அவளுக்கு அருள் அப்படி!
அவளுக்கு அருள் அப்படி!
படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்
பொதுவாக, பக்தர்கள் தங்களுக்கு ஏதாவது ஓர் அபூர்வம் (Miracle) நடைபெறாதா என்று எதிர்பார்ப்பார்கள்.
இதோ இங்கு ஒரு பக்தையின் ஆழ்மனதில் இருந்த அபூர்வமான பக்தி வெளிப்பட்ட உணர்ச்சி நிரம்பிய ஒரு கதை.
நளினியின் அந்தஸ்து, ஆஸ்தி, அமைதி எல்லாம் அவரது மகள் செல்விதான். ஆனால் பாவம் நளினி!
18 வருடமாக செல்வி படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். இன்று அவளைப் புரட்டிப் படுக்க வைக்கக்கூட அந்த 48 வயது தாய் சிரமப்படுகிறாள்.
ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தையான நளினி தமது குரு போன்ற சுவாமி அவ்யானந்தரிடம் அடிக்கடி தன் குறைகளைக் கொட்டுவார். ஆனால் இன்று கொட்டியதை, தேள் கொட்டியதுபோலவே அவர் உணர்ந்தார்.
சுவாமிஜி, அவளோட கஷ்டத்த ராப்பகலாப் பாத்துப் பாத்து, ஒரே துக்கமா இருக்கு. ஒரு நாளா? ரெண்டு நாளா? அவ பொறந்ததிலிருந்து அவளுக்கும் எனக்கும் நரக வேதனைதான். இந்த வேதனையை ஒரேடியா தீர்த்துக்கத் தோணுது" என்றார் நளினி.
என்னம்மா சொல்றீங்க? கூடாதும்மா, உங்க முடிவு சரியில்ல!" என்று சுவாமிகள் பதறினார்.
வேற ஒரு வழியும் தெரியல சுவாமிஜி..., எனக்கும் ஒடம்பு முடியல்ல" என்றார். சுவாமிகள் பலவாறு ஆறுதலாகப் பேசினார்.
அவருடன் மரியாதை மிக்க மனோதத்துவ நிபுணரான டாக்டர் சரவணனும் அப்போது அங்கிருந்தார்.
சுவாமிஜி, நான் என்ன அவ்வளவு பாவம் பண்ணியவளா? கடவுள் என் மேலே இவ்வளவு பாராமுகமாக இருக்கக் கூடாது. அவரோட நாமத்தை நான் எவ்வளவு ஜபம் செய்திருப்பேன். அவரே கதின்னு கெடக்குற என்னை இப்படி ஒதுக்கினா, என்ன பகவான் அவர்...?" என்று கோபமாகப் புலம்பினார் நளினி.
டாக்டர் சரவணன் நளினி அழுவதை அமைதியாகக் கவனித்தார். நளினியின் மனம் எப்படிச் செயல்படுகிறது என்பதை அவர் படிக்க ஆரம்பித்தார்.
பல ஆண்டுகளாகத் தொடரும் விரக்தி, தீராத சோகம், மகள் குணமாகமாட்டாளா என்ற ஏக்கம், பலவித மருத்துவம் செய்தும் அவள் கட்டையாகக் கிடக்கிறாளே என்ற ஏமாற்றம், விதி மீது வெறுப்பு - இதெல்லாம் நளினியை இந்த முடிவுக்குத் தள்ளியுள்ளது.
நீண்ட நேரம் அழுதபின் நளினி மௌனமானார்.
பிறகு கோவிலுக்குச் சென்று ஸ்ரீராமகிருஷ்ணர் முன்பு கைகளால் கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்து, ‘சாரி, தெரியாம ஒன்னப் பத்தித் தப்பாப் பேசிட்டேன். ஒன்னத் தவிர வேறு யாரிடம் என் கஷ்டத்தைச் சொல்றது... மன்னிச்சுக்கோ?’ என்று ஒரு சிறுமிபோல அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.
நளினியைப் பற்றி டாக்டர் சரவணனிடம் சுவாமிகள் சிலமுறை கூறியிருந்தார்.
டாக்டர், நளினியம்மாவின் துக்கத்தைக் கொஞ்சமாவது குறைங்க. இன்னிக்கு இருக்குற மனநிலையில் அவங்க ஏதாவது செய்து கொள்வாங்களோ என எனக்குக் கவலையா இருக்கு" என்றார் சுவாமிகள்.
