உணர்வூட்டும் கதைகள் - 30

01.04.24 08:01 PM - By thanjavur

உணர்வூட்டும் கதைகள் - 30

சிறுமியுடன் ஸ்ரீராமகிருஷ்ணர்

படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்

ஸ்ரீகிருஷ்ணர் ராதைக்கு ஜடை பின்னி விட்டார் என்று படித்திருக்கிறோம். ஆனால் வயது வித்தியாசம் பாராமல் எல்லாப் பெண்களையும் தேவியாகவே தரிசித்த வர் ஸ்ரீராமகிருஷ்ணர்.


அவர் ஒரு சிறுமியிடம் எவ்வாறு பேசினார், அவளை எவ்வாறு குதூகலிக்க வைத்தார் என்ற நிகழ்ச்சியான சம்பவத்தை இங்கு நீங்கள் கேட்கப் போகிறீர்கள். ஓர் அவதாரப் புருஷரே ஒரு சிறுமிக்கு ஜடை பின்னி விட்டு அவள் நாணத்தில் நகைக்கப் பாட்டு பாடினார் என்றால் நம்ப முடிகிறதா?

 

1884, ஜூலை 3. வியாழன்.

ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு பக்தரின் வீட்டிற்குச் சென்றிருந்தார். பரவசத்தில் அவர் தோய்ந்திருந்ததால், பக்தர்களும் பரவசமாகி இருந்தனர்.


தெய்விகத் திளைப்பில் தெய்வமே அங்கே ஆடிப் பாடி மகிழ்ந்தது. அதுதானே ஸ்ரீராமகிருஷ்ணரின் சகஜமான நிலை!


தெய்வம் தெய்விகத்திலே ஒன்றிவிட்டால்..., லீலை எப்படி நடக்கும்?


ஸ்ரீராமகிருஷ்ணரைத் தரிசிக்க அங்கு அப்போது ஒரு வங்காளச் சிறுமி வந்தாள். விச்வம்விஹாரின் மகளான அவள் ஸ்ரீராமகிருஷ்ணரின் மகிமையை உணர்ந்தவளாக இருந்தாள்.


இதோ, அவளது ஆடை அவளின் சின்னக் கால்களைத் தடுத்தாலும், தாய் தந்தையர் செய்வதைக் கண்டு தானும் ஸ்ரீராமகிருஷ்ணரை வீழ்ந்து வணங்கினாள்.


குருதேவரைச் சுற்றிப் பரவசப்பட்ட பக்தர்கள் யாரும் இந்தத் தேவியைத் தரிசிக்கவில்லை போலும்!

அவள் நமஸ்காரம் செய்து மெல்ல எழுந்தாள். கைகளைக் கீழே வைத்ததால் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிக்கொண்டாள்.


ஸ்ரீராமகிருஷ்ணரை அண்ணாந்து பார்த்தாள். பரவசத்தில் இருந்த பகவான் இவளைப் பார்க்கவில்லை.

‘ஐயோ, இவர் என்னைப் பார்க்கவில்லையே’ என்று பிஞ்சு மனம் அஞ்சுகிறது. ‘பகவானே, என்னைப் பாருங்களேன்’ என்று கெஞ்சுகிறது.


ஸ்ரீராமகிருஷ்ணரின் முழங்கால் உயரத்தில் அவள் தலைமுடி காற்றில் ஆடியது. ஸ்ரீராமகிருஷ்ணர், முற்றிலும் புற உணர்வற்றவராக இருக்கிறார்.


மீண்டும் பிஞ்சு நெஞ்சு கெஞ்சுகிறது:

‘பகவானே, என்னப் பாக்க மாட்டீங்களா?’


சிறிது நேரத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர் வீட்டின் உள்ளே போனார். அவர் மனம் சிறிது வெளி வந்து புறவுணர்வு பெற்றார். அதனால் அன்பாகப் பேசி இறையன்பைப் பக்தர்களிடம் ஏற்றினார்.


அங்கே ஓடி வந்தாள் அந்தச் சிறுமி. அவளுடன் அவள் வயதொத்த சிறுமிகளும் வந்து ஸ்ரீராமகிருஷ்ணரைச் சுற்றி நின்றார்கள்.


குழந்தைகள் நடுவே குழந்தையானார் குருதேவர்.


‘இப்போது நன்றாகப் பேசுபவர் சற்று முன்பு என்னைப் பார்க்கவில்லையே...’ என நினைத்துக் கீழ் உதட்டைப் பிதுக்கியபடி அவரை நேராகப் பார்த்தாள் அவள்.


அவள் ஸ்ரீராமகிருஷ்ணரிடம், நான் உங்கள நமஸ்காரம் செஞ்சேன். நீங்க என்ன பாக்கக்கூட இல்லியே?" என்று தன் குறையைக் கொட்டினாள்.


