பாலூட்டும்போதே பகவானையும் ஊட்டுங்கள்!
பாலூட்டும்போதே பகவானையும் ஊட்டுங்கள்!
பாலூட்டும்போதே பகவானையும் ஊட்டுங்கள்!
படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்
அன்புப் பெற்றோர்களே! பேரன் பேத்திகளை வளர்க்கும் பொறுப்பிலுள்ள பெரியோர்களே!
உங்கள் பிள்ளைச் செல்வங்கள் நாடு போற்றும் நல்லவர்களாக வளர விரும்புகிறீர்கள். அவர்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறப்பாக வளர்ப்பது உங்களது முக்கிய கடமை.
நீங்கள் குழந்தைகளைப் பெற்றவர்கள்; ஆம், இறைவனிடமிருந்து பெற்றவர்கள்!
உங்கள் பொறுப்பில் பேணி இறைவனே அவர்களை வழங்கியுள்ளான். வளர்த்திட அவ்வாறு பகவானிடமிருந்து பெற்ற பிள்ளைகளை பகவானே மெச்சும்படியாக வளர்ப்பது உங்கள் கடமை அல்லவா?
அக்கடமையை நீங்கள் செய்தால் நாட்டிலும், சமுதாயத்திலும், வீடுகளிலும் உள்ள சீர்கேடுகள் விரைவில் தேயும். நல்லது வாழும்; அல்லாதது அகலும்.
வாருங்கள், பொறுப்பு மிக்கப் பெற்றோர்களே! முதலில் உங்கள் குழந்தைகளை சத்புத்திரர்களாக - சத்புத்திரிகளாக மாற்ற ஓர் எளிய பயிற்சி இதோ.
அம்மா, உங்களுக்குக் கைக்குழந்தை உள்ளதா? குழந்தைக்கு எதை ஊட்டினாலும் நீங்கள் எந்த மனநிலையில் ஊட்டுகிறீர்களோ, அதைப் பொறுத்துத்தான் பிள்ளையின் மனவளர்ச்சி - அறிவு வளர்ச்சி - அக வளர்ச்சி ஆகியவை அமைகின்றன.
ஆதலால் இனி ராம், ராம், ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய போன்ற திருநாமங்களை உச்சரித்தபடி உங்கள் குழந்தைக்குப் பாலூட்டுங்கள். நம்புங்கள். அப்படிச் செய்யும்போது பாலோடு நீங்கள் பகவானின் சக்தியையும் உங்கள் குழந்தைக்கு அளிக்கிறீர்கள். இப்படித்தான் சிறந்த தாய்மார்கள் செய்தார்கள்; செய்கிறார்கள்.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருநாமத்தை ஓதினால் அனைத்துக் கடவுளர்களின் நாமங்களையும் ஓதியதற்குச் சமம் என்பர் சான்றோர்.
1 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளின் அம்மாவா நீங்கள்?
நீங்கள் மனதில் வந்ததை, இப்போது குழந்தையின் காதில் கூறுங்கள். நாமத்தைக் குழந்தையே கூறும்படி ‘என் செல்லமே... ராமகிருஷ்ணா என்று சொல்லு பார்க்கலாம்' என்று அதற்கு மெல்லப் பயிற்சி தாருங்கள். குழந்தை மழலை மொழியில் அதைக் கூற ஆரம்பித்ததைக் கண்டு நீங்கள் மகிழ்வீர்கள்.
பிறகு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் படத்தை உங்கள் குழந்தைக்குக் காட்டுங்கள். குழந்தையின் பார்வை அடிக்கடி படும் இடத்தில் அவரது படத்தை வையுங்கள். அதன் மூலம் குழந்தையின் மனதில் அந்தத் திருவுருவம் மெல்லப் பதியும்.
‘சொல்லு கண்ணு, இவர்தான் ராமகிருஷ்ண சாமி' என அடையாளம் காட்டச் சொல்லுங்கள். அதன் பிஞ்சுக்கரங்களால் அவரை வணங்கக் கற்றுத் தரவும்.
உறவினர்கள் வந்தால், அவர்களிடம் உங்கள் குழந்தை - ஸ்ரீராமகிருஷ்ணரை அடையாளம் காட்டி வணங்குவதைக் கூறிக் கூறிச் சந்தோஷப்படுங்கள். அதனால் எப்படியெல்லாம் ஆனந்தம் கிடைக்கும் என்பதை ஒருமுறை முயன்றுதான் பாருங்களேன்.
