RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

உணர்வூட்டும் கதைகள் - 8

26.08.21 07:02 PM By thanjavur

உணர்வூட்டும் கதைகள் - 8

உயிர்மெய் எழுத்து

இந்தக் கதை பற்றி 'கவிக்கோ' அப்துல் ரகுமான் கூறுகிறார்:

'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என்ற பொன்மொழிக்கு இரண்டு பொருள்.

'அ, ஆ என்ற எழுத்துகளைக் கற்றுத் தரும் ஆசிரியன் இறைவனாக மதிக்கத்தக்கவன்' என்பது ஒரு பொருள்.

'மனிதர்களுக்கு எழுத்துகளை அறிவித்தவன் இறைவனே' என்பது மற்றொரு பொருள்.

'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தால் உருவானதுதான் இந்தப் பிரபஞ்சம் என்கின்றன உபநிடதங்கள்.

மௌனத்திலிருந்து எழுவது எழுத்து. இறைவனும் அப்படித்தான் எழுந்தான். எனவே எழுத்தும் இறைவனும் ஒன்றே. அட்சரங்கள் பூக்களென்றால் சொற்கள் மாலைகள்.

'வாக்' (வார்த்தை) சரஸ்வதியாகும். அவள் வேதங்களின் தாய் என்கின்றன வேதங்கள்.

இக்கருத்துகளை எதிரொலிப்பதுபோல், 'சொற்கள் தெய்வாம்சம் பொருந்தியவை அவற்றைப் பய பக்தியோடு பயன்படுத்த வேண்டும்' என்கிறது 'உயிர்மெய் எழுத்து' என்ற கதை.

சிறுகதைகள் பெரும்பாலும் மனிதனின் உலகியல் பிரச்னைகளைப் பற்றியே எழுதுகின்றன. ஆனால் இந்தக் கதை மிக உயர்ந்த ஆன்மிக உண்மையை வெளிப்படுத்துகிறது. காசுக்காக எதையும் எழுதத் தயாராக இருக்கும் எழுத்தாளர்களைக் கண்டிக்கவும் செய்கிறது. பாராட்டுக்குரிய கதை. 

இவ்வாறு 'கவிக்கோ' அப்துல் ரகுமான் கூறிய கதையைக் கேட்க வாருங்கள்.

சாஹித்ய அகடமி விருது என் ஆசிரியரான எழுத்துச்சித்தனுக்கு இந்த ஆண்டு கிடைத்துள்ளது.

என் மகிழ்ச்சியை அவருடன் சேர்ந்து கொண்டாட, ஆக்ஸிலேட்டரை எவ்வளவோ அழுத்தியும், இந்த கார் 80 கி.மீ. வேகத்தைத் தாண்ட மறுக்கிறதே!

கொடைக்கானல் மலைப்பாதை, பிறகு கிராமம் வழியாக ஏறி இறங்கி, அப்பாடா, சாரின் வீட்டுக்கு வந்தாயிற்று.

கிராமியச் சூழ்நிலையில் அந்த அமைதியான வீட்டைப் பார்த்ததும் அவ்வளவு நேரத்துப் பரபரப்பும் சட்டென அடங்கிவிட்டதே!

முன்பும் அப்படித்தான். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எனக்குப் பரீட்சை என்றாலே பயம். ஆனால் சார் என்னிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினாலே போதும், பயம் தெளிந்துவிடும்.

சாருக்கு இப்போது வயது 70. ஆசிரியப் பணி நிறைவிற்குப் பின் தமது சொந்தக் கிராமத்திற்கு வந்து எழுத்திலும் விவசாயத்திலும் மூழ்கிவிட்டார்.

வீட்டின் முன்னே துளசிமாடம். பின்னே நெற்பயிர்.

கதவைத் தட்டினேன். சாரைப் பற்றிப் பெருமையாகப் பேசும் சாரின் மனைவி என்னை வரவேற்றார்.

"இப்பல்லாம் இவர் அதிகம் எழுதுறதில்ல தம்பி. விருதுக்கு அப்புறம் நெறைய போன் வருது. அவரோட மனசு இப்போ வேறெங்கோ இருக்கு. நீ அவரிடம் கொஞ்சம் பேசு தம்பி...” என்றார் அம்மா.

சார் பூஜையறையில் இருந்தார். நான் காத்திருந்தேன், சாரின் நூலகத்தைப் பார்த்தேன். அடுக்கி வைக்கப்பட்ட ஆங்கில, தமிழ் நூல்கள். ஓ, இப்போது சார் சம்ஸ்கிருத நூல்களையும் வாசிக்கிறாரா!

அலமாரியின் மேலே மெல்லிய தூசியில் கல்கியும், ஜெயகாந்தனும், தி. ஜானகிராமனும் தெரிந்தனர். அடுத்து தத்துவ நூல்கள்; கீழே அருளாளர்கள், தாயுமானவர்; அடுத்த வரிசையில் நேற்றைய புதுமைப்பித்தன் முதல் இன்றைய ஜெயமோகன் வரை...

மேஜையின் மீது அட இதென்ன? ஒரு நோட்டில் லிகித ஜபமாக முத்து முத்தாக ராம, ராம என்று எழுதியிருக்கிறாரே! சார் சாமியாராகிவிட்டாரா?

"அம்மா, சாரோட உடல்நலம்?” என்று கேட்டேன்.

"நல்லாயிருக்காரு தம்பி, காலைலகூட வயலுக்குப் போய் வந்தாரு.... நீ என்ன சாப்பிடுற தம்பி?” என்றார் என் லட்சிய எழுத்தாளரின் முதல் வாசகி.

நான் சாரின் பூஜையறை பக்கமாகச் சென்றேன். புனிதமான அமைதி. மேலே வேங்கடாஜலபதி, கீழே முருகன். நடுவே பழைய பிரேமில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் படம். ஊதுபத்தியின் புகை சீராக மேலே சென்று கொண்டிருந்தது. ஆடாத விளக்கொளி.

அந்தப் பின்னணியில் அசையாத மனம் படைத்த என் ஆசிரியர்.

அவர் கண்களை மூடி, ஜபம் செய்துக் கொண்டிருந்தார். தூங்கும் தன் குழந்தையை மெல்லப் பெயர் சொல்லி ஒரு தாய் எழுப்புவதுபோல அது இருந்தது.

பிறகு அவர் எழுந்து ஸ்ரீராமகிருஷ்ணரை விழுந்து வணங்கினார். நான் அவரை வணங்கினேன்.

எனக்கு விபூதி இட்டுவிட்டார்.

"இப்பத்தான் வந்தியா சேது? ஏதாவது சாப்பிட்டியா?” என்று சார் கேட்டதும் நான் மீண்டும் ஒரு முறை பள்ளி மாணவன் ஆனேன்.

"உங்களுக்குத்தான் அடுத்த ஞானபீட விருதுன்னு எங்க எழுத்தாளர் சங்கத்திலே பேசிக்கிறாங்க சார்” என்றேன் மிக ஆர்வமாக.

"அப்படியா?” என மட்டும் கேட்டு வைத்தார்.

"சாஹித்ய அகடமி விருது உங்களுக்குக் கிடைச்சத முன்னிட்டு நான் ஒரு கவிதையே எழுதிட்டேன்”.

அதற்கும் 'அப்படியா'தான், வாயாலல்ல, கண்ணால்!

"விருது வாங்கினதுக்காக உங்களோட வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க, சார்?”

சார் மெல்லப் புன்னகைத்து, "சாமி படத்துக் கீழே  நான் நேத்து எழுதின கடிதம் இருக்கு பாரு. அதைக் கொண்டு வந்து படி” என்றார். நான் படித்தேன்.

    1.1.2012, கல்பதரு நாள்

"வாசகர்கள் என்ற எனதருமை நண்பர்களே! நான் படைப்பாளியாகப் பரிணமிக்க எனக்கு அன்பையும் ஊக்கத்தையும் வழங்கும் சக படைப்பாளிகளே!

''உங்களது ஆதரவினால் தமிழ்கூறும் நல்லுலகம் என் மூலமாக மேலும் ஒரு விருதைப் பெற்றுள்ளது. இந்த விருதைப் பெறுவதற்கு எனக்கென்ன தகுதி என்று சில நாட்களாகவே ஆழ்ந்து யோசிக்கிறேன்.

