அம்பிகை எப்போது சிரிக்கிறாள்?
அம்பிகை எப்போது சிரிக்கிறாள்?
அம்பிகை எப்போது சிரிக்கிறாள்?
படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்
ஆட்டுவிப்பவளே அசந்துவிட்டாள்!
‘உலகையே மயக்குகின்ற மகாமாயையின் சக்திகூட நரேந்திரனிடமிருந்து பத்தடி தள்ளியே நிற்க முடியும்’ என்று சுவாமி விவேகானந்தரின் ஞானத்தைப் பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார்.
இறையியல்பில் இரண்டறக் கலப்பதற்குத் தயாராக இருந்த நரேந்திரரைக் கண்டு சிறிது அச்சம் கொண்டார் குருதேவர்.
மற்ற சீடர்களுக்காக தேவியிடம், ‘‘அம்மா, உலகை மயக்குகின்ற உன் மாயாசக்தியான திரையை இவர்களிடமிருந்து அகற்றிவிடு’’ என்று பிரார்த்திப்பார்.
அதே குருதேவர், ‘‘அம்மா, உன் மாயாசக்தியைச் சிறிதளவு நரேந்திரனிடம் வைத்திரு’’ என்று பிரார்த்தித்தார். ஏனெனில் நரேந்திரர் மூலம் உலகிற்குச் செய்ய வேண்டிய மகத்தான பணிகள் இருந்தன.
இப்படிப்பட்ட நரேந்திரரை மாயாசக்தி மயக்குவதற்குக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டால் எப்படி இருக்கும்? இதனை ‘ஆட்டுவிப்பவளே அசந்துவிட்டாள்’ என்ற கதையில் பாமதிமைந்தனின் எழுத்தோவியத்தில் காணலாம்.
பொதுவாக, மனிதர்களை மயக்கும் காமம், வித்யா கர்வம், வறுமை, குருபீட மோகம், புகழ், நோய் ஆகியவை சுவாமிஜியின் வாழ்விலும் வரிசையாக வந்தன. ஆனால் சுவாமிஜியோ இவற்றால் மயங்காமல் தமது தெய்வ சொரூபத்தில் திளைத்தபடி, உலக நன்மைக்கான பணியைச் செவ்வனே நிறைவேற்றினார்.
மாயாசக்தி சுவாமிஜியை சிக்க வைக்கச் செய்த முயற்சிகளை அவளே விளக்குவதாக சுவாமிஜியின் வாழ்வில் நடந்த சம்பவங்களை அழகுபட எழுதியுள்ளார் பாமதிமைந்தன். இறுதியில் இந்த மாயை நம்மைப் பற்றாதிருக்கும் வழி எது என்பதும் கூறப்பட்டிருக்கிறது.
என்னையா யார் என்று கேட்கிறீர்கள்?
நான்தான் உங்கள் எல்லோரையும் ஆட்டி வைப்பவள். இந்த உலகமே என் பிடிக்குள் சிக்கியிருக்கிறது.
நான் ஆண்டியை அரசனாக்குவேன்; அரசனை ஆண்டியாக்குவேன். புகழில் நிமிர்ந்தவனை மண்ணைக் கவ்வச் செய்வேன்; பெயர்கூட எழுதத் தெரியாதவனைக் கவி என்று பெயரெடுக்க வைப்பேன்.
அழகைக் காட்டி ஆணை மயக்குவேன்; நானே அழகி என்று பெண்ணுக்கு நினைப்பு தந்து அவளுக்குக் குழி தோண்டுவேன்.
‘அநிர்வசனீயம் – இன்ன விதம் என்று கூற முடியாதவள்’ என்று கூறி சாஸ்திரங்களே என்னிடம் தோற்கும். தாயே துணை என்று இருந்தவனைத் தாரத்தின் முன்பு தறுதலையாக்குவேன். பணத்தைக் காட்டிப் பலரைப் பைத்தியமாக்குவேன்.
என்னைக் கண்டு பயந்து தவமியற்றுபவர்கள் பலர். நான் அவர்களின் மனதில் புகுந்து கொண்டு, ‘நான் அதை வென்றுவிட்டேன்’ என அகங்கார வசப்படுத்துவேன். அந்தச் சாதகர்களும் அதில் சிக்கி, அடுத்து முன்னேற முடியாமல் எனது ஏதோ ஒரு வலையில் வசப்படுவர்.
