RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

உணர்வூட்டும் கதைகள் - 7

13.08.21 07:40 PM By thanjavur

உணர்வூட்டும் கதைகள் - 7

ஸ்ரீரமணரின் இந்திரா

    ஒரு குழந்தை நல்ல விதமாய் ஜனிப்பதற்குப் பல ஆயத்தங்கள் செய்கிறோம். மரணிப்பவனுக்கு அதுபோன்ற ஆயத்தங்களை யாரும் செய்து தருவதில்லை.

ஆனால் மரணத்தை எப்படி எதிர்கொள்வது என்பதை மகான்கள் கூறி அருளுகிறார்கள்.

கண்ணை மூடி தியானம் செய்தால் எல்லோராலும் பகவானை மனதில் பிடிக்க முடிகிறதா? ஆனால் லலிதாவும் இந்திராவும் கண்களை மூடினால், அவர்கள் மனம் ரமணரின் பாத கமலங்களையே சுற்றி வரும்.

சிறுமி லலிதா துடுக்கு, சமர்த்து; அவளது தங்கை இந்திரா சாந்தம், கம்பீரம். ஆந்திராவைச் சேர்ந்த குர்ரம் சுப்பராமய்யாவின் புத்திரிகள் அவர்கள்.

சற்று நேரம் கிடைத்தாலும் திருவண்ணாமலைக்கு வந்து ரமண தியானத்தில் மூழ்கி முத்தெடுப்பார்

சுப்பராமைய்யா. அவர் கல்லூரிப் பேராசிரியர், கவிஞர்.

1937-ஆம் ஆண்டில் ஒருமுறை சுப்பராமையா தனது மகள் லலிதாவுடன் ரமணாஸ்ரமம் வந்தார்.

ரமணாஸ்ரமத்தின் தியானக்கூடம், ரமண பக்தர்களின் சொர்க்க பூமி. அங்கு வருபவர்களுள், மன நிம்மதியைத் தேடுபவர்கள், தங்களின் நிஜத்தைத் தேடுபவர்கள், தெய்வத்தைத் தேடுபவர்கள் என்று பலரும் அமர்ந்திருக்க, நடுநாயகமாக ரமணர் வீற்றிருப்பார்.

துடுக்கான லலிதா அன்று தன்னோடு விளையாட, ஒருவரும் இல்லையே என்று இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தாள். ஹாலுக்கு வரும் மயிலை அவள் துரத்த முடியாது. குரங்குகளைக் கண்டால் அவளுக்குப் பயம். அணில் அவளை நெருங்குவதே இல்லை. நாய், சொறி பிடித்தது, சே..., வேண்டாம்.

அந்த ஹாலில் பலரும் விறைப்பாக அமர்ந்தவாறும், கண்களை மூடிக் கொண்டும், ரமணரைத் தரிசித்தபடியும், பாராயணம் செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

லலிதாவுடன் விளையாட யாருமில்லை. தேடிப் பார்த்ததில் ‘தாத்தா சாமிதான் ‘சும்மா’ இருக்கார்.  அவர்

தான் எனக்கு லாயக்கு’ என நினைத்தாள்.

ரமணரின் பக்கத்தில் போய் நின்றாள் லலிதா. அவருக்கு ஏதாவது சேவை செய்யவா? இல்லை, ஒரே சேஷ்டைதான்.

விசிறியை ஆட்டிச் சத்தம் செய்வாள். நூல்களைப் புரட்டுவாள். அவை கீழே விழும். சிலர் கண்களைத் திறந்து முறைப்பர். 

விஷமம் அதிகமானால் , ஏய், என்ன பண்ற?" என மகரிஷியே லேசாக அதட்டுவார்.

உடனே லலிதா வாய் குவித்து, மெல்லத் தலையாட்டி, நா ஒண்ணுமே பண்ணலே சாமி, சும்மாதான் இருக்கேன்" என்பாளே, அது கொள்ளை அழகு!

பகவானே சிரித்து, இவ இப்படித் துறுதுறுன்னு ஏதேதோ செய்றா. ஆனா ‘நா ஒண்ணுமே செய்யல’ என்கிறா. ஒரு சிறுமி இதச் சொல்ல முடியறது. ஆனா பெரியவா இதப் புரிஞ்சிக்கவும் முடியலியே" என்றார்.

கீதையின் சாரத்தைக் குழந்தை மூலமாக இப்படிப் பிழிந்து கொடுத்தார் ரமணர்.

