அந்திமகிரியை
அந்திமகிரியை
படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்
செங்கல்பட்டிலுள்ள தொழுநோயாளிகளுக்கான அரசு ஆஸ்பத்திரி.
சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தொழுநோயாளிகளுக்கான சேவையின் பொறுப்பாளர் சிவாவும் அவரது மகனும் அந்தப் பிரேத அறை வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக?
சென்ற வாரம் பார்த்து வந்தவரை இன்று எடுத்துச் செல்ல வேண்டிய நிலையை எண்ணிச் சிந்தித்துக் கொண்டிருந்தார் சிவா. பிணத்தை எடுத்துப் போய் சுடுகாட்டில் அந்திமகிரியை செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தாகிவிட்டது.
“உங்களுக்கு எப்படிப்பா இந்தச் சேவையில இவ்வளவு ஈடுபாடு வந்தது?” நரேன் கேட்டான்.
“அது அந்த மகான் ‘அண்ணா' சுப்ரமண்யன் போட்ட வீரிய விதைப்பா. ராமகிருஷ்ண மிஷன் பள்ளி ஆசிரியரா இருந்த அண்ணாவோட வாழ்விலே நடந்த ஒரு சம்பவம்தான் என்னை இந்தச் சேவையில் ஈடுபடுத்தியது” என்றார் சிவா கலங்கியபடி.
அந்த ஆஸ்பத்திரியின் விசாலமான புல்வெளியில் தந்தையும் மகனும் அமர்ந்தனர்.
சிவாவின் மனமெனும் வான்வெளி விரிந்தது. சில அரிய சம்பவங்களும் பெரிய மனிதர்களும் அந்த வெளியில் நட்சத்திரங்களாக மின்னினர். அதில் ஒருவர் துருவ நட்சத்திரமாக மக்களை 'அண்ணா'ந்து பார்க்க வைத்தார்.
1940-களில் நமது கிராமங்களில் இருந்த அமைதி, வளம் எல்லாம் அலாதியானவை.
செங்கல்பட்டிலிருந்து 3 மைல் தொலைவில் ரெட்டிப்பாளையம் ரயில் நிலையத்தில் இறங்கி, ஓடிச் சென்றால் ஒன்பது நிமிடங்களில் வருவது ஆத்தூர் கிராமம்.
ரெட்டியார் குடும்பங்கள் உள்ள பகுதி. பாலாற்றில் குளித்து, வைணவ திருமண்ணுடன், பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு, பேர் போன அந்த ஊர் கத்தரிக்காயை விதவிதமாகச் சமைத்துக்கொண்டு பெருமாளுக்கும் சிவபெருமானுக்கும் உகந்தவர்களாக ஆஹா, அந்தக் கிராமிய மங்களம் இனி வருமா?
திடீரென இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. ஜப்பான்காரன் மெட்ராஸில் குண்டு போடப் போகிறான் என்றதும் மெட்ராஸ் பட்டணம் பஞ்ச பூதங்களை மட்டுமே தன்னிடம் கொண்டிருந்தது.
ஒரு ரயில் வண்டியில் துணி மூட்டைகளும் புத்தகங்களுமாக, குடுமி வைத்த, வைக்காத, அரை டிராயர் அணிந்த, விபூதி, குங்குமம், நாமம் போட்ட பல சிறுவர்கள் புறப்பட்டார்கள் ஆத்தூருக்கு.
சென்னை, ராமகிருஷ்ண மாணவர் இல்லம் ஆத்தூருக்கு மாறிய காலம்.
‘ஏழைப் பிள்ளைங்க படிக்க ராமகிருஷ்ண மிஷன் எவ்வளவோ செய்யுது. அதில நேக்கு கெடச்சது இந்த அணில் பங்கு’ என்று பாஷ்யம் ஐயங்கார் தன் பெரிய வீட்டையே இல்லமாக மாற்றிக் கொடுத்தார்.
மாணவர்களால் அண்ணா என அன்புடன் அழைக்கப்பட்ட என்.சுப்ரமண்யன் காலையில் ஆசனமும் கீதை பாராயணமும் கற்றுத் தர ஆரம்பித்தார். ரங்கையர் கண்டிப்புடன் அறிவியலையும் அன்புடன் தமிழையும் கற்றுத் தந்தார்.