இப்படியாகப் பெயர், புகழ், காமம், குரோதம், பொருள் பற்று, அகங்காரம், ஆணவம் என்று என் ‘இணையதளத்தின்’ விஸ்தாரமும் வேகமும் பரவியுள்ளது.
என்னை இன்னுமா உங்களுக்குத் தெரியவில்லை?
‘அகடித கடனா படீயஸீ மாயா’ – நிகழ முடியாததையும் நிகழ்த்திக் காட்டுபவள் என ஆதிசங்கரரே பாடியிருக்கும் – நான்தான் மாயா சக்தி. பொதுவாக உலகம் என்னைப் பெண்ணாகப் பார்க்கும்.
ஆனால்..., இவ்வளவு கம்பீரத்துடனும் திமிருடனும்தான் நான் இருந்து வந்தேன் – அந்த இளைஞனைக் காணும் வரை.
‘லௌகீகம் மலிந்த கொல்கத்தாவில் இப்படி ஓர் அருமையான ஆன்மிக நாட்டம் கொண்டவனா?’, ‘உறையிலிருந்து உருவப்பட்ட ஒளிரும் வாளாக இவன் இருக்கிறானே?’ என்று அவனைப் பார்த்ததும் அவனது குரு ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியதைக் கேள்விப்பட்டேன்.
என்ன, இதுவரை என் பிடியில் சிக்காத ஒருவனா?
நான் இதுவரை பிடித்தவர்கள் எல்லாம் என் மாய வலையில் தாமாகவே வந்து விழுந்த விட்டில்பூச்சிகள்தான். அதில் எனக்கென்ன பெருமை உள்ளது?
இதோ, இவனை – இந்த நரேந்திரனைப் பிடித்தால்தான் என் பிடியின் பலத்தை இந்தப் புவனம் அறியும்!
நரேன் அழகிய இளைஞன். அது போதுமே, எடுத்தேன் ஆசை எனும் மாயவலையை.
கல்லூரி மாணவனான நரேந்திரன் அன்று பாடிக் கொண்டிருந்தான். அடடா, என்னவோர் அருமையான சாரீரம் அவனுக்கு என நானே மெல்ல மயங்கிவிட்டேன்.
அவனிடம் மயங்கிய இளம்விதவையாக அன்றிரவு அவன் முன் நின்றேன்! பாடிக் கொண்டிருந்தான் அவன் பக்தியோடு; நான் வாடி நின்றேன் ஆசையோடு.
இப்படியும் நடக்குமா? சட்டென்று அவன் செய்த காரியம் என் சப்தநாடிகளையுமே அடக்கிவிட்டது. நான் நின்றதோ மையல் மிக்கத் தையலாக. அவனோ, என் முன்னே வீழ்ந்து வணங்கி, ‘‘தாயே, இது தகாது’’ என்றான். எனக்கே வெட்கமாகி ஓடிவிட்டேன் புறமுதுகிட்டு!
முடியாது, என்னால் தோற்க முடியாது. இந்த நரேனை எப்படி என் மாய வலையில் சிக்க வைப்பது?
பணக்காரனான இவனுக்கு வறுமை வந்தால் என் வசமாவது நிச்சயம் என நினைத்தேன்; அதுவும் நடந்தது, அவனது தந்தை திடீரென்று கடனாளியாகக் காலமானார்.
வறுமை, பிரச்னை, அலைச்சல், ஏமாற்றம், உறவினரின் துரோகம் என்று எல்லாம் அவனைச் சூழ்ந்தன.
பல காலமாக நரேனை மணக்க ஒரு பணக்காரி பல வகையிலும் முயன்றாள். அவளுக்குள் நான் புகுந்து கொண்டேன், இதுதான் சமயம் என்று.
‘‘அன்பரே, என் சொத்தோடு என்னையும் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் ஏழ்மையும் தீரும், என் ஆசையும் தீரும்’’ என்று வசனம் பேசினேன். எதுவும் பேசாது என்னை விசனப்பட வைத்துவிட்டுச் சென்றுவிட்டான் நரேன். ஆ! மீண்டும் எனக்குத் தோல்வி!
உடலிச்சை அவனுக்கு உமிழ்ந்த எச்சிலோ!
பரவாயில்லை. வேறு என்ன செய்யலாம்?
இவன் பெரிய படிப்பாளி ஆயிற்றே! ஹிந்தி, ஆங்கிலம், வங்காளம், சமஸ்கிருதம் மொழிகளில் தேர்ந்த இவனை, பண்டிதன் என்ற கர்வ வலையில் பிடிக்கப் புறப்பட்டேன்.
ஒரு துறை அறிவே போதும் ஒருவனை அகங்காரத்தில் அலைக்கழிக்க! இவனோ, கீழை, மேலைத் தத்துவங்களில் கரை கண்டிருக்கிறான். அறிவியலும் சமயமும் அவனது இரு கண்கள். ஆன்மிகம் அவனுக்கு நெற்றிக்கண்!
ஆனால் அங்கும் அவன் எனக்குச் சிக்கலை ஏற்படுத்தினான். பொதுவாக, மெத்தப் படித்தவர்கள் ஆரம்ப நோக்கத்தை நழுவ விட்டு, சந்தனக்கட்டைகளைச் சுமக்கும் கழுதைகளாகச் செய்திகளைச் சுமப்பார்கள்!
ஆனால் இவனோ தத்துவம் படித்த பிறகும் வறட்டு அறிவு என்ற மாய வலையில் விழாமல் இருக்கிறானே!
அதோடு, ‘நீங்கள் கடவுளைக் கண்டுள்ளீர்களா?’ என்ற கேள்வியைப் பல ஆன்றோர்களிடம் கேட்கிறானே!
இப்படிக் கேள்வி கேட்டால், நான் என்னதான் செய்ய முடியும்?
கல்வியை ஞானமாக்க எங்கு கற்றான் இவன்?
மீண்டும் அவமானம் எனக்கு! ஆன்மிக வெகுமானம் அவனுக்கு! இவனை ஏன் என்னால் கவர முடியவில்லை?
கலந்தாலோசித்தேன், என் தோழிகள் பலருடன்.
‘‘பரமஹம்சரின் நேரடிப் பார்வையில் உள்ள ஒருவனை மாயையான நீ பார்த்துப் பேசியதையே எங்களால் நம்ப முடியவில்லை...?’’ என்றனர் அவர்கள் சந்தேகத்துடன்.
சில சித்தர்களும் சாஸ்திரத்தூக்கிகளும் மாயா தேவியான என் தன்மை தெரியாமல் என்னை வசைபாடுவார்கள்; ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணரோ, எனது நல்ல அம்சங்களை ‘வித்யா மாயை’ என்றும், அல்லாததை ‘அவித்யா மாயை’ என்றும் பிரித்து இசை பாடுவார்.
அதன் பலன் என்ன? என்னை நானே மதிக்கும்படிச் செய்துவிட்டார்; மேலும் ஆன்மிகத்தில் முயல்பவர்களுக்கு உதவுபவளாகவும் நான் மாற வேண்டியிருக்கிறது.
ஸ்ரீராமகிருஷ்ணரின் இந்தப் பாங்கை உணர்ந்தவர்களிடம் எனக்கொரு வாஞ்சை வரும். அதனால் அவரைச் சேர்ந்தவர்களை நான் அதிகம் அண்டுவதில்லை.
இது இப்படி இருந்தாலும் நரேனைச் சிக்க வைக்க நான் தீவிரமாகவே இருந்தேன். இவனிடம் நான் மண்ணைக் கவ்வும்போது என் முழு பலமும் எனக்குப் புரிகிறதோ என்ற ஐயம் எனக்கு அடிக்கடி வருகிறதே!
இவனுக்கு அபூர்வ சித்திகள் கொடுத்தால், அதில் அவன் மயங்கிவிடுவான் என இருந்தேன்.
ஆச்சரியமாக, ஒரு நாள் ஸ்ரீராமகிருஷ்ணரே நரேனிடம் சித்திகள் வேண்டுமா என வினவினார். ‘நரேன், வசமாக நீ இன்று மாட்டினாய்’ என என் மனம் துள்ளியது.
ஆனால் அவன் ஏன் பதில் கூற இவ்வளவு தயங்குகிறான்? அவனது குருவே அதை மீண்டும் கேட்டார்.
அதற்கு அவன், ‘‘குருதேவா, இந்த அபூர்வ சித்திகளால் நான் இறையனுபூதி பெற முடியுமா?’’ என்று கேட்டான். குருவோ, ‘‘முடியாது. இவை உனக்கு இறைவனைக் காட்டாது. மாறாக, உலகில் நீ பணியாற்றும்போது இந்த சித்திகள் உனக்குப் பயன்படும்’’ என்றார்.
உலகினர் பெறத் துடிக்கும் அஷ்டமாசித்திகளை இவனும் பெற்று அதில் சிக்குவான் என்றே நம்பினேன்.
அவனோ, ‘‘அப்படியெனில் குருவே, முதலில் இறைதரிசனம் பெறப் பாடுபடுவேன். அதற்கு முன்பு இந்த சித்திகளைப் பெற்றால் நான் என் லட்சியத்திலிருந்து விலகிவிடலாம் அல்லவா...?’’ என்றானே பார்க்கலாம்!
மெய்யான சீடரின் இந்தப் பதிலால் எந்த சத்குருதான் மெய்சிலிர்க்க மாட்டார்? ஸ்ரீராமகிருஷ்ணர் புன்னகைத்தார்; நான் நாணிக் கோணினேன் மீண்டும்.
ஓஹோ, பரமஹம்சர்தான் என் பாதையில் குறுக்கே நிற்கிறாரா? குருசக்தியா நரேனைக் காத்து வருகிறது!
ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் புற்றுநோய் என அறிந்தேன். பரமஹம்சர் மறையும் முன், ‘‘நரேன், எல்லாச் சீடர்களையும் உன் பொறுப்பில் விட்டுச் செல்கிறேன்’’ என்றார். எனக்கு ஒரு புது அஸ்திரம் கிடைத்துவிட்டது.
‘ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் பின் என் சொற்படிதான் நீங்கள் நடக்க வேண்டும்’ என்ற ‘குருபீட அதிகார அகங்காரத்தை’ நரேனுக்குள் நுழைக்க முயன்றேன்.
அவனோ, தனது சகசீடர்களுக்குத் தாய்போல் சேவை செய்தான். இதனால் அவன் என் தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே எப்போதும் போலிருந்தான்.
காலம் கனிந்தது எனக்கு. காலமானார் குரு.
இன்று அவன் குருவற்ற சீடன். நானோ உருவற்ற சக்தி. நானா? அவனா? பார்த்து விடுகிறேன்.
நரேன் நாடு முழுவதும் துறவியாக அலைந்தான். நானும் பின் தொடர்ந்தேன் அவனைத் தோற்கடிக்க.
ஒரு நாள் அவன் சிக்கினான் சோர்வாக லிம்டி என்ற ஊரில். அங்கு ஓர் இளைஞர் கூட்டம், ஆடல் பாடல்களில், காமக் களியாட்டங்களில் கடவுளையும் காணலாம் என ஓர் இல்லத்தில் கூத்தடித்துக் கொண்டிருந்தனர்.
சொல்ல மறந்துவிட்டேனே, அவர்கள் ஏற்கெனவே என் அடிமைகள்தான். அந்தக் கூட்டத்தின் சொல் ஜாலத்தில் எப்படியோ நரேனைச் சிக்க வைத்தேன். ஏமாற்றி, தனியறையில் பூட்டி வைக்கச் செய்தேன்.
அந்தக் கூட்டத்தின் தலைவனின் மனதுக்குள் நான் புகுந்து நரேனின் பிரம்மசரிய விரதத்தைக் குலைக்கத் திட்டமிட்டேன். ஆனால் நிலைகுலையவில்லை நரேன்.
நரேன் எப்படியோ புத்திசாலித்தனமாக அந்த ஊர் சிற்றரசனுக்குச் செய்தி அனுப்பி, அந்தப் போலிக் கூட்டத்தினரின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
மீண்டும் கர்வ பங்கம் எனக்கு. திரும்ப யோசித்தேன்.
வெளியில் சுற்றும்போது யாரும் மகானாக நடக்கலாம். யாரும் பார்க்காதபோது, தனிமையில் உடலுக்கும் மனதிற்கும் எல்லா சுகமும் தரும் சூழலில் இவனைத் தள்ளினால், சிக்காதிருப்பானா?
சிந்திக்கையில் எனக்குப் புதுத் தெம்பே பிறந்தது.
நரேனின் தேஜஸைக் கண்டு அரசர்கள் தங்கள் அரண்மனைகளில் தங்குவதற்கு அழைப்பு விடுப்பார்கள். ஏழைகளின் தலைவனான அவனும் செல்வான்.
ஏன்? அந்தப்புரங்களில் மட்டும் கோலோச்சி வந்த அந்த அசட்டு அரசர்களிடம், மக்கள் நலன் காக்க செங்கோலோச்ச வாருங்கள் என்று அழைக்கத்தான்.
சில நாட்களில் விலையுயர்ந்த மெத்தைகளில் நரேனை உறங்க வைப்பார்கள். இரவில் பணிப்பெண் அவனுக்குச் சாமரம் வீசுவாள். நான் அன்று ஒரு பணிப் பெண் உருவில் அவனைப் பந்தாட நினைத்தேன். அவனை வீழ்த்திட, முன்பு பொய்த்த அதே மன்மத அஸ்திரத்தோடு நின்றேன் ரதியாக.
என்னாலேயே என்னை நம்ப முடியவில்லை. அவனது திருமுகத்தைப் பார்த்ததும் எனக்கே ஓர் ஆவல் பிறந்தது. இவனை வீழ்த்தும் முன்பு, இவனது விவேகத்திற்கு ஒரு சிறிதாவது சேவை செய்தால் என்ன?
அதனால் விசிறியால் சற்று வீசினேன். அவன் அயர்ந்து தூங்கினான். சோர்ந்திருந்த நானும் மெல்லக் கண் வளர்ந்தேன்.
நான் வேக வேகமாக விழித்துக் கொண்டு எழுந்தால்..., அங்கே விவேகானந்தன் விடிய விடிய தியானத்தில் லயித்திருந்தான். அவனுள் தெய்வ நடை திறந்திருந்தது; நான் நடையைக் கட்டிவிட்டேன் அங்கிருந்து!
என்ன இது, எல்லோரையும் குழப்பும் என் மனதா இன்று சஞ்சலமற்ற சத்துவத்தில் மூழ்கியுள்ளது! இவனது ஒழுக்கத்தின் முன்பு நான் ஒடுங்கியே போனேன். இனி இவனை இவராகத்தான் விளிக்கப் போகிறேன்.
சுவாமி விவேகானந்தரிடம் என் தோல்வியை ஒத்துக்கொள்ளத் துணிவில்லைதான் எனக்கு. அல்பமான ஆயுதத்தால் இவரை அடிபணிய வைக்க முடியாது என்பதை மிகத் தாமதமாகத்தான் தெரிந்து கொண்டேன்.
இவருக்குக் கருணை மிக அதிகம். ஆம், அதுதான் சரி, இவரது நாட்டு மக்களின் அறியாமையையும் துன்பத்தையும் காணச் செய்தால், மக்கள் மீது இவருக்குக் கருணை பெருகி..., மக்கள் தலைவன் என்ற சம்சாரப் பந்தத்தில் சிக்குவார் என்று நினைத்தேன்.
அதற்காக நாடு முழுவதும் அவர் சுற்றியபோது நானும் பின்தொடர்ந்தேன். ஆனால் முடிவில் அவர் செய்த ஒன்று என்னைப் பைத்தியமாகவே மாற்றிவிட்டது.
குமரிமுனையில் தேவியின் அருளோடு, பாரத மாதா மீது சுவாமி விவேகானந்தர் மூன்று நாட்கள் தியானம் செய்தாரே! இரவின் கடுங்குளிரில், சுட்டெரித்த பகலில், எந்தத் துணையுமின்றித் தனிமையில், உணவின்றி... கடல் நடுவே அவர் தவத்தில் கம்பீர இமயமாக நின்றபோது, நான் கரையில் ஒதுங்கினேன், அழுக்கு நுரையாக!
மீண்டும் மண்ணைக் கவ்வினாயா? என நீங்களே கேலி செய்யும் அவலநிலை எனக்கு வந்துவிட்டதே!