"மனிதன் எதையும் புதிதாகப் படைப்பதில்லை. முதலில் படைக்கப்பட்டதைக் கண்டு, பின் அதைப் பிடித்துக் கொள்கிறான். உடனே அதைத் தனது கண்டுபிடிப்பு என்று கூறிப் பெயரையும் போட்டுக் கொள்கிறான்.

"அறிவியல் உலகிலும், இலக்கியக் கருத்துலகிலும் இதுவே உண்மை. அப்படியிருக்கும்போது இது என் படைப்பு என்று மார்தட்டும் அந்தத் தவறை எத்தனை காலம்தான் நாம் செய்வது..., சிறுபிள்ளைத்தனமாக?

"காலங்காலமாக, ரிஷிகளும், முனிவர்களும் சிந்தனையாளர்களும் ஆழ்ந்த சிந்தனையாலும் தியானத்தாலும் வாழ்க்கை மீதுள்ள ஈடுபாட்டாலும் கண்ட வாழ்க்கைப் பற்றிய உண்மைகள் பலப் பல.

"அவர்கள் தந்த 'சிந்தனைப் பிரசாதத்தின்' சில துளிகளை என் எழுத்தின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். ஒரு வேளை, பகிர்ந்து கொண்டதற்காகத்தான் இந்த சாஹித்திய அகடமி பரிசோ!

"வாழ்வில் மேலானவற்றைத் தொடர்ந்து கசடறக் கற்கவும், அதற்குத் தக நிற்கவும் என்னை நீங்கள் அனைவரும் ஆசீர்வதியுங்கள்”.

தங்களன்புள்ள,

எழுத்துச்சித்தன்

    

படித்து முடித்த பின் ஒரு கணம் கண்ணை மூடினேன். ஆஹா, எனக்குக் கர்வம் வராத குறைதான். சார் தன்னுள் மூழ்கியிருந்தார்.

நான் மெல்ல, “சார், நீங்க இப்போல்லாம் ஏன் எழுதுவதில்லை என்று பலரும் கேக்குறாங்க. அவங்க இதப் படிச்ச பிறகு விளக்கம் பெறுவாங்க நான் எழுத்துச் சித்தனின் வாசகன் என்று யாருக்குத்தான் பெருமை இருக்காது!” என்றேன்.

அவர் குரலைக் கனைத்தபடி, கம்பீரமாக அமர்ந்தார். நான் மெல்ல, "பலரும் கேட்க நினைக்குற ஒரு கேள்விய நான் கேட்கலாமா சார்?” என்றேன்.

சார் சற்றுக் கண்ணை மூடி, "சேது, இப்பல்லாம் எழுதுறதுக்கே பயப்படுறேன். என் எழுத்துக்களைப் படிக்கிறவங்க, தங்களோட நேரத்தை என்னிடம் ஒப்படைக்குறாங்க. பலர் தங்களோட மனங்களையும் மூளைகளையும் தந்து என்னை வாசிக்கிறாங்க. அதனால் நான் அதிகம் பயப்படுறேன். இன்னும் நான் பொறுப்புடன் சிந்திக்கணும்... எழுதணும்...” என்றார்.

நான் துணுக்குற்று, "என்ன சார் சொல்றீங்க? உங்க படைப்புகளை எல்லாரும் பிரசுரிக்க ஓடி வர்றாங்க” என்றேன்.

"அது வேற தம்பி. அதிகமா புக்ஸ் விக்கிறது, வாசகர்கள் எழுத்தாளனைத் தலையில வச்சிக் கொண்டாடுறதெல்லாம் ஆரம்ப நிலை. அப்படி எழுதிச் சம்பாதிச்சவங்கப் பலரும் இன்று காணாமலேயே போயிட்டாங்க...”

".........”

"எழுத்தை அலங்கரிச்சு எதுகை மோனையோட எழுதுறது, முதல் ரகம். அடுத்து, எழுத்துக்களை உபாசிக்கிறவங்க, அது சிறந்த எழுத்தாளர்கள் செய்வது. இதை விடவும் சிறந்த ஒரு நிலை உண்டு”

"என்ன சார் அது?” என்றேன், ஏதோ அவர் ஏற்கெனவே சொன்னதெல்லாம் எனக்குப் புரிந்த மாதிரி.

"எழுத்துக்களில் மறைந்துள்ள சக்தியை வெளியே கொண்டு வர்ற எழுத்தாளனே காலம் கடந்து நிற்பார்.”

நீண்ட நாள் கழித்து சாரின் இலக்கிய உரையாடலைக் கேட்டதில் எனக்குப் புல்லரித்தது. அங்கங்கு எனக்குப் புரிந்ததை வைத்துக்கொண்டு உற்சாகமாக, "சார், நீங்க அடிக்கடி மகாகவி பாரதியாரோட கவிதையைச் சொல்வீங்களே, 'மந்திரம் போல் வேண்டுமடா, சொல்லின்பம்', அதுவா நீங்கள் சொல்வது?” என்று கூறி அவரைப் பார்த்தேன்.

"ஆமா, வார்த்தைன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? ஒற்றை வரியாலே உலகையே புரட்டிப் போட்டாரே விவேகானந்தர்...”

"எது? சிகாகோ சமய மாநாட்டிலே அமெரிக்கச் சகோதரிகளே, சகோதரர்களே என்றாரே, அதுவா?”

"ஆமா, அந்த அக்னி அக்ஷரங்கள் சுவாமிஜியின் அந்தராத்மாவிலிருந்து வந்தவை. அந்த ஒற்றை வரியின் மூலம் செய்தி மட்டுமல்ல, சக்தியோடு சத்தியமும் வெளிப்பட்டது”

"ஆஹா! செய்தி, சக்தி, சத்தியம் ஆகிய மூன்றும் ஒரே வரியிலிருந்து வந்தனவா?”

"ஆமாம். 'அமந்த்ரம் அக்ஷரம் நாஸ்தி' - மந்திரமாகாத எழுத்துக்களே இல்லை. எல்லா எழுத்துக்குள்ளும் சக்தி இருக்குன்னு ஒரு வடமொழி சுபாஷிதம் கூறும்”.

"எல்லா எழுத்துகளுக்குள்ளும் சக்தி இருக்கா? நம்ப முடியவில்லையே?” என்றேன் புன்னகையுடன்.

அவர் சட்டென்று, "நீ சரியான முட்டாள்” என்றார்.

"நானா?” என்று ஒரு கணம் கொதித்தேன்.

உடனே நான் வெட்கும்படி அவர் கலகலவென்று சிரித்தார். "சேது, நீ முட்டாள் இல்லை. நானும் அப்படிப் பேசக்கூடியவனும் இல்லை. இருந்தும் முட்டாள் என்ற நாலு எழுத்துக்களைச் சொன்னதும், அதனுள் உள்ள சக்தி உனக்குள் கோபத்தைத் தூண்டுது, பாத்தியா?”

"ஓ, அருமையோ அருமை. அப்படின்னா, நல்ல வார்த்தைகளும் நல்ல சக்தியைத் தூண்டுமில்லே?”

"நிச்சயம்! ஆனா, கெட்டது தெரிஞ்ச அளவுக்கு நல்லதை நாம பயன்படுத்துறதில்ல தம்பி. ஒருமுறை பூஜையின்போது ஸ்ரீராமகிருஷ்ணர் நீரைத் தெளித்து நெருப்பை உருவாக்கி, ஓர் அதிசயத்தையே ஏற்படுத்தினார். அதுவும் ரெண்டே அக்ஷரங்களைக் கூறி...”

இவ்வாறு சார் கூறிவிட்டு, அந்தக் காட்சியை அப்படியே தமது மனக்கண்ணால் கண்டார். பிறகு நானும் அதைக் காணும்படியாகவே விளக்கினார்.

தாந்திரீகப் பூஜையில், ஒரு கட்டத்தில் பூஜாரி தம்மைச் சுற்றி நெருப்பு ஒரு வளையமாக இருந்து பாதுகாப்பதாகப் பாவனை செய்வார்கள். அதற்காக 'ரம்' என்ற அக்னி பீஜ மந்திரத்தைச் சொல்வார்கள்.

“தட்சிணேஸ்வரத்தில் பூஜை யின்போது ஸ்ரீராமகிருஷ்ணர் அவ்வாறு கையில் நீரை வைத்துத் தமது உடலைச் சுற்றித் தெளித்தவுடன் அவரைச் சுற்றி அங்கு ஓர் அக்னி வளையம் வந்தது! அது உபாசனா பலத்தால் நடந்தது. அது அக்ஷர சக்தி.” என்றார். எனக்குப் புல்லரித்தது.

"சேது, அக்ஷரங்களை உச்சரிப்பது இப்படித்தான் இருக்கணும். அத விட்டு, நம்மில் எவ்வளவு பேர் எழுதியும் பேசியும் சொற்களின் சக்தியை விரயமாக்குறோம், தெரியுமா?” என்று கேட்டு முடித்தார் அவர்.

எதிரே 'கொன்றைவேந்தன்' நூல். அதன் மூலம் ஒளவையார், 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்று கூறுவது போலிருந்தது.

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்று வள்ளுவர் கூறியதும்,

'ஆதியில் ஒரு சொல் இருந்தது. அது ஆண்டவனோடு இருந்தது' என்று தொடங்கும் பைபிளும், பட்டுத் துணியை விரித்து இஸ்லாமியர் குரானை அதன் மீது வைத்து வாசிப்பதும் நினைவிற்கு வந்தன.

நான் மெல்ல, "சார், எழுத்தாளர் லா.ச.ரா ஓரிடத்தில் 'நெருப்புன்னு சொன்னா, வாய் சுடணும்னு' எழுதுறாரு” என்றேன்.

"ஆமா, நானும் படிச்சேன்” என்றார்.

சிறந்த மலையாள எழுத்தாளரான வாசுதேவன், சாருக்குப் பாராட்டுக் கடிதம் எழுதியிருந்தார். அதை எனக்குக் காட்டினார். எனக்கு ஒரே பெருமை.

பிறகு ஏதோ ஓர் உந்துதலில், "சார், இன்று எத்தனையோ பேர் எழுதுறாங்க. அதுல பலவும் மனதைத் தொடுவதில்லை. வெறும் வார்த்தை ஜாலங்கள். அவங்களால சிறந்த படைப்புகளை ஏன் படைக்க முடிவதில்லை?” என்று கேட்டேன்.

எழுத்துச்சித்தன் என்னை உற்றுப் பார்த்தார்.

"சேது, வயலில் நீரைத் தேக்கி விவசாயம் செய்வாங்க. ஒருபுறம் தேக்கி வச்சி, மறுபுறம் வரப்பு ஒடஞ்சு போனா, நீர் நிக்குமா?” என்று கேட்டார்.

"புரியல்லே...?” என்றேன் குழப்பமாக.

"மந்திரமாகாத அக்ஷரங்களோ, எழுத்துக்களோ இல்லைன்னு ஏற்கெனவே சொன்னேன். அப்படிப்பட்ட எழுத்துக்களை ஒரு நேரத்தில ஆராதிக்கிறாங்க. மற்ற நேரங்களிலே அக்ஷரங்களை அவமதிக்கிறாங்க. அப்படிச் செய்தால் நம் எழுத்தில் அக்ஷரசக்தி எப்படிப்பா வரும்?” என்று கேட்டார் சற்றுக் கோபமாக.

சாரின் தார்மீகக் கோபத்தின் முன்பு நான் மௌனமாக இருப்பதுதான் புத்திசாலித்தனம் என்று நினைத்தேன்.

சிறிது நேரத்தில் அவரே அமைதியாகி, “எனதருமை இளம் எழுத்தாளரே, உன் வீட்டுக்கு நான் வந்தப்போ, நீயும் உன் மனைவியும் நல்லபடியா கவனிச்சிங்க...”

நான் புளகாங்கிதமடைந்தேன். அவர் தொடர்ந்தார்: “ஆனா, உன் வீட்டு வாசலிலுள்ள மிதியடியில 'வெல்கம்'னு பெரிசா எழுதியிருந்தது. அதை மிதிக்காம வர நான் ரொம்பவும் சிரமப்பட்டேன். சாப்பிடுற தட்டில கம்பெனி பெயரு எழுதியிருக்கு. அந்த எழுத்துக்கள் மீது நா எப்படி என் எச்சில் கையை வைப்பேன், சொல்லு”?

''.....”