1941-ஆம் ஆண்டு. மே மாத மூன்றாம் வாரம். மீண்டும் ஆசிரமத்தில் தன் குடும்பத்துடன் சுப்பராமையா. இந்த முறை 9 வயதான லலிதாவுடன், இளையவள் 5 வயதான இந்திராவும் வந்திருந்தாள். பட்டுச் சொக்காவில் இருவரும் சிட்டுக்களாக ஓடியாடி எல்லோரையும் ஈர்த்தனர்.

முக்கியமாக, ரமணருக்கு இந்திராவைப் பிடித்துப் போயிற்று. பாடச் சொன்னால் பாடுகிறாள். ஆடச் சொன்னால் ஆடுகிறாள்.

ஆனால் இந்த லலிதாவிற்கு என்ன வந்தது?

திடீரென சங்கோஜப்பட ஆரம்பித்துவிட்டாளே!

‘நான் ஒரு பெண்’ என்ற தேகாத்ம புத்தி தலையெடுக்கும் வயதோ! அதனால்தான் ரமணரின் திருமுன்பு அவள் இருக்க முடியாமல் நெளிகிறாளோ?

இந்திரா பாடி முடித்ததும், லலிதாவைப் பாடச் சொன்னார் ரமணர். அவள் தயங்கினாள். மகரிஷி விடவில்லை.

என்ன லலிதா? யார் கிட்டேயும் நான் எதுவும் கேட்கிறதில்ல. நீ என்னையே கேக்க வச்சுட்டியே! இந்திராவப் பாரு. அவ மாதிரி பாடு" என்றார்.

இவ்வளவிற்குப் பிறகே லலிதா பாடினாள். பிறகு இருவரும் சேர்ந்து ஆடினர்.

மகரிஷியின் சபை களை கட்டியது. ‘நான் யார்?’ என்ற தேடுதலின் தீவிரத்தில், சாதகர்களின் மனம் லேசாவதற்கு ரமணரே அந்தக் குழந்தைகளின் மூலம் நாட்டிய நிகழ்ச்சி நடத்தி அங்கிருந்த இறுக்கத்தை நீக்கினாரோ!

ஒரு நாள் சுப்பராமையா ‘உபதேச சாரம்’ என்ற தெலுங்கு மொழி நூலை ரமணர் முன்பு அமர்ந்து படித்தார். அதன் முன்பக்கத்தில் சம்ஸ்கிருத மொழியில் நான்கு வார்த்தைகள் அச்சாகியிருந்தன.

அதைப் பார்த்த இந்திரா அதிலுள்ள மூன்று வார்த்தைகளை ‘நாஹம் தேஹம் - கோஹம் - ஸோஹம்’ -(‘நான் தேகமல்ல - நான் யார்? - அவன் நான்’) என்று எழுத்துக் கூட்டிக் கூட்டி ஒவ்வொன்றாக வாசித்தாள்.

உதட்டோடு, உள்ளத்தையும் குவித்து வாசித்தவளை மகரிஷி உற்று நோக்கினார். அவளிடம் ஏதோ ஓர் ஊற்று பெருக்கெடுப்பதை அவர் கண்டதுபோல் இருந்தது.

இந்திரா, சரியாத்தான் நீ படிச்சேம்மா. இந்த வரிகளே உனக்குப் போதும். பாடலின் மிச்ச பகுதியை நீ படிக்க வேண்டாம். இப்போ வாசிச்சியே, அதான் எல்லா

அறிவோட சாரம். இனி இதையே மந்திரம் மாதிரி சொல்லிண்டிரு. உனக்கு எல்லாம் இது மூலமே சித்திக்கும்" என்றார் ரமணர்.

உடனே, தாத்தாசாமி தனக்கு மட்டும் கற்றுக் கொடுத்த மந்திரத்தை முணுமுணுக்க ஆரம்பித்தாள் இந்திரா. சரியாகச் சொல்லத் தைரியம் வந்ததும் சத்தமாகப் பல ராகங்களில் அவளாகவே பாட ஆரம்பித்தாள்.

பின் அவளைப் பார்க்கும் போதெல்லாம் மகரிஷி, மந்திரத்தச் சொல்லு, பாக்கலாம்" என்பார்.

அவளும் சொல்வாள், ஒரு சிஷ்யையாக!

அவர் அவளது உச்சரிப்பையா கவனித்தார்? இல்லை. ஏதோ ஓர் உச்ச நிலைக்குக் கொண்டு செல்வதற்கு அவர் அவளைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார்.