முடியாது, இவரை அசைக்காமல் விட முடியாது.
யோகபூமியான பாரதத்தில் இருக்கும் வரைதானே இவரது தவத்தை என்னால் தீண்ட முடியாது. போக பூமிக்கு இவரைக் கடத்தினால் என்ன என்று ஆசைப்பட்டேன், அதுவும் நடந்தது. சிகாகோ சர்வ சமயப் பேரவை ஆரம்பிக்க இன்னும் ஒரு சில வாரங்கள் இருந்தன. இவரிடம் பணமில்லை, தெரிந்தவர் இல்லை, அனைவரும் அவரை விரட்டித் தவிக்கவிட்டனர்.
பிறர் புறக்கணிக்கும்போது இவரைப் புரட்டிப் போட்டுவிடலாம் என்று விரக்தி வலையை நான் வீசினால்..., அங்கும் அவர் தமது ஆசானை அடிபணிந்து நின்றார். மீண்டும் எனக்கு..... சே!
சர்வ சமயப் பேரவையில், உதித்த ஒரு வாக்கியத்தாலேயே உலகையே தன்னை உற்று நோக்க வைத்தவர் பின்னே – நானும் தொடர்ந்தேன், பெரும் புகழ் என்ற மாய வலையுடன். போதாக்குறைக்கு இளம்பெண்களையும் சேர்த்துக் கொண்டேன்.
அவருடன் கைகுலுக்க நானும் அந்தப் பெண்கள் அனைவரது கைகளுக்குள்ளும் புகுந்து முயன்றேன். அதற்காக அரும்பாடு பட்டதில், அவரது அங்கியை மட்டுமே என்னால் தொட முடிந்தது. என்னால் அசைக்க முடியாத நெருப்பென நின்றார், அந்த நெடுமாலின் விபூதியான விவேகானந்தர்!
அன்று முதல் அவரே உலக மகா நாயகன். பத்திரிகைகள் அவர் படத்தை வெளியிட்டுக் கௌரவம் பெற்றன.
புகழ் எனும் அம்பைத் தொடுக்க அவருக்குள் நுழையலாம் என்று புகப் போனேன்; ஆனால் அன்றைய இரவின் தனிமையில் அவர் தரையில் படுத்தபடித் தன் தாய்நாட்டு மக்களின் துன்பங்களை எண்ணி அழுதார்.
அந்த அழுகையை நிறுத்த என்னால் ஏதாவது செய்ய முடியாதா? என்று எனக்கே சிந்தனை மாற ஆரம்பித்தது. சில நாட்கள் சஞ்சலமின்றி இருந்தேன்.
மீண்டும் எனக்குள் அதே தீராத வேதனை. ஓர் ஆண்டியின் சக்தியா என்னை நையாண்டி செய்வது? கூடாது, எடு புது ஆயுதத்தை.
பணத்தை அள்ளி அவர் மீது வீசினாலென்ன? அதையும் செய்தேனே...!
ஆனால் எவ்வளவு பணம் கொட்டினாலும் அவற்றை அவர் தன் தாய்நாட்டுப் பணிக்காகச் சேர்த்து வைப்பதில் சமர்த்தராக இருந்தாரே!
நான் சோர்ந்து போகிறேனா அல்லது இவரிடம் தோற்பதிலும் சுகம் காண்கிறேனா?
எனக்கே புரியவில்லை போங்கள்.
ஆளும் இங்கிலாந்தும் அடிமை இந்தியாவும் இவரைப் பாராட்டுகின்றன. அழகிய ஆண்களும் பெண்களும் இவரை ‘குரு, பாபா’ என ஆத்மார்த்தமாக அழைக்கிறார்கள். 35 வயதில் இவ்வளவு பேருக்குத் தந்தையாகவும், குருவாகவும் மாற இவரால்தான் முடியும்!
நான் காத்திருந்தேன் கடுகடுப்புடன்.
ஒரு நாள் கண்ணாடியில் இவர் தன்னையே திரும்பத் திரும்பப் பார்த்தபடி இருந்தார். துள்ளிக் குதித்து எழுந்தேன், அவரை வளைக்க! அவரது சிஷ்யையான மிஸ். வால்டோ மூலம் நானே சிந்தித்தேன்.