வேதனையுற்ற மனித உறவுகளின் மீது துறவு நெஞ்சில் இவ்வளவு கரிசனமா என வியந்தார் டாக்டர்.
அந்தம்மாவின் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலை மாறுமா டாக்டர்?" என்று சுவாமி அவ்யானந்தர் மீண்டும் கேட்டார் அக்கறையுடன்.
டாக்டர் யோசித்தபடி, அவங்க மனதை ஓரளவிற்குக் கணித்ததில் அவரது சுயநினைவு மனதில் (Conscious mind) தளர்வு வந்துள்ளது. இப்படிப்பட்டவர்களைக் கவனமாப் பாதுகாக்காவிட்டால் அவர்கள் தாங்கள் நினைத்ததை நிச்சயமாக முடித்துக் கொள்வார்கள்" என்றார்.
பிறகு அவரே சற்று நிதானித்து, ஆனா சுவாமிஜி, மேல் மனசு இப்படி இருந்தாலும், ஆழ்மனதில் (Sub-conscious mind) என்ன மாதிரியான எண்ணங்கள் உள்ளன என்பதைக் கவனிச்சுத்தான் சொல்லணும்".
அதை அறிந்துகொள்ள முடியுமா சரவணன்? பொதுவா மனசு என்பது ஒரு கடல் மாதிரி. மேல் மனசுல மீன்கள் மாதிரி பலதரப்பட்ட எண்ணங்கள் வரும் போகும். ஆனா ஆழ்மனசுல முத்துக்கள் இருக்கு. அப்படித்தானே உங்க மனோதத்துவம் சொல்லுது, டாக்டர்?" என்று சுவாமிகள் கேட்டார்.
கரெக்ட். ஆழ்மனதிற்குள் முத்துக்கள் போன்ற உயர்ந்த விஷயங்கள் இருக்குன்னு, இந்திய தத்துவங்களும் சமய இலக்கியங்களும் சொல்லுது. ஆனா, ஆழ்மனசில திமிங்கிலம் மாதிரியான விஷயங்கள்தான் அதிகம் இருக்குன்னு நாங்க ‘வெஸ்டர்ன் சைகாலஜி’யில படிக்கிறோம்... சுவாமிஜி, நளினி மேடம் ஒத்துழைத்தால் அவங்க ஆழ்மனதில் என்ன இருக்குன்னு பாக்கலாம்".
சரி, நளினியம்மாவை நான் ‘கன்வின்ஸ்’ பண்றேன். எப்படியாவது அவங்க நிம்மதி பெறணும். உணர்ச்சிவசப்பட்டு ஒரு வேகத்துல ஏதாவது செஞ்சிடக் கூடாது".
ஓரிரு தினங்களில், சுவாமிகள் கேட்டுக் கொண்டபடி, நளினி தன்னைப் பற்றிய விவரங்களை டாக்டரிடம் கூற ஆரம்பித்தார்.
மேடம், நா உங்க ஆழ்மனசில என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க விரும்புறேன்" என்றார்.
எப்படியாவது என் பாரத்தைக் குறைங்க டாக்டர். பிறகு என் பொண்ணையும் நீங்க ஒரு முறை பார்க்கணும். அவ என்னை ஒருமுறை அம்மான்னு கூப்பிட்டாகூடப் போதும்" என உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார் நளினி.
டாக்டரின் மருத்துவமனை. இதமான சூழல்.
நம்பிக்கைக்குரிய அவரது ஆசான் சுவாமி அவ்யானந்தர் முன்னிருக்க, நலம்விரும்பியான டாக்டரின் சைகோதெரபிக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டார் நளினி.
நளினி படுத்தார். அவரது நெஞ்சின் மீது ஒரு டாலர். அதில் அன்னை ஸ்ரீசாரதாதேவியின் திருவுருவம்.
டாக்டர் சரவணன் கவனமாகச் சில கட்டளைகளைக் கூறி சைகோதெரபியை ஆரம்பித்தார். மெல்ல மெல்ல நளினியின் மனதுக்குள் நுழைந்தார்.
நளினியின் மேல்மனம் குழப்பமாக இருந்தது. அதனால் அவர் ஏதேதோ பிதற்றினார், சிரித்தார், அழுதார்.
நீண்ட நேரத்திற்குப் பிறகு நளினியின் உள் மனதில் டாக்டர் நுழைந்தார். நளினி அமைதியானார். மூச்சு சீராக வந்தது. முகத்தில் புன்னகை. கண்கள் மூடியிருந்தன.
மேடம், நீங்க ஏன் தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறீங்க?" என்று டாக்டர் கேட்டார்.
நளினி சற்று எரிச்சலுடன் கூறினார்: தற்கொலை செய்து கொள்ள நான் என்ன முட்டாளா? என்னை யாருன்னு நெனச்சீங்க?"
நீங்க யாரு?"
நான் ஸ்ரீராமகிருஷ்ணரின் மகள். என் தாய் சாரதாம்மா."
உங்க பெற்றோரின் பெயரா அது?"
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் மகள் நான். ஆனா..." என்று கூறி வந்தவர் சட்டென சோர்வாக, ச்..., எப்போதும் அந்த நம்பிக்கையில் நான் இருக்க முடியவில்லையே" என்று கூறி அழுதார்.
ஏன் அப்படி உங்களால இருக்க முடியல்ல....?"
ம்..., நான் தினமும் வணங்கும் அம்பிகையான சாரதாம்மாவுக்கு ராது என்ற ஒரு பைத்தியப் பெண் வாய்த்ததுபோல, எனக்கும் ஒரு மகள் உண்டு. ராது பேசிப் பேசிச் சிரமம் கொடுப்பாள். செல்வி ஒன்றும் பேசாது."
புரியலயே?"
திடீரென்று நளினி பெரிய பிரசங்கம் செய்வது போல் பேசினார்: இந்த லோகத்தில் அம்பிகை லீலை புரிய வேண்டுமென்றால், தானே மாயையை வரித்துக் கொள்வாள். அப்படித்தான் ராது என்ற பெண்ணை நிமித்தமா வைத்து சாரதம்மா லீலை புரிஞ்சாங்க. ராது மாயை வடிவானவள். சாட்சாத் தேவியான சாரதாம்மாவே தன் நிஜ ஸ்வரூபத்தை மறந்து நர லீலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நம்மைப் போலவே சிரமப்பட்டாங்க. அவங்களுக்கே இப்படின்னா நான் எம்மாத்திரம்?"
டாக்டர் விழித்தார். சற்றுத் தள்ளி நின்ற சுவாமிகள் நளினியைப் பெருமையுடன் பார்த்தார்.
சைகோதெரபிக்கு உட்பட்ட ஒருவர் இவ்வளவு தெளிவாகப் பேசுவதைப் பார்த்து டாக்டர் சரவணன் வியந்து மேலும் கேள்விகளைக் கேட்டார்.
செல்விக்காக நீங்க ஏன் இவ்வளவு சிரமப்படணும்?"
அவளுக்காக நான் சிரமப்படாமல் வேறு யார் சிரமப்படுவாங்க?" என்றார் நளினி கோபத்துடன்.
உங்கப் பொண்ணை இவ்வளவு சிரத்தையோட கவனிக்கிறதுக்கு எது தூண்டுகோலா இருக்கு மேடம்?"
நளினி பதில் கூறவில்லை. தனக்குள் ஏதோ கஷ்டத்தை அனுபவித்தவர்போல், பெருமூச்சுவிட்டார். மனக்கண் முன் ஏதோ ஒரு சோகக் காட்சியைப் பார்த்தாரோ!
பின் பெருமுச்சு விட்டு, ம், என் வீட்டுக்காரர் சாவதற்கு முன்னாடி செல்வியைக் காட்டி, ‘இதுதான் நீ பூஜிக்க வேண்டிய தேவி. இவளுக்கான பூஜையைக் கடைசி வரைக்கும் செய்யணும்னு எங்கிட்ட சத்தியம் வாங்கிட்டார். செல்விக்கு நான் செய்றது அம்பாள் உபாசனை...".
சிறிது நேரம் அமைதி.
அதுவரை கோபமும், முணுமுணுப்புமாகப் பேசிவந்த நளினி சட்டென்று கம்பீரமாக சம்ஸ்கிருதத்தில் ஒரு சுலோகத்தைக் கூறினார்:
‘குர்மஸ்தாரக சர்வணம் த்ரிபுவனம் உத்பாட யாமோ பலாத்,
கிம் போ ந விஜாநாஸ்ய அஸ்மாந் ராமக்ருஷ்ணதாஸா வயம்’.
நாங்கள் யார் தெரியுமா? நட்சத்திரங்களைக்கூட பொடிப் பொடியாக்கும், பிரபஞ்சத்தையே புரட்டிப் போடும் ஆற்றல் மிக்க ராமகிருஷ்ணரின் சேவகர்கள்" என்று சுவாமிகள் அதன் பொருளை எழுதிக் காட்டினார்.
அதைப் படித்ததும் டாக்டர் நளினியை அதிசயத்துடன் பார்த்தார். நளினி மெல்ல உடலை அசைத்தார். அவரது நெஞ்சில் இருந்த டாலர் புரண்டது. அதில் இப்போது குருதேவரின் பிரசன்னமான முகம் தெரிந்தது.
அன்று சிகிச்சை முடிந்தது.
ஆனால் வீட்டிற்குச் சென்ற நளினி தனிமையில் இருக்கும்போது தற்கொலை எண்ணம் அவரைத் துரத்தியது. அதனாலேயே அவர் சுவாமிகளையும் டாக்டரையும் காண அடுத்த நாளே வந்தார்.
என்ன டாக்டர், என் மனசில ஏதாவது நல்லது இருக்கா?" என்று நளினி கேட்டார் விரக்தியாக.
டாக்டர் சரவணன் அப்போது அவரிடம் ஒன்றும் கூறாமல் ஆறுதலாக மட்டும் பேசினார்.
எவ்வளவோ பேரோட ஆறுதலைக் கேட்டுட்டேன் டாக்டர்! என்னைக் குடையுற ஒரு கேள்வி இதுதான்: இந்த மாதிரி ஒரு பயனற்ற குழந்தையைப் பெத்தது என்னோட கர்மாவா? அல்லது இப்படி ஜடமா, கைகால் உள்ள மூட்டையாக் கிடக்கிறது அவளோட விதியா?" என்று கேட்டார் நளினி.
சுவாமிகள் இதற்கெல்லாம் பலமுறை பதில் கூறியிருக்கிறார். ஆனால் நளினி சமாதானமாகவில்லை.
நளினி வீட்டிற்குச் சென்றபின் டாக்டர், இவங்க கேஸ் வித்தியாசமானது சுவாமிஜி. நான் இப்படிப்பட்ட ஒருத்தர பாக்குறது இதுதான் ஃபர்ஸ்ட் டைம். தொடர்ச்சியான சிரமங்களால அவங்க மனமொடிஞ்சி போயிருக்காங்க. ஆனாலும் அவங்களோட ஆழ்மனசில என்ன ஒரு தைரியம், துணிவு! சுவாமிஜி, நிச்சயம் அந்தம்மா தற்கொலை செஞ்சிக்கமாட்டாங்க. அயம் ஷ்யூர்" என்றார்.
அப்படின்னா, நளினியம்மா, தான் ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தைன்னு நம்பும்போது துணிவு வருது; அதை மறக்கும்போது சஞ்சலம் வருதுன்னு சொல்றீங்களா டாக்டர்?" என்று கேட்டார் சுவாமி.
எக்ஸாட்லி, அவங்க உள்மனசில இருக்குற அந்த நம்பிக்கை சுயநினைவுக்கு வந்ததுன்னா, ஆஹா, அது எவ்வளவு நல்லா இருக்கும்...".
அது நடக்குமா டாக்டர்?"
அதுக்கு எங்களோட மனோதத்துவ வழிமுறை முயற்சியுடன் உங்களோட பிரார்த்தனையாலும் அவங்களோட குறைகளை நீக்க முடியும்னு நம்புறேன்"
குருதேவர் நிச்சயமாக நளினியம்மாவிற்குச் சரியான வழி காட்டணும்னு நானும் பிரார்த்திக்கிறேன் டாக்டர்".
சில தினங்கள் சென்றன. அன்று அதிகாலையில் மடத்திற்குள் ஓர் ஆட்டோ வேகமாக நுழைந்தது. அதிலிருந்து நளினி வெளிவந்தார். முகத்தில் ஒரு புதுப்பொலிவு. சுவாமிகள் கோவிலிலிருந்து வந்து கொண்டிருந்தார்.
நளினி மலர்ந்த முகத்துடன், சுவாமிஜி, ஸ்ரீராமகிருஷ்ணா ஈஸ் ரியலி கிரேட்" என்றார்.
என்னம்மா நடந்தது?"
ஆஹா, குருமகராஜை நேத்து முதன்முதலா கனவுல பார்த்தேன்...." என்று கூறி கண் மூடி அந்தக் கனவை அப்படியே காட்சியாக விவரித்தார்.
