அழைத்தது யார்?
இந்தக் கதை பற்றி மூத்த எழுத்தாளர் எச்.கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார்:
ஜடப்பொருள்களுக்கும் உயிருண்டு; அதனதன் மொழியில் பேச்சும் உண்டு. உயிருள்ளவர்கள் என்று பெரிதும் கர்வப்படும் நாம்தான் அவற்றைப் புரிந்துகொள்ளும் சக்தியைச் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம்; ஜடப்பொருள்களாக மாறிக் கொண்டு வருகிறோம். பரிதாபம்!
'செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்...' என்று வள்ளுவர் சொல்வது போல, கேள்விச் செல்வத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு சாதுசங்கம் துணை செய்யும். அப்போது ஜடப்பொருளிலும் பரம்பொருளைக் காணலாம்; அசித்துப் பொருளும் உணர்வு உள்ளதாக மாறலாம். இவையே இந்தக் கதை சொல்லும் அதிசயமான, ஆனந்தமான, ஆழமான செய்தி.
இந்தக் கதையில் ஆலமரத்தை மையமாக வைத்து, அருமையான அத்வைதக் கருத்துகளை அள்ளித் தருகிறார் ஆசிரியர்.
சுமார் 115 வருடங்களுக்கு முன் இருந்த அமைதியான சென்னை. மயிலாப்பூர் பக்கத்திலுள்ள பகுதிகள் மேய்ச்சல் நிலங்களாக 'மந்தைவெளி'யாக இருந்த காலம்.
சில காலம் முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் எதிரில் சற்றுத் தள்ளி ஒரு பெரிய தனி வீடு.
அமெரிக்கப் பெண்மணியான தேவமாதா அங்கு தங்கியிருந்தார். அவர் அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டு பாரதம் வந்தவர். பாரதத்தின் பெருமையை அறிந்தவர்; அந்தப் பெருமைகளை உணர்ந்துகொள்ள உத்தமர்களோடு தங்கியுள்ளவர்.
அந்த வீட்டின் முன்பு ஒரு பெரிய ஆலமரம். வானத்தைப் பார்க்கவிடாதபடி, அடர்ந்து விரிந்த கிளைகள். அதில் பல பறவைக்கூடுகள். தடித்த அடிமரத்தில் சில பொந்துகள்.
அம்மரத்தைத் தொடும்போதே தேவமாதாவுக்கு சர்ச்சின் மரியாதை மிக்க கன்னியாஸ்திரீயின் கையைத் தொட்டு முத்தமிடுவது போலிருக்கும்.
காலையில் அந்த மரத்தடியில் அமர்ந்து தியானிக்க தேவமாதாவுக்குப் பிடிக்கும்; மாலையில் அங்கு அமர்ந்து படிப்பது சுவையான அனுபவம் அவருக்கு!
மரத்திலிருந்து முதிர்ந்த இலைகள் விழுவதை தேவமாதா ஈடுபாட்டுடன் பார்ப்பார். தமது கர்மவினைகள் ஒவ்வொன்றாகக் கழன்று விழுவதாக அவருக்குத் தோன்றும்.
தேவமாதா இல்லாதபோது மரத்தைச் சுற்றிச் சிறுவர்கள் விளையாடி ஒரே ஆட்டம்பாட்டம்தான்.
அம்மரத்தின் பெரிதான இலைகளை ஏழைகள் தைத்து உணவு உண்ணப் பயன்படுத்துவார்கள்; அதனால் இலைகளைத் திருடிப் போவார்கள். அவர்களைத் துரத்துவதிலேயே சகோதரிக்கு நேரம் போகும்.
அன்று பிற்பகல் தேவமாதா தமது வீட்டில் சற்றுக் கண் மூடிப் படுத்திருந்தார். ஒரே அமைதி.
திடீரென யாரோ அவரை அவசர அவசரமாக 'அம்மா, அம்மா' என்று அழைத்தது கேட்டது.
அலறியடித்தபடி எழுந்தார் சகோதரி.
'யாருக்கு என்ன ஆயிற்று? ஏதோ ஒரு குழந்தை மரத்தில் ஏறி விழுந்து அடிபட்டிருக்குமோ? இதற்குத் தானே நான் பலமுறை அவர்களை மரத்தின் மீது ஏறாதீர்கள் என்று கூறி வருகிறேன்!' என்று பரபரப்பானார்.
