகள் - 9

அலையை அல்ல, கடலை கவனி!

யோகத்தில் நின்று தொழில்களைச் செய்! என்ற கீதைவரியை நினைவுபடுத்தும் கதை இது.

  மரியாதைக்குரிய சார், ’ - (2000 +2 , )’.

  இந்த எஸ். எம். எஸ்-ஐப் பார்த்த வாசு சார், ‘ஓ என் ராஜன் தான், 10 வருடங்கள் ஓடிவிட்டன. எப்படி இருக்கிறானோ!’ என்று எண்ணிக் கொண்டே ‘எனது பழைய முகவரியில் மாலையில் பார்க்கலாம்’ என்று பதில் அனுப்பினார்.

  வீட்டிற்குப் புறப்பட்ட வாசு சார் ஸ்கூட்டரை உதைத்ததும் வேகமாகப் புகை வந்ததுபோல், ராஜனின் நினைவுகள். வழியில் ஒரே பரபரப்பு, வெக்கை, எங்கும் இரைச்சல்- இப்படித்தானே ராஜனும்...

‘சிக்னல்’ வந்தது.

  ‘ராஜன்தான் அவருக்கு எத்தனை கஷ்டங்களைத் தந்தான்! எத்தனையெத்தனை தர்மசங்கடங்களில் நெளியவிட்டான்! அவன் ஏன் இப்போது வருகிறான்?

  பணத்திமிரும் வாலிப முறுக்கும் மிகுந்திருந்த அவனா இன்று விஞ்ஞானி...!’

  +2 படித்தபோது அவன் அடித்த அரட்டை, செய்த கிறுக்கு, கோமாளித்தனங்கள் எத்தனை எத்தனை! பல மாணவிகள் அவனால் சங்கடப்பட்டார்கள். மாணவர்கள்கூட பயத்தால் அவனுக்கு ஜால்ரா போட்டார்கள்.

  மதிப்பெண்கள் குறைந்த மாணவர்கள் சிலர் ஒரு நாள் வாசு சாரிடம் வந்து, சார், ராஜன் அடிக்கிற லூட்டியால்தான் எங்க மார்க் கொறஞ்சது. அவன அடக்கி வையுங்க சார், ப்ளீஸ்..."  என்றனர்.

  வாசு சார் அவனுக்குப் புத்தி கூறியும் அவன் மாறவில்லை. ‘என்னையா போட்டுத் தர்றீங்க..?’ என்ற அவனது மிரட்டலில் அந்த வாலிபர்கள் ‘பையன்கள்’ ஆகிப் போயினர்.

  ராஜன் பள்ளி நிர்வாகிகளில் முக்கியஸ்தரின் மகன். அவர் அரசியலிலும் ஆள் பலம் மிக்கவர். அவன் மீதான புகார்களை யார்தான் கண்டு கொள்வார்கள்?

  எல்லோரும் அவனிடமிருந்து விலகி நின்று எரிச்சலுடனும் இயலாமையுடனும் வேடிக்கை பார்த்தனர். ஆனால் வாசு சார் மட்டும்தான் ராஜனைப் புரிந்துகொள்ள முயற்சித்தார்.

  வாலிபத்தில் தத்தளிக்கும் அவனது ஹார்மோன் குளறுபடி, அதிக சுதந்திரம், அவனைச் சிறுபிள்ளையாகவே நினைத்துக் கொஞ்சும் பெற்றோர்கள் - இவற்றையெல்லாம் அவர் நினைத்துப் பார்த்தார்.

  அவனை முறைப்படுத்த வழி நாடினார் வாசு சார்.

  ‘பாவத்தை வெறுத்திடு; பாவியை அல்ல!’ என்ற சுவாமி விவேகானந்தரின் செய்தியை நெஞ்சில் ஏந்தியிருந்தார் வாசு சார். அதனால் அவர் ராஜனிடம் பொறுமையாகப் பேசுவார்.

  எனவே அவரை ‘நிர்வாகத்திற்குப் பயந்தவர்’ என்று பலர் முத்திரை குத்தினர்.

  ராஜன் அப்போதும், நீங்க நல்லாக் கதை சொல்றீங்க. ரெகுலரா ராமகிருஷ்ண மடத்துக்குப் போறீங்க இல்ல..? சாமியாரெல்லாம் பள்ளிக்கு வந்தா இப்படித்தான்...!" என நக்கலாகச் சொல்லிச் சிரிப்பான்.

மிஸ்டர் வாசு, ராஜன் உங்களை இப்படி மட்டமா பேசறான், நீங்களும் அதக் கேட்டுக்கிறீங்க..." என்று ரேவதி டீச்சர் ஒருமுறை உசுப்பேற்றினார்.

வாசு சாருக்குக் கோபம் அலையாகப் பொங்கியது.

  அதே தினம் சில ஆசிரியர்களிடம் அவன் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டான். அவனைக் கண்டித்ததற்கு, அவனும் அவர்களது குறைகளைச் சத்தமிட்டுச் சொன்னான்.

  வாயடைத்துப் போன ஆசிரியர்கள் வேறு வழியின்றி வாசு சாரிடம், நீங்கதான் அந்த ராஸ்கலின் க்ளாஸ் டீச்சர். ஏதாவது செய்யுங்க சார்" என்றனர்.

  வாசு சார் ராஜனிடம் கோபப்பட்டார். மனம் நொந்து போன வாசு சார் அன்று மாலையில், அவரது  வழிகாட்டியான நந்தானந்தஜி சுவாமிகளைத் தரிசித்தார்.

  சுவாமிகள் அவரைப் பலவாறு தேற்றினார்:

  உலகில் பக்தன் எப்படி இருக்கணும் தெரியுமா?

  ‘...கலங்காத நெஞ்சுடைய ஞானதீரர் கடவுள்,

  உனைக் காணவே காயம் ஆதி புலம் காணார்’ என்று தாயுமானவர் சொல்கிறார்.

  கடவுளை மட்டும் நம்பும் தைரியசாலி எப்படி இருப்பான் தெரியுமா வாசு? கடவுளைக் காண வேண்டும் என்பதற்காகவே, வேறு எதையும் அவன் காண மாட்டான். எதிரில் வரும் ஒருவனின் உடலாலும் மனதாலும் புலன்களாலும் செய்யக்கூடிய எதிலும் அவன் மயங்க மாட்டான்; கலங்கமாட்டான்.

  வாசுதேவா, நீ ஓர் ஆசிரியன். உன் மாணவர்களை பகவானாகக் கருதி சேவை செய்யணும். அதற்கு இந்தப் பயிற்சி நிச்சயம் உதவும்."

  வாசு இதைக் கேட்டுத் தன் இயலாமையை அல்ல, முயலாமையைப் புரிந்து கொண்டார்.

  அடுத்த நாளே ராஜன் மீதிருந்த வெறுப்பை விலக்கி விட்டு, அவனிடம் சகஜமாகப் பழகினார்.

  நாட்கள் சென்றன. மாதாந்திரப் பரீட்சையில் பலரும் காப்பியடிக்க முயன்றபோது, ராஜன் நான் படிக்கல, அதனால பரீட்சை எழுத மாட்டேன்" என்றான்.

100% ரிசல்ட்டுக்காக எல்லோரும் நிலை தடுமாறி ஓடும்போது இந்த ‘வெட்டிப் பய’ இப்படிப் பேசுகிறானே! என்ற எரிச்சல் மற்ற ஆசிரியர்களுக்கு.

ஆனால் வாசு சார் மட்டும் அவனது திமிரான பேச்சுக்குப் பின்புலமாக இருந்த நேர்மையைக் கண்டார்.

அது ஒரு நாள் விழிப்படைந்து அவனைக் காக்கும் என்று நம்பினார்.

சில தினங்களில் ராஜன் வாலாட்டியபோது பள்ளி முதல்வர், வாசு சாரிடம், நீங்க ஒரு புகார் கொடுங்க, அத வச்சி அவங்க அப்பா மூலம் இவன ஒரு வழிக்குக் கொண்டு வரலாம்..." என்றார்.

வாசு சார் வாய் திறக்கவிலை. அது போன்ற நேரங்களில் அவருக்குப் பிடித்த ஓர் ஓவியம் மனத்திரையில் தோன்றும்:

வில்லுடன் குறி பார்க்கும் அர்ஜுனன் படம் அது.

பல டூவீலர்களும் கார்களும் ‘ஹார்ன்’ அடிக்கும் இரைச்சல் கேட்டது. சிலர் திட்டினார்கள். வாசு சார் ராஜனைப் பற்றிய நினைவுகளிலிருந்தும், இரைச்சல் என்ற சிக்கலிலிருந்தும் - சிக்னலிலிருந்தும் கிளம்பினார்.

வீடு வந்துவிட்டது. கை கால் கழுவிவிட்டு, பூஜையறையில் ஸ்ரீராமகிருஷ்ணர் - ஸ்ரீசாரதாதேவி திருவுருவங்களை வணங்கிவிட்டு வந்தார் வாசு. அறையில் அடுக்கப்பட்ட நூல்கள். எதிரில் வில்வித்தை சித்திரம்.

வாசு சார் ‘காலிங் பெல்’ ஒலி கேட்டுக் கதவைத் திறந்தார். எதிரில் கம்பீரமாக ராஜன். வா ராஜன் வா..."

சார், என்னை ஞாபகமிருக்கா?"