கால் நிலத்தில் பதிய, கண்கள் வானத்தை அளந்திட அந்தக் காலத்து மாணவர்களுக்கு அதுவே ஓர் எளிமையான, இனிய குருகுலம் ஆயிற்று.
1946 முதல் 1957 வரை ஆத்தூரிலேயே மாணவரில்லம் செயல்பட்டது. அப்போது ஆயிரமாயிரம் ஆனந்தம். கல்வியில், பண்பில், விளையாட்டில், சேவையில் அப்பப்பா... அந்த உகப்பில் அப்போது நடந்து கொண்டிருந்த உலக யுத்தம்கூட மாணவ மனங்களில் ஓரங்கட்டப்பட்டுவிட்டது.
இப்படிப் பலவிதங்களில் மகிழ்ச்சி பாலாறாகப் பாய்ந்தாலும், அந்த ஆற்றில் ஒரு கருகிய மலர்-அது கமலம்.
ரங்கசாமி ஐயரின் இரண்டாவது மகள்.
கணக்கு வாத்தியாரின் மகளான அவள் போடும் கணக்குகள் 100 மதிப்பெண்கள் பெறும். ஆனால் அவளது வாழ்க்கைக் கணக்கு ஒரே பிணக்கு.
கணவனின் கனிவற்ற பாராமுகம் அவளைப் பைத்தியமாகவே மாற்றிவிட்டது. வண்டி வண்டியாகச் சீர்வரிசை அனுப்பியும், சில மாதங்களிலேயே கமலம் மனநிலை பாதிக்கப்பட்டவள் என வண்டியேற்றித் திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர்.
வாசமற்ற மலராக கமலம் தந்தை வீட்டிலேயே வாடி வந்தாள். வதங்க ஆரம்பித்தாள்.
நாட்கள் வருடங்களாயின.
கமலம் ஒரு நாள் உதிர்ந்து போனாள்.
கமலத்துக்குக் கொள்ளி போடக்கூட கணவன் வரவில்லை. ஊரே விசனப்பட்டது. அதைவிடக் கொடுமை, கமலத்தின் தந்தை கூறியது.
“எப்போ அவ அடுத்தாத்துக்குக் கல்யாணமாகிப் போயிட்டாளோ, அப்பவே அவ கோத்திரம் மாறிடுத்து. அவளுக்கு நா எப்டி கொள்ளி போடுறது?” என்றார் அவர் அழுதபடி.
மகளின் ஆரம்ப கால அன்னப்ராசன சடங்கினைப் பெரிதாகச் செய்தவர், அந்திமச் சடங்கு செய்யத் தடுமாறினார்.
அப்போது வந்தார் 56 வயதான 'அண்ணா' சுப்ரமண்யன். கமலம் கருகிப்போன செய்தி கேட்டு உருகி நின்றார்.
“ரங்கா, என்ன பேசுறே நீ? ஒன் பொண்ணுக்குக் கார்யம் செய்ய மாட்டியா?”
“கோத்திரம் மாறிடுச்சு, நான் இவளுக்குக் கார்யம் பண்ண முடியாதே?” என்று அழுதபடி தன் அறியாமையை அம்பலம் ஏற்றினார் ரங்கசாமி.
சாஸ்திரத்தில் கரை கண்ட அண்ணா விளக்கி ரங்கசாமியின் வாயை அடக்க அல்லது அடைக்க முடியும். ஆனால் இதயம் உருக வேண்டிய அந்த நேரத்தில் அறிவு–அதுவும் சக்கையறிவு பற்றிப் பேசிப் பயன் என்ன என்று எண்ணி விவாதிக்கவில்லை.
“ரங்கா, நம்ம கமலம் அநாதை இல்லப்பா. அவளுக்குக் கொள்ளி போடு. சாவிலாவது அவளுக்குச் சாந்தம் கெடைக்கட்டும்...” என்றார் அண்ணா கெஞ்சாத குறையாக.
“இல்ல அண்ணா, அவள இழந்த சோகமே நேக்கு போறும். சம்பிரதாயத்த மீறின பாவமும் நேக்கு வர வேண்டாம்...” ரங்கசாமி மறுத்தார்.
சாதுவான அண்ணா கோபத்துடன், “நிறுத்துமய்யா அழுகையை. உன்னை மாதிரியான ஆளைப் பார்த்துத்தான் விவேகானந்த சுவாமிகள் அவ்வளவு கொதிச்சுப் பேசினார். சாஸ்திரங்களைப் புரிஞ்சுண்டு, சடங்குகளை அனுஷ்டிக்கிறது பத்திப் பேசு. அதில்லாத வெத்து சடங்கைக் கொண்டு போயி கெணத்துலே போடு...” என்றார்.