4 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோரா நீங்கள்?
காட்டுப் பகுதியில் வாழும் ஓர் இளம்தாய் தன் மகனை வளர்க்க மிகவும் கஷ்டப்படுகிறாள். பணமில்லை, உறவினர் இல்லை. அவளது 4 வயது மகன் பள்ளிக்குச் சென்று வருவதில் சிரமப்படுகிறான். காலையில் தனியாகப் போய் விடுவான். ஆனால் பள்ளி முடிந்து சாயங்கா லம் தனியாக வீடு திரும்பும் போது அவனுக்குப் பயம் வந்துவிடும்.
இனி பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அடம் பிடிக்கும் மகனைத் தாய் எப்படிச் சமாளித்தாள்?
“மகனே, நீ தனியாக இருப்பதாக நினைக்காதே. நீ கஷ்டப்படும்போதெல் லாம் உனக்கு உதவிட உன் அண்ணன் கோபாலன் காட்டில் உள்ளான். அவனைக் கூப்பிடு. நிச்சயம் வருவான்” என்றாள்.
கிருஷ்ணரிடம் மனமுருகி பிரார்த்தனை செய்து, “என் மகனை நீதான் காக்க வேண்டும்' என வேண்டினாள்.
மறுநாள் முதல் சிறுவன் காட்டில் கண்ணனை அழைப்பதும், கண்ணன் வருவதும், அவனது பயம் போனதும் அருமையான கதை.
ஸ்ரீராமகிருஷ்ணர் கூறும் இக்கதையில் வரும் தாய், தெய்வ துணையைத் தன் மகனின் தினசரி வாழ்வில் கொண்டு சென்றதுபோல் நீங்களும் உங்கள் பிள்ளைக்குத் தெய்வத்தைக் காட்டிக் கொடுங்கள்.
பெற்றோர்களே, நீங்கள் இது போன்ற கதைகளோடு, ஒரு 'சூப்பர்' சம்பவத்தையும் சொல்லலாம். ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்ந்த ஊரில் திடீரென்று வெள்ளம் வந்து ஒரே தண்ணீர். ஸ்ரீராமகிருஷ்ணர் அந்த நீரில் மெல்ல நடந்து கொண்டிருந்தார்.
குளத்திலிருந்த மீன்கள் எல்லாம் வெளியே வந்துவிட்டன. பலர் அவற்றை அடித்தும், பிடித்தும் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு மீன் மட்டும் ஸ்ரீராமகிருஷ்ணரது பாதங்களையே சுற்றிச் சுற்றி வந்தது. ஒருவர் அதைப் பிடிக்க வந்தார்.
ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் அந்த மீனைத் தமது கைகளில் ஏந்தி, குளத்திலேயே விட்டு வந்தார். "மகனே, மகளே, அந்த மீன் மாதிரி நீ ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சென்றால் நீயும் நிச்சயம் கஷ்டங்களிலிருந்து காக்கப்படுவாய்” என உங்கள் குழந்தைகளுக்குப் புரிய வையுங்கள்.
இது போன்ற மற்ற அருளாளர்களின் தெய்விகச் சம்பவங்களையும் கூறுங்கள்.
உங்களது குழந்தைகள் 7-9 வயது உள்ளவர்களா?
இன்றைய பள்ளிச் சூழ்நிலையில் குழந்தைகளுக்கு ஆடிப்பாட நேரம் கிடைப்பதில்லை. நகரங்களில் அவர்கள் இஷ்டம்போல் விளையாட ஏற்ற இடம்கூடக் கிடைப்பதில்லை.
ஸ்ரீராமகிருஷ்ணர் சிறு வயது முதல் ஆனந்தத்தின் குழந்தையாகவே இருந்து வந்தார். ஆட்டம், பாட்டு, கூத்து, மிமிக்ரி, நாடகம், கதை சொல்வது-கேட்பது போன்ற எல்லாவற்றிலும் திறமைசாலி அவர். உங்கள் குழந்தைகளுக்கும் அந்த மகிழ்ச்சி கிடைக்கட்டும்.
பல பெண்களைக் கொண்ட ஒரு வீட்டின் பெரியவர், கதாதரை (ஸ்ரீராமகிருஷ்ணரின் சிறுவயது பெயர்) உள்ளே அனுமதிக்கவில்லை.
‘என்னை மீறி உள்ளே நீ போக முடியாது' என்றார் பெரியவர்.
‘உங்களுக்குத் தெரிந்தே உங்கள் வீட்டிற்குள் போகிறேன் பாருங்கள்' என்று சவால்விட்டார் கதாதரன்.
சில நாட்கள் கழித்து, மாலை நேரத்தில் கதாதரன் ஓர் ஏழைப் பெண்ணாக வந்தான். அந்தப் பெரியவரும் ‘அவள்' மீது இரக்கப்பட்டு அன்றிரவு தன் வீட்டிலேயே தங்கிவிட்டுச் செல்லுமாறு சொன்னார்.
சிறுவன் கதாதர் வீட்டிற்குள் சென்று தன் வேடத்தைக் களைந்தான். பெண்கள் எல்லோரும் அவன் பாடும் பக்திப் பாடல்களைக் கேட்டு ஆனந்தமடைந்தனர். வந்தது யார் என்பதை அறிந்த பெரியவர், தான் எப்படி இச்சிறுவனிடம் ஏமாந்தோம் என வியந்தார்!
ஆம், ஸ்ரீராமகிருஷ்ணர் இருக்கும் இடத்தில் ஆனந்தம் இருக்கும். உங்கள் பிள்ளையிடம், “நீ போகும் இடமெல்லாம் பிறர் சந்தோஷமாக இருக்கிறார்களா, என்று கவனி” என்பதைப் பார்க்கச் சொல்லுங்கள்.
உங்களது குழந்தைகள் 10-12 வயது உள்ளவர்களா?
பெற்றோர்களே, ஸ்ரீராமகிருஷ்ணர் எதையும் விளையாட்டாகப் பார்த்தார் என நினைத்துவிட வேண்டாம். அவர் எதைச் செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி, திறமையின் வெளிப்பாடு மிளிரும்.
அவர் மண் பொம்மை செய்தால் அதை வைத்து பூஜிக்கப் பலருக்கும் பிடிக்கும். எல்லாவற்றிலும் ஒரு நிறைவு, ஆத்மார்த்தமான ஈடுபாடு இருக்கும். யார் இப்பண்பில் வளர்கிறார்களோ, அவர்களே வாழ்வில் பெரிய காரியங்களைச் சாதிப்பர்.
அன்று சிவராத்திரி. நாடகத்தில் சிவனாக நடிக்க வேண்டியவருக்கு உடல் நலமில்லை. சிறுவன் கதாதரனை சிவனாக அலங்கரித்தார்கள். உடனே நாடகத்தில் வசனம் பேச வேண்டிய கதாதர் உணர்வு நிலையில் சிவனுடனேயே ஐக்கியமாகிவிட்டார். அன்று நாடகத்தைப் பக்தியுடன் கண்டவர்கள் மேடையில் கதாதரனைக் காணாமல் சிவனையே கண்டு ஆனந்தமடைந்தனர்.
உங்களது குழந்தைகள் 13-15 வயது உள்ளவர்களா?
ஆணோ, பெண்ணோ, சிறு வயதில் கடவுளைப் பற்றிச் சொன்னால் நம்புவர்; அவர்களாகவே தெய்வத்தைப் பற்றி அறியும்போது அவர்களுக்கு வயதாகிவிடுகிறது. அந்த வயதில் வரும் தெய்வ நம்பிக்கை அவர்களுக்கு அதிகம் பயன்படுமா, சொல்லுங்கள்?
பெற்றோர்களே, நம் குழந்தைகளுக்கு அந்த நிலை வேண்டாம். ஒரு சம்பவத்தைக் கேளுங்கள்.
இறைவனைச் சிலையாக மட்டுமே எண்ணி பூஜாரிகள் அந்தக் கோவிலில் பூஜை செய்து வந்தார்கள். கிருஷ்ண விக்கிரகத்தை அன்று ஒரு பூஜாரி எடுத்துச் சென்றபோது கீழே விழுந்து அதன் பாதம் உடைந்து விட்டது. பூஜாரிகள் அந்தச் சிலையை ஒதுக்கிவிட்டு வேறு சிலையைப் பூஜிக்க வேண்டும் என்றனர்.
இதைப் பற்றி, கோவிலின் உரிமையாளரான ராணி ராசமணி ஒருவர் மூலம் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் வினவியபோது, “ராணியின் மருமகன் கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டால், அதற்காக ராணி அவரைத் தள்ளிவைத்து விடுவாரா?” என்று கேட்டு, சிலையை உயிருள்ள ஒன்றாகவே காண வேண்டும் என்பதை ஸ்ரீராமகிருஷ்ணர் விளக்கினார். பிறகு உடைந்து போன சிலையையும் அவரே சரி செய்து கொடுத்தார்.
தாய் தந்தையர்களே, கடவுளின் படங்கள், தெய்வத் திருவுருவங்களைக் காட்டும்போது ‘உயிருள்ள அவை உன்னைக் கவனித்து வருகின்றன' என்ற எண்ணத்தைக் குழந்தைகளுக்குப் புகட்டுங்கள்.
உங்களது குழந்தைகள் 16-18 வயது உள்ளவர்களா?
சிறுவயதிலேயே தெய்வ நம்பிக்கையுள்ள குழந்தைகள் வாலிப வயதில் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் நேர்மையாளர்களாகவும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர்களாகவும் இருப்பர்.
பிராமணச் சிறுவனான கதாதர் வேறு ஜாதியைச் சேர்ந்த ஓர் ஏழைப்
பெண்ணிடமிருந்து உபநயனத்தின்போது பிக்ஷை ஏற்பதாக வாக்கு
தந்தான். எத்தனையோ பேர் சொல்லியும் கொடுத்த வாக்குதான் முக்கியம் தன் என்று நேர்மையைப் பிரகடனப்படுத்தினான் கதாதரன்.
பெற்றோர்களே, உங்கள் குழந்தைகள் நேர்மையில் திளைக்க வேண்டும். அதனால் இக்கதையை அவர்களுக்குக் கூறுங்கள்.
உங்களது குழந்தைகள் 18-20 வயது உள்ளவர்களா?
பொதுவாக, இந்த வயதில் மாணவ- மாணவிகளுக்குப் படிப்பில் கவனச்சிதறல்கள் அதிகம் ஏற்படுகின்றன. அதைத் தடுக்கப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சிரமப்படுகிறார்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணரை வணங்குபவருக்கு இச்சிக்கல் அதிகம் வருவதில்லை. அவர் தமது சாதனை நாட்களில் ஒருமுறை ஆறு மாத காலம் தியானத்திலேயே அசைவற்று இருந்தார்! அவரது தலைமுடி எல்லாம் ஜடா முடியாகி விட்டது. அதில் ஏதாவது இரை இருக்குமா என்று பறவைகள் பார்த்தன.
உங்களது குழந்தை மகனாக இருந்தால், எல்லாப் பெண்களையும் கௌரவ மாகவும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்பதை மிக முக்கியமாக அவனுக்குக் கற்றுத் தாருங்கள்.
உங்களது குழந்தை மகளாக இருந்தால், எல்லா ஆண்களையும் கௌரவமாகவும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்பதை மிக முக்கியமாக அவளுக்குக் கற்றுத் தாருங்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர் ஆண்கள் எல்லோரையும் சிவனின் அம்சங்களாகவும், பெண்கள் எல்லோரையும் சக்தியின் அம்சங்களாகவும் கண்டார்.
இப்படிப்பட்ட அருளாளரின் வரலாற்றை நீங்கள் பக்குவமாகப் போதித்தால் உங்கள் மகனும் மகளும் கவனச்சிதறல் என்ற வியாதியிலிருந்து ஒரேயடியாக விடுபடுவார்கள். குழந்தைகளுக்கான, வாலிபர்களுக்கான, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான என்று எண்ணற்ற சம்பவங்கள் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் உள்ளன.
அவற்றையெல்லாம் நீங்கள் படித்து உள்வாங்கி உங்களைச் சேர்ந்தவர்களுக்குக் கூறுங்கள். அதனால் உயிரை வாங்கும் பிள்ளைகளாக இல்லாமல், வீட்டிற்காகவும் நாட்டிற்காகவும் உயிரை வழங்குபவர்களாக
அவர்கள் விளங்குவார்கள்.
இதனைக் கேட்க
சுவாமி விமூர்த்தானந்தர்
17.05.2024
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்