ஆனந்தமயமான சொர்க்கலோகம். அதில் விசாலமான ஒரு சபை. தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் அங்கே தியானத்தில் அமர்ந்திருந்தனர்.
நடுநாயகமாக பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.
ஒரு புறத்தில் மக்கள் பலவித எதிர்பார்ப்புகளுடன் நிற்கிறார்கள். மறு புறம் நிறைய கைக்குழந்தைகள். அவற்றுள் அழகான, குண்டான, ஆரோக்கியமான
குழந்தைகள் பலர். கைகால்கள் விளங்காத, வாய் பேசாத குழந்தைகளும் அங்கே இருந்தனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர் மெல்ல தமது வலது கையை உயர்த்தினார். அவரது அருகிலிருந்த ஒரு தேவபுருஷன் உடனே, மெய்யன்பர்களே, இதோ இந்தக் குழந்தைகள் யாவரும் அவரவரின் வினைகளுக்கேற்ப படைக்கப்பட்டவர்கள். இவர்களை நீங்கள் விரும்பியபடி ஏற்றுக் கொள்ளுங்கள். இவர்களை நன்கு வளர்த்து, அதன் மூலம் நம் பகவானுக்கு யார் பெருமை சேர்க்கிறார்களோ, அவர்களே அவரது உன்னத அருளைப் பெறுவார்கள்" என்றார்.
உடனே எல்லோரும் தங்களுக்குப் பிடித்த, நல்ல நல்ல குழந்தைகளைத் தூக்கிச் சென்றனர்.
ஊனமுற்றவர்களை ஒருவரும் ஏற்கவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணர் அதைப் பார்த்ததும் சற்று முகம் வாடினார்.
உடனே தேவபுருஷன், “பக்தர்களே, பிரசாதமாக எது கிடைத்தாலும் ஏற்க வேண்டிய நீங்கள், ஊனமுடையவர்களை ஒதுக்கலாமா? நல்ல குழந்தைகளை மட்டும் தேர்ந்தெடுப்பதா?” என்று கூறி அவர்களைத் தடுத்தார். அவரையே தள்ளிவிட்டு மக்கள் ஓடிக் கொண்டிருந்தனர்.
ஸ்ரீராமகிருஷ்ணர் சுற்றும்முற்றும் நோக்கினார். அவரது எண்ணத்தைப் புரிந்து கொண்ட அந்த தேவபுருஷன், அன்பர்களே, குறைபாடுள்ள குழந்தைகளின் பொறுப்புகளை ஏற்கும் குறைவில்லா நெஞ்சினர் யாராவது உள்ளனரா?" என்று கேட்டார்.
அப்போது கம்பீரமாக ஓர் இளம்பெண், தந்தையே, தங்கள் மகள் நான் இருக்கிறேன்" என்றாள்.
ஆ, அது நளினியேதான். அவர் ஓடிவந்து ஒரு பெண் குழந்தையை வாரியணைத்துக் கொண்டார். அதை ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடிகளில் வைத்தார்.
ஸ்ரீராமகிருஷ்ணர் மகிழ்ச்சியுடன், நல்லது மகளே, குறையுடைய இந்தக் குழந்தையைப் பொறுப்புள்ள உன்னிடம் விடுவதில் மகிழ்ச்சியம்மா. இப்படிப்பட்டவர்கள் சிறப்புக் குழந்தைகள். எனது குழந்தைகளான இவர்களை ஏற்று வளர்க்கும் பெற்றோர்கள் சாலச் சிறந்தவர்கள்" என்றார்.
பிறகு, அவர் தமது புனிதத் திருக்கரங்களை நளினியின் சிரசில் வைத்து ஆசீர்வதித்தார்.
கனவு நிறைவுற்றது.
குருதேவரின் அந்தப் புனித ஸ்பரிசம் இப்போதும் என் நினைவில் இருக்கு சுவாமிஜி..." என்று கூறி நெஞ்சில் கை வைத்துக் கண் மூடினார் நளினி.
சுவாமி அவ்யானந்தருக்கு மெய்சிலிர்த்தது.
கோவிலுக்குச் சென்று ஸ்ரீராமகிருஷ்ணரை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார்.
ஆழ் மனதிலிருந்த அருள் மேலே கிளம்பியுள்ளது என்பதைக் கூற டாக்டர் சரவணனுக்கு போன் செய்யப் புறப்பட்டார்.
இதனைக் கேட்க
சுவாமி விமூர்த்தானந்தர்
25.04.2024
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்