சகோதரி முன்வாசலுக்கு ஓடினார். பின்வாசலுக்கும் சென்று பார்த்தார். யாருமில்லை. அம்மா என்று அழைத்த அந்த அழைப்பைக் கேட்டது நிஜம்தான்.
'யாருக்கோ ஏதோ கஷ்டம் வந்துள்ளது, அதனால் தான் என்னைக் கூப்பிட்டுள்ளார். கூப்பிட்ட பின் அவர் ஏன் ஒளிந்து கொண்டார்?' என்ற எண்ணமே வலுத்தது.
'ஓ லார்ட் ராமகிருஷ்ணா, யாருக்கும் ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது' என்று அவரது மனம் வேண்டியது. இந்தச் சிந்தனையில் இருந்ததால், தன் 'போதி மர'மான அந்த ஆலமரத்தின் மீது இருந்தவனைச் சந்தேகப்படுவதற்குக்கூட ஒரு சில கணம் பிடித்தது.
"யாரு மேன் நீ?” என்று இங்கிலீஷிலும் தங்கிலீஷிலும் கேட்டார் தேவமாதா. கிளை மீது அமர்ந்திருந்தவன் கிலி பிடித்து ஓடினான்.
'அடப்பாவமே, எவ்வளவு இலைகளைப் பறித்துப் போட்டிருக்கிறான். இன்னும் சற்று நேரம் நான் வராமலிருந்தால் மரத்தை மொட்டையே அடித்திருப்பான்! திருட வந்தவன் அப்படி ஏன் அம்மான்னு குரல் கொடுத்தான்? இருக்காது. அவன் ஏன் குரல் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டும்?'
இவ்வாறு எண்ணியபடி, உதிர்ந்திருந்த இலைகளை அள்ளி அந்த மரத்தின் அடியில் கொட்டினார்.
'என் அன்பு மரமே, உன் மீதிருக்க வேண்டிய இலைகளை, உன் அடியிலேயே கொட்டிவிட்டேன். அந்த இளைஞனை மன்னித்துவிடு' என்ற பாவனையில் தேவமாதா தமது கைகளால் அந்த மரத்தை வருடினார்.
உள்ளத்தில் அவரது மரியாதைக்குரிய கன்னியாஸ்திரீ புன்னகைத்தார்.
பிறகு வீட்டைப் பூட்டிவிட்டு மடத்திற்குப் புறப்பட்டார். மக்கள் யாருமில்லாத மயிலாப்பூரில் அந்த 'ப்ராடீஸ்' சாலையில் நடந்தார்.
புகையோ புழுதியோ இல்லாத மண் சாலை.
சிறிய மடம். ஆனால் பெரிய மகான் உள்ள இடம்.
யார் அவர்? சுவாமி விவேகானந்தரால் தென்னகத்திற்கு அனுப்பப்பட்ட சசி மகராஜ்தான் (சுவாமி ராமகிருஷ்ணானந்தர்) அவர். சுவாமிகளிடம் சென்று பேசினால் தன் சஞ்சலம் தீரும் என அவரைக் காணச் சென்றார் சகோதரி.
மடத்தில், பகவான் ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் பிற்பகல் நைவேத்தியம் படைத்து முடித்திருந்தார் சசி மகராஜ்; பூஜையறையின் கதவைத் திறந்தபோது, சகோதரியைக் கண்டார். சுவாமிகள் கண்களாலேயே 'வாருங்கள்' என்று வரவேற்றார். அதை அப்படியே வார்த்தைகளாகவே காதால் கேட்டார் சகோதரி.
அந்தப் பூஜையறையில் ஸ்ரீராமகிருஷ்ணர் வீற்றிருக்கிறார் என்பதை சசி மகராஜின் ஒவ்வோர் அசைவும் அறிவித்தது. பூஜைப் பொருள்கள் ஒவ்வொன்றும் உயிர்மையுடன் மிளிர்ந்தது. சிறிது நேரத்தில் சுவாமிகள் வெளியே வந்தார். பருத்த தேகம், கருத்த நிறம், சிரித்த முகம், மழித்த தலை, விரிந்த நெற்றி, தெளிந்த மதி – இவையுள்ள ஸ்ரீராமகிருஷ்ணச் சீடர்தான் இந்த சசி மகராஜ்.
கிறிஸ்தவப் பெண்ணான தேவமாதா அவரை வீழ்ந்து வணங்கினார்! இந்து சமயத் தத்துவத்தைக் கற்க வந்தவரிடம் இருக்கும் இயல்பான ஈடுபாடுதான் அது.
'சுவாமிஜி, என்னை அம்மாவென்று கூப்பிட்டது யாராக இருக்கலாம்?' என்று கேட்க நினைத்தார்.
அதற்குள் சுவாமிகள், "சிஸ்டர், நானே உங்களைப் பார்க்க நினைத்தேன்” என்றார் ஆங்கிலத்தில்.
சுவாமிகள் ஒரு நாற்காலியில் அமர, எதிரே இன்னும் ஒரு நாற்காலி இருந்தும் வீராசனத்தில் சகோதரி ஒரு சிஷ்யையாகத் தரையில் அமர்ந்தார்.
"எஸ் சுவாமிஜி, சொல்லுங்கள்?”
"சிஸ்டர், காலையில் சுவாமி விவேகானந்தரின் ஒரு கடிதத்தைப் படித்தேன். அதில் அவர் ஜடப்பொருளில் உணர்வைப் படிப்படியாக அதிக அளவில் அறிவதுதான் நாகரிகத்தின் வரலாறு' என்கிறார். (சுவாமி விவேகானந்தரின் கடிதங்கள், 1 அக்டோபர் 1897)”
உடனே கைகளைக் கொட்டி தேவமாதா, "மார்வலஸ் சுவாமிஜி. அருமையான சிந்தனை” என்று சொல்லிக் கொண்டே சுவாமிகள் கூறியதைச் சுருக்கெழுத்தில் குறித்துக் கொண்டார். சுவாமிகள் மீண்டும், "ஆச்சாரிய ஸ்ரீராமானுஜரின் வரலாற்றை நான் வங்கமொழியில் எழுதி வருவது உங்களுக்குத் தெரியும்...” என்று சொல்வதற்குள்,
"ஆம் சுவாமிஜி, அதற்காக நீங்கள் பல பண்டிதர்களிடம் பலவற்றைக் கற்று வருவதையும் பார்க்கிறேன்” என்றார் தேவமாதா அமைதியாக.
"இன்று காலையில் நான் படித்த நமது சுவாமிஜியின் அந்தச் சிந்தனை தென் ஆச்சாரிய வைணவ மரபிலும் உள்ளதுதான். அவர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பதை சித், அசித் என இரண்டாகப் பிரிக்கிறார்கள்.சித் எனில் உணர்வு மயமானது, சைதன்ய மயமானது அதாவது அறிவு மயமானது. அசித் என்றால் சைதன்யமற்றது.”
"...”
"சிஸ்டர், வைஷ்ணவத்தில் ஜடம் என்று எதையும் தள்ளுவதில்லை. எல்லாவற்றுக்கும் அவர்கள் மரியாதை தருவார்கள். எதுவும், எப்போதும் பக்தனுக்கு ஆச்சாரியனை நினைவுபடுத்த வேண்டும். அதற்காக, பூஜைச் சொம்பையும் 'சொம்பு ராமானுஜன்' என்றே கூறுவார்கள் என்றால், அவர்களது பக்தியைப் பாருங்களேன்...”.
"அப்படியா சுவாமி...?”
"சிஸ்டர், தமிழில் அவர்கள் அழகாகச் சொல்கிறார்கள் – உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் இன்று உணவில் உடையவர் (ஸ்ரீராமானுஜர்) அதிகம் என்றே கூறுவார்கள்” என்றார் சசி மகராஜ் கண்களை விரித்து.
தேவமாதாவிற்கும் அதே வியப்பு. அதே சமயம் அவருக்குள் 'அம்மா' குரல் கேட்பது தொடர்ந்தது.
"சுவாமிஜி, சித்தும், அசித்தும் கடைசிவரை தனித்தனியாகவே இருக்குமா? அசித், சித் நிலைக்கு முன்னேறாதா?”
"நல்ல கேள்வி. நான் ஸ்ரீபெரும்புதூரில் சந்தித்த ஓர் ஆச்சாரியர் அருமையான ஒரு விளக்கம் கொடுத்தார். அசித் வஸ்துவானது சித்துடன் தொடர்பு கொள்ளும்போது சித் நிலைக்கு உயரும்” .
"அதாவது உணர்வில்லாத, சைதன்யமற்றதுகூட உணர்வு மயமாகிவிடுமா? சைதன்யமயமாகிவிடுமா?”