ரங்கசாமியும் அதே வேகத்தில், “சடங்குகளோட அருமையத் தெரிஞ்ச நீங்களா இப்படி பேசுறேள்..? ஒரு வேளை உங்க..?” என்று கோபத்தில் ஏதோ கூற வந்தவர் சட்டென்று நிறுத்திக் கொண்டார்.
“நீ என்ன சொல்ல வந்தேன்னு நேக்குப் புரியறது. ஒன்னோட பொண்ணு கமலம் என்றதாலேதானே நான் இப்படி பேசுறேன்னு நெனைக்குற. அப்பிடியில்லே. என் பொண்ணுக்கே இப்டி ஆயிருந்தாகூட நா இதச் செய்யத் தயங்க மாட்டேன்.
“அந்திமகிரியை செய்றது எவ்வளவு ஒசத்தின்னு நோக்கு தெரியுமா? சாட்சாத் ஸ்ரீராமரே பறவைக்கு, அந்த ஜடாயுக்கு இதைச் செஞ்சார் தெரியுமா? அவர் வேற, இவரு வேற. ஜாதி மட்டுமில்ல, இனமே வேற வேற... அப்டியிருக்க, நீ பெத்தவளுக்கே செய்ய மாட்டியா?”
அண்ணா மூன்று பெண்களுக்குத் தந்தை, இப்போது கமலத்துக்கும் தந்தையானவர் போல் பொரிந்து தள்ளினார்.
ரங்கசாமியைச் சுற்றி நின்ற வைதிக வெற்றுக் கூட்டம் அவரைச் சிந்திக்க விடவில்லை.
“ஓய் ரங்கா, விவேகானந்தரப் படிச்சுட்டு இந்த என்.எஸ். ஏதோ பிதற்றாரு. ஆனா, அவரு பேச்சக் கேட்டு நீ ஏதாவது செஞ்சா, நாங்க யாரும் ஒன்னோட இருக்க மாட்டோம்...” என்று கூறி அந்தக் கூட்டம் அண்ணாவை வெறித்துப் பார்த்தது.
கமலத்தின் முகத்தில் ஈக்கள் மொய்த்தன. ஊதுபத்தி மணத்திலும், அங்கு தாங்க முடியாத நெடி. அது பிற்போக்குச் சிந்தனையின் மரண நெடியோ?
அண்ணா, கமலத்தின் அவலத்தை எண்ணி மீண்டும் உருகி, “ஐயா பண்டிதர்களே, விவேகானந்தர் சொன்னதெல்லாம் நம்ம சம்பிரதாயத்த முன்னேத்துறதுக்குத்தான்” என்றார் கைகூப்பி.
அதற்குள் ஒருவர், “ஓய் சுப்ரமணியன்! சாஸ்திர சம்பிரதாயம் பத்தி எங்கிட்டே பேசாதே. பிள்ளைங்களுக்குப் பாடம் நடத்து, எங்களுக்குப் போதிக்கற வேலை வெச்சிக்காதே...” என்றார் கோபத்துடன்.
ரங்கசாமி அண்ணாவைப் பிடித்தபடி, “நீங்க என்னாலே அவப்பெயர் வாங்க வேண்டாம். கமலம் அநாதைப் பொணமாவே போய்த் தொலையட்டும்...” என்று அழுதார்.
அவரது வீட்டாரும் பெட்டைகளாக அழுதனர். அங்கு எதுவும் நடக்காதது போல் மௌனமாக நின்றனர் சாஸ்திரிகள். மயான அமைதி.
உடனே அண்ணாவிற்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு வார்த்தை வந்ததோ!
“சரி ரங்கா, கமலம் அநாதைப் பொணமாவே இருக்கட்டும். ஆனா, ‘அநாத பிரேத சம்ஸ்காராத் அச்வமேத பலம் லபேத்’ - அதாவது அநாதைப் பிணத்திற்கு அந்திமகிரியை செஞ்சா அச்வமேத யாகம் செஞ்ச பலன் கெடைக்கும்னு பெரியவா சொல்லியிருக்கா...”
“ஓய் சுப்ரமண்யன், பெரியவா சொன்னதா ஏதேதோ சொல்லாதேயும்...” என்றார் ஒரு குடுமி சாஸ்திரி, கிண்டலாக.
அண்ணா கம்பீரமாக, “ஸ்வாமி, அடியேன் சொல்றது சாஸ்திரம் மட்டுமில்லே. பெரியவாளோட திவ்ய சரிதம். ஒங்களுக்குத் தெரியாததல்ல..., ரங்கா ஒனக்காகச் சொல்றேன் கேட்டுக்கோ” என்றார்.
“ஆத்துல ஒரு அநாதைப் பொணம் போனது. சக்கரவர்த்தி என்ற வைணவ பக்தர் அதப் பார்த்தாரு. பொணத்து மேலே வைணவ சின்னங்களான நாமங்கள் இருந்தன. உடனே அவரு அதுக்கு ஒரு வைணவருக்குச் செய்ய வேண்டிய அந்திமகிரியையைச் செஞ்சாரு. அப்போ, புரோகிதமும் பூஜையும் மட்டும் தெரிஞ்சவா, அவர பொல்லான்னு கூறி ஜாதிப்ரஷ்டம் செஞ்சுட்டா....”
எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தனர். அண்ணா பேசியதை கமலமும் கேட்டாளோ?
இல்லாவிட்டால் அவளது முகத்தில் எப்படி திடீரென்று ஒரு சாந்தம் வந்தது?
“ஆனால் ரங்கா, இதைப் பற்றி அந்த ஊரில் கோயில் கொண்டுள்ள பெருமாள், பூஜை செய்ற பிராமணாளிடம், சக்கரவர்த்தி செஞ்சதில் தனக்குச் சம்மதம்னு கூறி ‘ஊருக்கு அவன் பொல்லான்; ஆனால் எமக்கு அவன் நல்லான்' என்றார்.”
இப்படி அண்ணா சுப்ரமணியம் ஆத்மார்த்தமாக விளக்கியும் ரங்கசாமி அழுவதை நிறுத்தவில்லை.
ஜனங்கள் அண்ணா என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்க்கவே - வரவேற்கவே காத்திருந்தனர்.
சோகம் நல்லோரின் இதயங்களைப் பிழிந்தது. அண்ணா பொறுமையிழந்தார். பொறுப்பில் முனைந்தார்.
“சரி ரங்கா, நீயே கமலம் அநாதைப் பொணம்னு சொல்லிட்டே. ஒனக்கு ஒன்னோட கர்மகாண்டம்தான் பெரிசா தெரியுது. என்னாலே, நம்ம பொண்ணு மாதிரியான கமலத்தை அநாதையா விட முடியாது...”
பிறகு அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்க சடங்கர்களின் வாயை அடக்கும் விதத்தில் ஆற்றில் முங்கிக் குளித்தார்.
குளித்து வந்தவர் தீச்சட்டியைக் கையில் எடுத்தார்.
வாத்தியார் கூற வேண்டிய மந்திரத்தை அவரே ஆத்மார்த்தமாக ஓதிச் சிதைக்குத் தீ மூட்டினார்.
சிதைக்கு மட்டுமா, சிறியன மட்டுமே சிந்திப்பவர்களின் சிந்தனைக்கும் தீ வைத்தார் அண்ணா.
“ஓ, இவ்வளவு அருமையான அண்ணாவோட வாழ்க்கைச் சம்பவந்தான் ஒங்கள இப்படி அநாதைப் பிணங்களுக்கு அந்திமகிரியை செய்ய வைக்குதாப்பா?” எனக் கூறி, அப்பாவை மதிப்புடன் பார்த்தான் நரேன்.
“நரேன், அந்த அண்ணா மறைஞ்சு பல வருடமாயிடுத்து. அவருக்கு இப்போ 129-வது வருடம். அந்த நாள்லே நான் இன்னைக்குச் செய்யப் போற இந்தத் தொழுநோயாளி நண்பரோட ஈமக்கிரியை என்னோட நூறாவது தொண்டப்பா” என்றார் சிவா.
“கிரேட்பா” என்று கூறி, நரேன் அப்பாவைக் கட்டிக் கொண்டான்.
பிரேத அறையின் கதவு திறந்தது.
நூறாவது பிணம் புனிதப்படப் புறப்பட்டது.
இதனைக் கேட்க
சுவாமி விமூர்த்தானந்தர்
13.05.2024
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்