இந்த மந்திரம் முதன் முதலில் ரமணர், தமது முக்கியச் சீடரான காவ்ய கண்ட கணபதி என்ற பெரும் பண்டிதருக்குக் கூறியது. ‘இந்த பிராணாயாம மந்திரம் உயர்ந்த சாதகர்களுக்கானது, சாதாரண ஒரு மூச்சுப் பயிற்சி அல்ல.

முதலில், கோஹம் ‘நான் யார்?’ என்ற விசாரத்தை பூரகமாக - உள்மூச்சாக சாதகன் இழுக்க வேண்டும்.

அடுத்து, ஸோஹம் - ‘அவனே நான்’ என்ற வ்ருத்தியை கும்பகமாக - மூச்சாகக் கருதி, பிடித்து வைக்கப் பழக வேண்டும்.

முடிவில்,‘நாஹம் தேஹம்’ - ‘நான் உடலல்ல’ என்ற அனுபவம் ரேசகமாக - வெளிமூச்சாக விட வேண்டும். இதுவே ஞான பிராணாயாமம்.

‘ஆஹா, இந்த மந்திரம்தான் என்னவோர் அருமையானது’ என்று சுப்பராமையா அதை ரசித்தார். ஆனால் சுப்பராமையாவின் மனதை ஒரு கேள்வி அடிக்கடி குடைந்து கொண்டிருந்தது:

‘அறிவிலும் அனுபவத்திலும் மிக்க சாதகர்களான நாங்கள், மகரிஷியின் ஓர் உபதேசத்திற்காகக் காத்துக் கிடக்கும்போது, இவர் ஏன் ஒரு சிறுமியிடம் இவ்வளவு பெரிய விஷயத்தைத் திணிக்கிறார்? அவளுக்கு என்ன புரியும்?’

அன்று சுப்பராமையா தியானித்துக் கொண்டிருந்தார். இந்திராவிற்குப் பசித்தது. அப்பாவைத் தொந்தரவு செய்யாது அவள் ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள்.

ஆன்மப் பசியோ, அடிவயிற்றுப் பசியோ அனைத்தும் அறியும் பகவான்  அவளைக் கவனித்தார். உடனே அவளது அப்பாவிடம், கொழந்தைக்குப் பசிக்குது. அதக்

கவனிக்காம தியானம் என்ன வேண்டியிருக்கு?" என்று கேட்டார் ரமணர். சுப்பராமையா விழித்தார்.

ஒருநாள் பகவான் அந்த இரண்டு சிறுமிகளுடனும் விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்தார்.

லலிதாவின் கையைப் பார்த்து, இது யாரோட கை?" என்று கேட்டார்.

என் கை" என்றாள் அவள்,

இல்ல" என்றார் பகவான்.

இது யாரோட கண்ணு?"

என்னோட கண்ணுதான்"

இல்ல"

இவ்வாறு ரமணர் அவளிடம் ஒவ்வொன்றாகக் கேட்கவும் அவள் அது தன்னுடையதுதான் என்று கூறி வந்தாள்.

முடிவில் ரமணர், பாப்பா, எதுவுமே ஒன்னுடையதில்ல. உன் உடம்பே பகவானுக்குத்தான் சொந்தம்" என்று கூறி முடித்தார். லலிதா புரியாமல் விழித்தாள்.

ஆனால் இந்த உரையாடலை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த இந்திரா ‘ஓ, அப்படியா!’ என்று உள்ளுக்குள்ளேயே உச்சரித்துக் கொண்டாள்.

விடுமுறை முடிந்தது. இரண்டு சிறுமிகளும் ஊருக்குச் செல்ல ரமணரிடம் விடைபெற வந்தனர்.

பகவான் மலைக்குப் போகும் காலை நேரம். லலிதா வேடிக்கை பார்த்தபடி இருந்தாள். இந்திராவோ எதற்கோ ஏங்கியிருப்பதாகக் காணப்பட்டாள்.

பகவான் இந்திராவை விழுங்கும்படியாகப் பார்த்து, அப்போ, நீ உன்னோட இடத்துக்குப் போ. நான் என்னோட எடத்துக்குப் போறேன்" என்றார்.

பிறகு அருணாசலமலையில் அவர் ஏற ஆரம்பித்தார்.

சிறிதாவது பகவான் திரும்பிப் பார்க்க வேண்டுமே, ம்ஹும். இந்திராவின் இதயம் பாரமானது. ‘தாத்தாசாமி, இனி உங்கள நான் எப்போ பார்ப்பேன்?’ என்று அவளது உள்ளம் விம்மியது.