மறக்க முடியுமா உன்னை?" என்று சிரித்தார்.

அடுத்த வாரம் மேற்படிப்புக்காக பிரான்ஸ் போறேன் சார்" என்று கூறிய ராஜன் வாசு சாரின் காலைத் தொட்டு வணங்கினான்!

வாசு சாரைப் பலரும் அப்படி வணங்குவதுண்டு. ஆனால் ராஜன் அப்படிச் செய்ததுதான் ஆச்சரியம்!

அந்த அந்த முரட்டு ராஜனா இன்று இப்படி?

ரொம்ப சந்தோஷமப்பா" என்று கூறி, அவனது ஆராய்ச்சியைப் பற்றிப் பல கேள்விகள் கேட்டுத் தன் அறிவை விரிவு செய்துகொண்டார் வாசு சார்.

ராஜன் புத்தகங்கள், பேனாக்கள் என்று அவருக்குப் பல பரிசுகளை அளித்தான்.

இருவரும் பலவிதமான ஆராய்ச்சிக் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.

வாசு சாரின் 48 வயதில் இன்றுபோல் மகிழ்ச்சியாக அவர் என்றுமே இருந்ததில்லை. அவர் தான் செய்த ஆய்வில் வெற்றி கிடைத்ததுபோல் ஆனந்தப்பட்டார்.

ராஜன் தயங்கியபடி, சார், நான் அவ்வளவு தொந்தரவு தந்தும் என் மேலே உங்களுக்குச் சிறிதும் வருத்தமில்லையா?" என்று கேட்டான் உதடுகள் துடிக்க!

நோ... நோ ராஜன். அப்போ உனக்குச் சிறிய வயசு. தட்ஸ் ஆல்."

குற்ற உணர்வு ராஜனைப் பிடுங்கித் தின்றது. இமைகளைத் துடைத்தபடி அவன், இன்னிக்கு நான் இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு, நீங்க என் மேல வச்சிருந்த நம்பிக்கைதான் காரணம்... சார், இன்னொரு கேள்வி."

நா கேள்வி கேட்டு நீ பதில் சொன்ன காலம் போயி, இப்ப இப்படியா ராஜன்...?" வாசு சார் சிரித்தபடி கேட்டார்.

நான் எவ்வளவோ துடுக்குத்தனம் செய்திருந்தும், நீங்க எனக்கு நல்லது செய்றதுல கொஞ்சமும் பின்வாங்காம இருந்தீங்க, சார். உங்களுக்கு அவ்வளவு பெரிய சக்தியைக் கொடுத்தது எது சார்?"

புத்தி சுவாதீனமில்லாமல் ஒருவன் சில காலம் கஷ்டப்பட்டான். உடன் இருந்தவர்களுக்கும் உதவியவர்களுக்கும் உபத்திரவம் கொடுத்தான்.

பிறகு அவன் தான் குணமடைந்ததும் வருத்தப்பட்டு, ‘நான் எப்படியெல்லாம் நடந்து கொண்டேன்?’ என்று கேட்பது போல் கேட்டான் ராஜன்.

சார் தமது குறுந்தாடியைத் தடவிக் கொண்டார். சிந்திக்கிறார் என்றால் அவர் அப்படித்தான் செய்வார்.

தம்பி, நானும் இதப்பத்தி அதிகம் யோசிச்சிருக்கேன். எனக்கு ஒன்று தோணுது.."

சொல்லுங்க சார்.."

நீ என்னிடம் படித்தபோது, உனக்கும் எனக்கும் ஒரு மௌன யுத்தம் நடந்தது. நீ உனது அறியாமையை எல்லாம் காட்டினாய். நான் ஆர்வத்துடன் கூடிய என் பொறுமையைக் காட்ட முயன்றேன்..."

புரியல சார்..."

என்ன, நான் சொல்றது நான் நடத்துற பாடம் மாதிரியே இருக்கா...?" என்றார் சிரித்தபடி.

இல்ல சார், சீரியஸா கேட்கிறேன்..."

இதப் பாரு. துரோணர் விற்பயிற்சி தரார். கிளியின் கண்ணைப் பார்த்து அம்பை எய்ய வேண்டும். அர்ஜுனன் தவிர மற்ற பாண்டவர் மற்றும் கௌரவர்கள் எல்லோருக்கும் மரம் தெரிகிறது; சிலருக்கு இலைகள் தெரிகின்றன; வேறு சிலருக்குக் கிளி தெரிகிறது. அவர்களிடம் அம்பு எய்ய சொல்ல மாட்டார் துரோணர்.