‘இவரோ, தான் ஆன்ம ஸ்வரூபமாக இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்; ஆனால், தமது உருவின்மீது இவருக்கும் பெரும் ஈர்ப்பு இருப்பதை உணர்ந்துவிட்டேன்; இதை உலகிற்குச் சொல்லிவிட வேண்டும்’ என்று பரபரத்தேன்.
சட்டென்று சிஷ்யையின் பக்கம் திரும்பிக் கூறினார் விவேகானந்தர்:
‘‘வால்டோ, ஆச்சரியமம்மா. ஒவ்வொரு முறை கண்ணாடியைப் பார்த்துத் திரும்பியதும், நான் எவ்வாறு இருக்கிறேன் என்பது எனக்கு நினைவே வர மாட்டேன் என்கிறது.’’
‘விவேகானந்தருக்குத் தேகாத்ம புத்தி கிடையாது; தேசாத்ம புத்திதான் உண்டு’ என்று சுவாமி அகண்டானந்தர் பின்பு ஒருமுறை கூறியபோதுதான் எனக்குப் புரிந்தது.
பெண், பணம், புறக்கணிப்பு, வறுமை, குருபீடம், உலகப் புகழ், ஞானம், கௌரவம் என்றெல்லாம் வலை வீசி வலை வீசி எனக்கே வயதாகிவிட்டது போலானது.
கடைசியாக, கொடுமையான மாயவலையான நோய் என்பதையும் வீசினேன். விவேகானந்தரை வியாதியாலேயே வெற்றி கொள்ளலாம் என்று என் அகங்காரமும் சிரித்தது. அதற்கான வாய்ப்புகளாக அவருக்கு ஏற்கனவே சில நோய்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றிரண்டை ஒரேடியாகத் தூண்டிவிட்டேன்.
ரத்தக்கொதிப்பா? நீரிழிவா? நரம்புத் தளர்ச்சியா?
எது வந்தாலும் தமது குருவைப் போல், உடல் துன்பப்பட்டாலும், இவரும் ஆன்மாவிலேயே திளைத்தார். நானும் நோயைத் தீவிரப்படுத்தினேன். முடிவில், அவரது கண்களைக் குறிவைத்துத் தாக்கினேன்.
பலமுறை மக்களுக்காகக் கண்ணீர் வடித்த அவரது கண்களில் இன்று ரத்தம் வெளியே தெரிய வைத்தேன். கண்களில் உயிர் போகும் வலி.
ஆனால், திக்குமுக்காடும் அந்த நோவிலும் அவர், ‘‘நான் இப்போது ஒற்றைக் கண்ணுள்ள அசுரகுரு சுக்ராச்சாரியராக மாறிவிட்டேன்’’ என்று பகடி பண்ணுவார்.
நான் வாய் மூடிவிட்டேன் வார்த்தையின்றி.
ஓ மக்களே, ‘கஸ்தரதி மாயாம்? – எவன் மாயையைக் கடக்கிறான்’ என்று நாரத பக்தி சூத்திரம் கேட்கும்.
அக்கேள்விக்கு, ‘பற்றற்றவன், அகங்கார–மமகாரம் நீங்கியவன், சாதுக்களுக்குச் சேவை செய்பவனே மாயையைக் கடப்பான்’ என அதே சாஸ்திரம் பதில் தரும்.
மனிதகுல மாணிக்கமான சுவாமி விவேகானந்தரையும், அவரது செயல்முறை வேதாந்தத்தையும் பிடித்துக் கொள்ளுங்கள். அதன்மூலம் பக்தியும் ஞானமும் பெற்றுச் சேவை செய்தால், நீங்களும் என்னைக் கடக்கலாம்.
விவேகானந்தரை நீங்கள் பற்றும்போது, பயமுறுத்தும் மாயையான நான் உங்களைப் பற்றும் விதம் எப்படித் தெரியுமா?
தாய்ப்பூனை தன் குட்டியைப் பிடிப்பது போல!
இல்லாவிட்டால், பூனையின் வாயில் எலி சிக்குவது போல நீங்கள் என்னிடம் சிக்குவீர்கள்!
இதனைக் கேட்க
சுவாமி விமூர்த்தானந்தர்
11.06.2024
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்