ஆனாலும் ஓர் ஆறுதல். அவளுக்குத்தான் தாத்தாசாமி தந்த மூன்று மந்திரங்கள் இருக்கே! அதைச் சொன்னால் நான் எங்கிருந்தாலும் சாமி என்னை நல்லா கவனிச்சுப்பார் என நினைத்தாள்.

ஊருக்குச் சென்றவுடன் லலிதாவும் இந்திராவும் தந்தைக்குக் கடிதம் எழுதினர்.

கடிதங்கள் மகரிஷி முன்பு வைக்கப்பட்டன.

பகவானிடம் கூறுங்கள் அப்பா, நான் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று. தினமும் மந்திரத்தைச் சொல்கிறேன்" என எழுதப்பட்டிருந்த இந்திராவின் கடிதத்தைக் கூர்ந்து பார்த்தார் மகரிஷி.

அவரது பார்வை எதைக் கூறியது?

இனி இந்திராவைப் பார்க்க முடியாது என்பதையா? தான் கற்றுத் தந்ததைக் கொண்டு கைதேர்ந்தவளாகி,

பிறந்த நோக்கத்தை அடைந்துவிடுவாள் என்பதையா?

நாட்கள் வேகமாகச் சென்று இரண்டு வருடங்களாயின. 1943 -ஆம் ஆண்டு. இந்திரா அகத்திலும் புறத்திலும் நன்கு வளர்ந்திருந்தாள்.

அப்போது திடீரென அவளுக்கு அம்மை வார்த்தது. இரு வாரங்களில் படுத்த படுக்கையாகி வாடிப் போனாள். உண்ண முடியவில்லை. உறக்கமில்லை. ஆனாலும்...,

உடல் வேதனையை அனுபவித்தாலும், ரமணர் அருளிய மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தால் போதும் இந்திராவின் முகம் பிரகாசிக்கும்.

சிரமப்பட்டு மூச்சை விட்டாலும், அநாயசமாக மந்திரத்தை மூச்சு போல் விடாமல் சொல்லிக்

கொண்டிருந்தாள். பக்தர்கள் ரமணரின் திருவுருவப் படத்தின் முன்பு அவளைக் கிடத்திப் பிரார்த்தித்தனர்.

கவிஞரான சுப்பராமையா, தமது மகள் ஓர் அற்புதமான ஒரு சோக காவியத்தைப் படைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தார்.

...ஓ, இவளது பிராரப்த கர்மாவை அறிந்துதான் பகவான் அவ்வளவு பிரயத்தனத்துடன் இவளுக்கு ஞான பிராணாயாமத்தைக் கற்றுத் தந்தாரோ!’ என்று சுப்பராமையா எண்ணினார். அதை எண்ணியதும் பகவானிடம் அவருக்குப் பக்தி பெருகியது.

எஞ்சிய நாட்கள் ஏனையோருக்கு இறுக்கமாகச் சென்றாலும், எதனாலும் பாதிக்கப்படாமல் இந்திரா இருந்தாள்!  கடைசியில் அந்தச் சோகமான நாளும் வந்தது.

அன்று ஸ்ரீராமநவமி. ஏப்ரல் 13. பக்தர்கள் இந்திராவைச் சூழ்ந்திருந்தனர். மூன்று மந்திரங்களையும், விடும் மூச்சாக ஓதிக்கொண்டே இந்திரா இறைவனடி சேர்ந்துவிட்டாள்.

அங்கு துக்கம் விசாரிக்க யாருமில்லை, வந்த யாராலும் அழவும் முடியவில்லை!

ஏனெனில் அவள் தேகத்தைத் துப்பிவிட்டு, தெய்வ பதத்தைச் சேர்ந்துவிட்டதாகப் பலரும் உணர்ந்தனர்.

‘பல வருடங்கள் விசாரத்திற்குப் பிறகும் சாதகர்களுக்குக் கிடைக்காத ஒரு பதவியை, இந்தச் சிறுமி குரு

கிருபையால் எளிதாகப் பெற்று, பகவானை அடைந்து விட்டாளே!’ என்று பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.

இந்திராவின் உடலைப் புதைத்த இடத்தில் ஒரு கல்லறை எழுப்பினார் சுப்பராமையா.

அதன் மீது ‘நாஹம் தேஹம் - கோஹம் - ஸோஹம்’ என்பதைப் பொறித்து வைத்தார். அது பக்தர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இன்றும் விளங்குகிறது. 

                

சுவாமி விமூர்த்தானந்தர்

13 ஆகஸ்ட், 2021

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

இதனைக் கேட்க:

thanjavur