"வாஷ் பேசின், டாய்லெட் எல்லா இடத்திலேயும் எழுத்துக்கள் பிரிண்ட் ஆயிருக்கு. அது மேலெல்லாம் நாம ஏதாவது எப்படிப்பா செய்ய முடியும்? எங்கம்மா, நியூஸ் பேப்பர்லேயும் சரஸ்வதி தேவி இருக்கான்னு கூறுவாங்க. ஆனா இப்போ நீங்க கார்ல காலுக்கடியில நியூஸ் பேப்பர் போடுறீங்க.

"பிறருக்கு அவை வெறும் எழுத்துக்களாத் தெரியலாம். ஆனா, உண்மையில் அவை அக்ஷரங்கள் - ஆன்மிக சக்தி மிக்க மந்திரங்கள். மந்திரங்கள் மாலைன்னா அக்ஷரங்கள் பூக்கள் இல்லியா?”.

நான் தடுமாறினேன்.

பிறகு அவர், "இப்படியெல்லாம் அக்ஷரங்கள மிஸ்யூஸ் செய்தால், நமக்கு அக்ஷரசக்தி வருமா? மந்திரசித்தி அடைவோமா? மக்களுக்குப் பல காலம் பயன் தரும் இலக்கியங்களை நம்மால் படைக்கத்தான் முடியுமா?” என்று கம்பீரமாகக் கேட்டார்.

இவர் கூறுவதைப் பார்த்தால், நம்மால் எதையும் செய்ய முடியாது என்று நினைத்து மௌனமானேன்.

சார் மேலும், "தம்பி, ஒரு பக்கம் ஆராதனை, மறுபக்கம் நிந்தனை - இதுதான் நமது நாடு முன்னேறாமல் இருக்குறதுக்குக் காரணம்” என்றார்.

"இதென்ன, புது தியரி?” என்று நான் சத்தமாகவே கேட்டுவிட்டேன்.

சாரின் கண்கள் அகமுகமாயின.

"ஆமாம் சேது, நவராத்திரி போன்ற நாட்களிலே நாம தேவியைப் பூஜித்து அர்ச்சனை செய்றோம். தேவி, நீயே எல்லாப் பெண்களுமாகி இருக்கிறாய்' என்றெல்லாம் தினமும் பாடுவோம். ஆனால் பலரும் பெண்களைக் கீழ்த்தரமாக நடத்துகிறார்கள். வக்கிரமாகப் பார்க்கிறாங்க; பார்க்க வைக்கிறாங்க; சில பெண்களே அதுக்கு உடந்தையாவும் இருக்காங்க... அவர்களைப் போகப் பொருளாகவே எண்ணி எழுதுறாங்க; சித்திரிக்கிறாங்க; சித்திரம் வரையறாங்க. இவ்வாறு செய்து அம்பாளை அவமதிக்கிறோம்” என்றார் தீர்க்கமாக.

எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

சார் கண்களை மூடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். பின் அவரே, "எழுதுவது, ஒரு வேள்வி. அதற்கு நம் அகமும் புறமும் ஒரே நேர்க்கோட்டில் இணைந்திருக்க வேண்டும்” என்றார்.

நான் வறண்டு போயிருந்த என் தொண்டையைக் கனைத்துக்கொண்டே, "சார், நீங்க இப்பச் சொல்றது ஹெவிடோஸ்...” என்றேன்.

சற்று அமைதியாக இருந்த பின் அவர், "சேது, என்னோட இப்போதைய தேடலெல்லாம் பாரதியார் சொன்ன, 'சொல் ஒன்று வேண்டும். தேவசக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்' என்பதுதான்.

"அதற்காகத்தான் மந்திரங்களை ஜபிக்கிறேன். என்றைக்காவது நானும் உணர்வோடு திருமூலர் பாடியதுபோல் 'என்னை நன்றாகப் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே...' என உரைக்க முடியுமான்னு பாடுபடுறேன்” என்று கூறிக் கை தொழுதார்.

அதற்குப் பின் அவரிடம் கேள்வி கேட்கும் தவறை நான் செய்யவில்லை.

சுவாமி விமூர்த்தானந்தர்

28 ஆகஸ்ட், 2021

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

இதனைக் கேட்க:

thanjavur