"ஆம், ஓர் உதாரணம் பாருங்களேன். மூக்குக் கண்ணாடி ஓர் அசித் வஸ்துதான். அதற்கென்று தனியாக அறிவு கிடையாது. ஆனால் சைதன்ய ஸ்வரூபனான மனிதனின் கண்கள் மீது அமரும்போது மூக்குக் கண்ணாடியும் கண்ணுக்குச் சமமாகிவிடுகிறது. அதன் மூலம் அது பலவித அறிவை மனிதனுக்குப் பெற்றுத் தருகிறது” என்றார் சுவாமிகள்.
"நல்ல கருத்து, சுவாமிஜி”– தேவமாதா.
சட்டென்று சுவாமிகள், "மன்னிக்கவும். நான் பேசிக் கொண்டேயிருக்கிறேன். நீங்கள் என்னிடம் ஏதோ கேட்க வந்தீர்களா?” என்றார் புன்னகையுடன்.
தேவமாதா, "ஆம் சுவாமிஜி. இன்று ஓர் அனுபவம்...” என்று கூறிவிட்டு, "ஆலமரத்தில் ஒருவன்...” என்றுஆரம்பித்து 'அம்மா' குரல் வரை கூறி முடித்தார்.
எல்லாவற்றையும் அமைதியாகக் கண்மூடிக் கேட்ட சுவாமிகள் மிகச் சரளமாக, "சகோதரி, இயற்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் உயிர்த்துடிப்பும், அறிவு வெளிப்பாடும் உள்ளன. அவற்றை உணர வேண்டுமானால், அதற்குத் தூய மனம் வேண்டும். சாதாரண மனிதனுக்கு இந்தப் பிரபஞ்சம் உயிரற்ற ஜடம்போல் தோன்றலாம். ஆனால் அகக்கண் யாருக்குத் திறந்திருக்கிறதோ, குருவின் அருள் யாருக்கு உள்ளதோ, அவன் முழுப் பிரபஞ்சமும் உயிருணர்வுடன் துடிப்பதைக் காண்பான்” என்றார்.
சுவாமிகள் என்ன கூறுகிறார் என தேவமாதா சிந்தித்தபடி, "சுவாமிஜி, புரியவில்லையே?” என்றார் மெல்ல.
சுவாமிகள், "சகோதரி, தாவரங்களும் உணர்வுடைய உயிரினங்களே. என்ன, அவற்றுக்கு நடமாடும் ஆற்றல் இல்லை, அவ்வளவுதான். அசித்தாகத் தோன்றும் ஒன்று, சித் சொரூபமான உங்களை அழைத்துள்ளது” என்றார்.
தேவமாதா குழப்பத்துடன் சுவாமிகளைப் பார்த்தார்.
சுவாமிகள் புன்னகைத்து, "இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை? நீங்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது உங்களது ஆழ்மனம் விழித்திருந்தது. அந்த ஆழ்மனதிடம் தன்னைக் காப்பாற்றுமாறு அந்த மரம்தான் உங்களை அழைத்தது” என்றார். (ஆதாரம்: சுவாமி ராமகிருஷ்ணானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு, பக்கம் 427)
"அப்படியா! மரமா என்னை அழைத்தது!” என்று பரபரப்பாகக் கேட்டார் தேவமாதா. சசி மகராஜ் கம்பீரமாகத் தலையசைத்தார். சுவாமிகள் சொன்னால் அது சத்தியமே. 'ஜடப்பொருளில் உணர்வை வெளிப்படுத்துவது என்றால் இதுதானோ?' என்று தேவமாதா நினைத்தார். உடனே அவருக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது.
ஒரு கோடை நாளில், ஸ்ரீராமகிருஷ்ணருக்கு வியர்க்குமே என்று அவரது திருவுருவப் படத்திற்கு நீண்ட நேரம் விசிறி, படத்திலும் பரமனையே பார்த்த சசி மகராஜை எண்ணிப் பார்த்தார் தேவமாதா.
சித் சொரூபத்தை அடைந்துவிட்ட சசி மகராஜின் அருள் தன் மீது இருப்பதால்தான், தன்னை அந்த மரம் உதவிக்கு அழைத்தது என நினைத்தார்; தன் அந்தராத்மாவைத் தானே உணராவிட்டாலும், அந்த மரம் அதை உணர்ந்து தன்னை உதவிக்கு அழைத்ததை எண்ணி உள்ளம் பூரித்தார்.
அட, சாதுசங்கம் என்னவெல்லாம் சாதித்துவிடுகிறது!
சுவாமி விமூர்த்தானந்தர்
06 ஆகஸ்ட், 2021
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்