அர்ஜுனனிடம், மரம் தெரிகிறதா என்று கேட்பார். இல்லை என்பான் அவன். பின் கிளை தெரிகிறதா? இலைகள் தெரிகின்றவனா? பறவை தெரிகிறதா என ஒவ்வொன்றாகக் கேட்பார். எல்லாவற்றுக்கும் அர்ஜுனன் இல்லை என்பான்.

துரோணர் வியப்புடன் ‘பின் என்னதான் தெரிகிறது?’ என்று கேட்பார்.

‘ஒற்றைக் கண் குருவே’ - அர்ஜுனன்.

வாசு சாரின் ஒளிரும் கண்களை உற்று நோக்கி, அருமையான கதை" என்றான் ராஜன். வாசு சார் உணர்ச்சிவசப்பட்டதால், சிறிது நீர் அருந்தினார்.

  சார், இதுக்கும் என் கேள்விக்கும் என்ன சம்பந்தம்?"

  நான் சின்னப் பையனா, ராமகிருஷ்ண மடத்துக்குப் போக ஆரம்பித்தப்போ, எங்க நந்தானந்த சுவாமி இந்தக் கதையைச் சொன்னார்.

  பின், ‘வாசு, நீ அர்ஜுனன் மாதிரி ஆகணும். நீ செய்ற ஒவ்வொரு கடமையிலும் ஆயிரம் தடைகள் வரலாம். எதிர்ப்போ, வெறுப்போ வரலாம். ஆனால் அவற்றைப் பார்த்து, நீ உன் இலக்கை மறந்துவிடாமல் இரு’ என்றார்".

  பிரமாதமான ஐடியா சார்"

  உன் கேள்விக்கு வர்றேன் ராஜன். நீ +1 சேர்ந்தப்போ, உன் அப்பா அம்மா என்னிடம் வந்து உன்னைப் பத்தி ரொம்ப வருத்தப்பட்டாங்க".

  நா அவங்கள ரொம்பவும் அழ வைச்சிருக்கேன் சார்" ராஜன் தலைகுனிந்தவாறு சொன்னான்.

  ராஜன், விவேகானந்த சுவாமிகளின் நூல்களைப் படித்த நான் அந்தக் கருத்துகளை என் வாழ்க்கையில் சோதித்துப் பார்க்க அப்பவே தீர்மானிச்சேன். எப்படி கெமிக்கல்ஸ் வினை புரிகிறது என்று கற்றுக் கொடுக்கிறதிலே மட்டும் எனக்கு என்ன பெருமை இருக்கு?

அதோ பார் ராஜன், சுவாமி விவேகானந்தரோட மனிதனைப் புனிதனாக்கக் கூடிய வாசகங்கள்..."

பாவத்தை வெறுத்திடு; பாவியை அல்ல!

கடலைக் கவனி; அலைகளை அல்ல!.

ராஜன் அந்த வரிகளை உள்வாங்கிக் கொண்டான்.

ராஜன், அன்று மத்தவங்க என்னைப் பலவாறு பேசினாங்க. ஆனா, நான் உன்னை முழுவதுமா நம்பினேன். நீ நல்லா வரணும்னு ஸ்ரீராமகிருஷ்ணரை வேண்டிக்குவேன்.... உன்ன இப்ப ஒரு விஞ்ஞானியா பார்க்கிறபோது ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பி" என்று கூறி அவனை அணைத்துக் கொண்டார்.

ராஜனின் கண்கள் ஈரமாயின. வாசு சார் மீது மதிப்பு கூடியது. எதை எதையோ கூறி அவன் தன் நன்றியைச் செலுத்த நினைத்தான். ஆனால் அவனது உணர்வுகளைச் சுமந்து செல்ல வார்த்தைகளுக்கு வலுவில்லை.

வாசு சாரின் அன்புப் பிடியிலிருந்து விலகிய ராஜன் அவரிடம், உங்க குரு உங்கள ஒரு அர்ஜுனன் என்றார். அதிலிருந்து நானும் ஒண்ணு கத்துகிட்டேன் சார்."

என்ன ராஜன் சொல்லு...?"

என்னோட ஆராய்ச்சியில எனக்கு நெறைய தடைகள், தளர்வுகள், சோர்வுகள் வருது சார். ஆனா, ஆராய்ச்சி செய்யாம வெறுமனே லெக்சர்ஸ் கொடுத்துகிட்டும், சம்பாதிச்சுகிட்டும் இருக்கப் பல வாய்ப்புகள் வருது. அதை எல்லாம் கவனிக்காம இனி ஆராய்ச்சியில முனைப்பா இருப்பேன். இது உறுதி சார்" என்றான்.

அப்ப நீயும் ஓர் அர்ஜுனன்தான்" என்றார் வாசு.

சுவாமி விமூர்த்தானந்தர்

06 செப்டம்பர், 2021

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

இதனைக் கேட்க:

Other Stories