தேள் கொட்டியது போல் இருந்தது குருதேவருக்கு!


ஒரு குழந்தையை, அதுவும் சிறுமியின் மனதைப் புண்படுத்திவிட்டோமே என்று வருந்தினார் அவர்.

சிறுமி என்றால் அவருக்கு தேவி அல்லவா?


உடனே அவர் புன்னகைத்து, “அம்மா, நீ என்னை நமஸ்காரம் செய்தாயா? நான் உண்மையிலே ஒன்ன கவனிக்கல" என்று அவளது தலைமேல் கை வைத்து ஆசீர்வதித்தார். உடனே குறையோடிருந்த குழந்தை சமர்த்துக் குட்டியானது.


“அப்படின்னா நா மறுபடியும் உங்கள நமஸ்காரம் செய்றேன்" என்று குனிந்தது.


அந்தப் பிஞ்சுக் கரங்களால் ஒரு சமயத்தில் குருதேவரின் ஒரு பாதத்தைத்தான் தொட முடிந்தது.

அதனால் மண்டியிட்டிருந்த அவள் சற்று நகர்ந்து, அந்தக் காலுக்கும் நமஸ்காரம் செய்றேன்" என்றாள்.

ஸ்ரீராமகிருஷ்ணர் சத்தமாகச் சிரித்தார்.


நின்றிருந்தவர் அமர்ந்தார்.

அந்த இடத்திலா? அவள் இதயத்திலா?

அதோடு, ஸ்ரீராமகிருஷ்ணர் செய்த அடுத்த ஒரு செயல் பக்தர்களிடம் பக்திக் கண்ணீரை வரவழைத்தது; இதயத்தில் நம்பிக்கையையும்தான்!


தம் முழங்கால் அளவு உயரமுள்ள அந்தச் சிறுமியின் முன்பு மண்டியிட்டார் ஸ்ரீராமகிருஷ்ணர்; தலை கீழே படும்படி, அவள் முன் நமஸ்காரம் செய்தார்!


‘என்ன செய்கிறார் இவர்?’ என்று சிறுமி புரியாமல் அவரையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.


அப்படியும் ஸ்ரீராமகிருஷ்ணர் திருப்தி அடைந்தாரா? இல்லையே! இன்னும் என்ன செய்தால், இவள் சந்தோஷப்படுவாள் என்று சிந்தித்தார்.


உடனே அவர் அவளிடம், அம்மா, நீ ஒரு பாட்டு பாடேன்" என்றார் செல்லமாக.

தன் முன்னம்பல்லை வாயால் மூடிக் கொண்டு, “சத்தியமா எனக்குப் பாட்டு வராது" என்றாள் சிறுமி.

“இல்லே, நீ நல்லா பாடுவே, பாடு"


“ஐயோ, எனக்குப் பாட்டு வராதுன்னா, நீங்க திரும்பத் திரும்பக் கேட்டிங்கன்னா எப்டி?" என்று தன் குட்டி விரல்களை மடக்கி அவள் நியாயம் கேட்டாள்.


குருதேவர் சந்தோஷத்தின் உச்சியில் எல்லோரையும் அன்புடன் நோக்கினார். பின்னர் தமது மதுரமான குரலில் குழந்தைகளுக்கு ஏற்ற பாடல்களைப் பாடினார்:


‘வா மகளே, உனக்கு நான் பின்னல் பின்னி விடுகிறேன். இல்லாவிட்டால், உன் கணவன் உன்னைப் பார்க்கும்போது திட்டுவான் அல்லவா?’


பாட்டைக் கேட்டதும் குழந்தைகள் எல்லோரும் கைகொட்டி ஆடிப் பாடிச் சிரித்தனர். சில குழந்தைகள் கணவன் என்ற சொல்லைக் கேட்டதும் வெட்கினார்கள்.


பக்தர்களும் பகவான் இந்த அளவிற்கு இறங்கி வந்து நம்மைக் களிப்பூட்ட முடியுமா என்று சிரித்தார்கள்; சிந்தித்தார்கள்.


உடனே குருதேவர், சிறுவர்கள் போல் செயல்படும் பரமஹம்சர்கள் பற்றிப் பேசத் தொடங்கினார்.

சற்று முன்பு சிறுமிக்குச் சடை பின்னட்டுமா என்று கேட்டவர்தான், இப்போது பக்தர்களின் மன முடிச்சுகளை அவிழ்க்கத் தொடங்கிவிட்டார்.


அப்புறம் என்ன, அவர் பேசியதெல்லாம் அமுதமொழிகள்தான்!

இதனைக் கேட்க

சுவாமி விமூர்த்தானந்தர்

01.04.2024

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur