ஸ்ரீராமரின்
வைராக்கியஸ்ரீ - ராஜ்யஸ்ரீ - பிரம்மஸ்ரீ
ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு ஸ்ரீராமரின் வாழ்க்கையில் நடந்த ஓர் அரிய சம்பவத்தை இங்கு எழுத்தோவியமாகப் படைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி சிலர் மட்டுமே அறிந்துள்ள அற்புதமானது.
சக்கரவர்த்தி ஆக வேண்டிய ராமன் சங்கட ராமன் ஆனான். ஆள வேண்டியவன் அழுதான்.
கதைகள் கூறி அவனைச் சரியான வழியில் செலுத்துகிறார் குரு வசிஷ்டர். அப்போது பிறந்ததுதான் யோக வாசிஷ்டம் என்ற ஆன்மிகப் பொக்கிஷம்.
பால ராமனுக்கு 15 வயதுதான். ஆனால் முழு வாலிபன் போன்று உடலோடு உள்ளமும் வளர்ந்து விவேகம் அவரிடம் ஜொலிக்கிறது.
ஆனாலும் சில தினங்களாக சூரிய வம்ச ராமரின் தேஜஸை மறைத்துள்ள மேகம் எது? குருகுலவாசம் முடிந்து, யாத்திரை சென்று வந்த பின் என்னவாயிற்று ராமருக்கு?
குரு கிருஹவாசம் வனத்தில்; அடுத்து சில நாட்கள் ராஜ கிருஹவாசம்; அதன் பின் எது வந்தாலும் அதை அப்படியே ஏற்று வாழப் பழக வைக்கும் யாத்திரை காலம்.
யாத்திரையில் என்ன நடந்தது?
எதையெல்லாம் கண்ட பின் எல்லாம் இழந்தவர் போல் ராமன் ஆனார்? சரியாக உண்பதில்லை; உறங்குவதில்லை; யாரிடமும் எளிதாக, முன்னதாகவே பேசும் பூர்வபாஷியான ராமர் எதையோ வெறித்துப் பார்ப்பது ஏன்?
சஞ்சலம் இருக்குமிடம் சாதுசங்கம் தேடி வரும். வந்தது, விசுவாமித்திரர் வடிவில்.
புயலென சபையில் நுழைந்தார் முனிவர். அர்க்யம், பாத்யம் சமர்ப்பித்து ஆசி நாடினார் தசரதன்.
“மன்னா, இதற்காக நான் வரவில்லை. ஒரு யாகமியற்ற இச்சை. கச்சை கட்டிக்கொண்டு அட்டூழியம் செய்கிறார்கள் அரக்கர்கள். யாகம் புரிய வேண்டியிருப்ப தால் நான் சபிக்க இயலாமல் முடங்கி இருக்கிறேன்.''
“அவ்வளவுதானே பிரம்மரிஷியே! நானே சதுரங்கச் சேனைகளுடன் வந்து அரக்கர்களை அழித்து யாகம் நடத்த...'' என்பதற்குள் விசுவாமித்திரர்,
“ராமனை அனுப்பு, போதும்'' என்றார் கம்பீரமாக.
“ராமன் பாலன், அவனை அனுப்ப முடியாது. மன்னியுங்கள்'' என்று தசரதர் கை கூப்பினார் கலங்கி.
விசுவாமித்திரர் கண்களைச் சுருக்கினார். குலகுரு வசிஷ்டர் இடையில் வந்தார், தசரதர் தப்பினார்.
“மன்னா, ராமன் உனக்குப் பாலகன்; உலகிற்கோ அவன் காவலன்; அனுப்பு அவனை அடவிக்கு; அரக்கர்களை அவன் அனுப்புவான் அடுத்த உலகிற்கு'' என்றார்.
குருவாக்கிய பரிபாலரான தசரதர், “யாரங்கே, என் செல்வத்தை அழைத்து வாருங்கள்'' என்றார் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே.
பணியாளர்கள் ராமனின் விரக்தி மனநிலையைச் சொன்னார்கள், மன்னரிடம். மன்னன் மயங்கினான். “ராமனைச் சீக்கிரம் கூப்பிடு" என்றார் மீண்டும்.
அவரது தவிப்பைக் கண்ட வசிஷ்டர், “கவலை வேண்டாம் அரசே. வைராக்கியஸ்ரீ ராமனிடம் வந்து உதித்துள்ளாள். ராஜ்யஸ்ரீ அவனிடம் வரும் முன்பு இவள் வந்திருப்பது மிக நல்லது. அதனால் அவன் விரைவில் பிரம்மஸ்ரீ ஆவான்'' என்றார்.
தசரதன் தந்தையாக மட்டும் தவித்தார். ராமர் அரசவைக்கு வந்தார், உயிரற்ற உடல்போல.
“ராமா, உன் எலும்பைத் துளைக்கும் துக்கத்தை என்னிடம் இயம்பு. வைராக்கியஸ்ரீ உனக்குத் தந்துள்ள அகச் செல்வத்தை, நிறைந்த இந்தச் சபை அறிய செப்பு'' என்றார் விசுவாமித்திரர் மகிழ்வுடன்.
“முனிசிரேஷ்டரே, நான் எதைச் சொல்வேன்? இவ்வுலகில் இம்மியும் சுகமில்லை. எல்லாம் வியர்த்தம், கானல் நீர், உள்ளீடற்றது, மாயை, பொய்யான உலகை மாறுபட்ட காட்சிகளாகக் காட்டி மயக்குவது என் மனமே என்பதைக் கண்டு கொண்டேன்'' ராமர் கூறக் கூற விசுவாமித்திரர் கூர்ந்து கவனித்தார்.
வசிஷ்டரோ அகமுகமானார்.
சூழ்நிலை பற்றி உணர்வில்லாத ராமர், “குருவரரே, எனக்கு உள்ளும் புறமும் ஒரே வெப்பமாக உள்ளது. கண்முன் தோன்றுவதெல்லாம் கானல்நீராகவே உள்ளன.
“இந்த வாழ்வு அநித்தியம்; நீர்க்குமிழி போல. கவலைகள், சோகங்கள், தொல்லைகள் மிக்க இந்த உலகாயத வாழ்வை அஞ்ஞான மூட மனிதன் விடாது பற்றிக் கொண்டிருக்கிறான். நானும் அப்படி இருக்க வேண்டுமா, சொல்லுங்கள் குருவே...?
“செல்வம் சுகத்தைத் தருவதில்லை. அது கவலைக்கு மூல ஊற்று. அது அநித்தியமானது.
“அழிவுக்குக் காரணமான அகங்காரத்திற்கு நான் அதிகம் பயப்படுகிறேன். இது மக்களை ஏமாற்றுகிறது. அகங்காரம் ஒன்றுமில்லாதது; எனினும் உலகாயத மக்களுக்கு இது மிக அத்தியாவசியமாய் அமைகிறது. இது ‘எனது' என்ற மமகாரத்தோடு தொடர்பு கொண்டது. அஞ்ஞானத்திலே இது பிறந்தது. இது பொய்யான அகந்தையிலிருந்து வெளிப்படுகிறது. வீண்பெருமை இதை வளர்க்கிறது. இது மனிதனுக்கு வலுவான சத்துரு.”
ராமரின் குரல் உடைந்து உணர்ச்சிகரமாகப் பேசப் பேசச் சபையிலிருந்த லௌகீகர்கள் கலங்கினார்கள்.
முனிவர்களோ மகிழ்ந்தார்கள்!
ராமர் மேலும் வலுத்தார். “கர்வம், காமம், கோபம், பிரமை, பேராசை, பொறாமை, ஆசை, பகை ஆகியவை அகங்காரத்தின் ஏவலாட்கள். அகங்காரம் நம் நல்லியல்புகளை அழித்து, நிம்மதியைப் போக்குகிறது.
“ஆபத்தான மனிதனின் மனமோ அகங்காரத்தின் மூலமே கிளம்புகிறது. குறும்பான மனம் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தெரு நாய்போல் அலைகிறது; ஒரு போதும் அதற்கு ஓய்வே கிடையாது.''
சபையில் வெப்பக் காற்று வீசியது.
ராமர் கண்களைத் துடைத்தபடி தொடர்ந்தார்:
“நம் உடல் பெரிய சுமை. இது கொழுப்பு, மாமிசம், எலும்புகள், நரம்புகள், தசைகள், ரத்தம் ஆகியவற்றால் ஆக்கப்பட்டது. இது நோய்களுக்கு இருப்பிடம்; அசுத்தங்கள் நிறைந்தது. அழுகக்கூடியது. அகங்காரம் எனும் யஜமானன் உடலிலே பேராசை எனும் யஜமானியோடு வசிக்கிறான். அவனுக்குக் குறும்பான இந்திரியங்கள் எனும் பசுக்கள் பத்து உண்டு. மனமோ இவனது ஏவலாள்.
“அவன் இதயத்தை ஆசைகள் எரிக்கின்றன. ஆனால் தன் ஆசைகளை நிறைவேற்ற சக்தியில்லாதிருக்கிறான். மரணம் மனிதனின் நரைத்த தலையை முதுமைப் பருவம் எனும் உப்பிட்டுப் பக்குவப்படுத்தப்பட்ட பூசணிக்காய் என்று எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியோடு உண்ணுகிறது.
“காலமானது, வாழ்க்கை எனும் நூலை அறுத்துத் தள்ளும் ஓர் எலி. அது எதையும் விழுங்கிவிடும்.
“மரியாதைக்குரிய மகரிஷியே! துக்கம், அச்சம், உலகாயதத் தொல்லைகள் இல்லாமல் பேருண்மை ஒளியைப் பெறும் வழியை அடியேனுக்குக் கற்றுத் தாருங்கள். ஹிம்சைகள், பலவீனங்கள், ஐயம், பிரமை இவை இல்லாத நித்தியபதம் எதுவென்று எனக்குக் காட்டுங்கள்.''
இவ்வாறு நீண்ட பிரசங்கம் செய்த ராமர் முகம் சிவக்க, கண்கள் கலங்கக் கைகூப்பி வேண்டினார்.
‘ஆள வேண்டியவனே இப்படி அழுகிறானே' என மக்கள் திகைத்தனர். ‘எனக்கு இந்த முதிய வயதிலும் வராத விரக்தி, இவனுக்கு இதற்குள் எப்படி முந்திக் கொண்டு வந்தது?' என்று தசரதர் எண்ணினார்.
‘நாம் ராமனுக்கு அறிவுமிக்க ஆறுதல்களை வழங்குவது வியர்த்தம். அவனுக்கு குரு கடாக்ஷம்தான் தேவை’ என பண்டிதர்கள் மௌனமாகி நின்றனர்.
தனது மனஉளைச்சலைக் கண்டவர்களிடம் காட்டிக் குழம்பாமல் சரியானவரிடம் சென்று ராமர் உரைத்ததை எண்ணி வசிஷ்டர் பெருமிதம் கொண்டார்.
விசுவாமித்திரர் ராமரை அருளுடன் நோக்கினார்.
‘இந்த ராஜபோக பூமியில் இப்படி ஒரு சீலமிக்கவனா?' என்று பூரித்தார்.
ராமருக்கு அவர் சுகதேவரின் கதையைக் கூறினார்:
பிறகு வசிஷ்டரிடம், "முனிபுங்கவரே, தங்களது தவமும் சாஸ்திர ஞானமும் திரண்டு நிற்கிறது ராமனின் வடிவில். வைராக்கியமும் விசாரமும் பொங்கித் ததும்பும் அவனுக்கேற்ற மார்க்கத்தைக் காட்டியருளுங்கள்'' என வேண்டினார் விசுவாமித்திரர்.
“பிரம்மரிஷியே, ராமனின் தற்போதைய நிலை உலகத்தவருக்கு வெற்றுப் புலம்பல் போல் தோன்றும். ஆன்மிகச் சாதகர்களுக்கோ இது ஞானப் புலம்பல் என்பது புரியும். ஆதலால் உங்கள் கட்டளையை ஏற்கிறேன்'' என்றார் வசிஷ்டர்.
வசிஷ்டரின் அடக்கத்தை வியந்து, “ஞானசிரேஷ்டரே, நாம் இருவரும் சமர் புரிந்து முடித்தபோது, பிரம்மதேவர் நமக்கருளிய கதைகளையும், உபதேசங்களையும் தாங்கள் ராமனுக்கு உரைத்தால் அவனது சித்தம் தெளியும்'' என்று கூறி, விசுவாமித்திரர் கரம் கூப்பினார்.
ராமரும் உடனே வசிஷ்டரை வணங்கி நின்றார்.
“குழந்தாய் ராமா, உன் மனநிலை புரிகிறது. நீ உரைத்த நீண்ட உரையில் எதுவும் உண்மைக்கு மாறானதல்ல; அவை யாவும் சத்தியமே. ஆனால் முழு சத்தியம் அல்ல. மாயாதேவி உனக்கு எதையும் மறைக்காமல் தன் மாளிகையைத் திறந்து காட்டிவிட்டாள். ஆனால் அவை பாதி உண்மை. இப்போது ஞானமாதா உனக்குக் காட்ட வேண்டியதைப் பற்றி விசாரம் செய்யலாம் வா...''
விசுவாமித்திரரும் தரையில் ராமரோடு அமர்ந்தார். மன்னரும் அமர்ந்தார். மக்களும் அமர்ந்தனர்.
அரச சபை ஆசிரமச் சூழல் பெற்றது.
காலம் கழிவதைக் கண்டவர் அங்கு யாருமிலர்.
சிரேஷ்ட ஞானவானான வசிஷ்டர் கதை கதையாகக் கூறி ஞானத்தை நல்க ஆரம்பித்தார்.
விவேகம் பற்றிச் சொன்னது ஒரு கதை.
விழிப்புணர்வை வெளிப்படுத்தியது அடுத்தது.
இஷ்டநிஷ்டையை இயம்பியது ஒன்று.
யோகத்தை வலியுறுத்தியது மற்றொன்று.
காமத்தின் கொடூரத்தையும் மோகத்தின் விளைவுகளையும் சொல்லிச் சொல்லி ராமருக்கு மனசாந்தியை வழங்கிவிட்டார் வசிஷ்டர். அவரது சீடர்கள் அவை அனைத்தையும் தொகுத்து வந்தார்கள் - யோக வாசிஷ்டம் என்ற பெயரிட்டு! (ஆதாரம்: யோக வாசிஷ்டம்)
அந்தக் கதைகளின் பிழிந்து வைத்த சாரமாக, ராமரின் தெளிந்த முகத்தைப் பார்த்தபடி, “ராமா, அந்த மாங்கனியை எடு” என்றார் வசிஷ்டர்.
ராமர் பழத்தைத் தந்து, “குருவே, இது சற்று அழுகி விட்டதே. இனி பயன்படாது” என்றார்.
“ஆம் சரிதான். மாமன்னரே, நீங்கள் மற்றொரு கனியை எடுங்கள்” என்றார் தசரதரைப் பார்த்து.
நன்கு கனிந்த ஒரு கனியை எடுத்து, “ஆசார்யரே, இதோ சுவையான கனி” என்றார். வசிஷ்டர் நகைத்தார். விசுவாமித்திரர் அதை உணர்ந்தார்.
“ராமா! மன்னா! நீங்கள் இருவரும் உரைத்தவை முழு உண்மையல்ல. இந்த மாங்கனி போன்றதுதான் இந்த ஜகத். இதனை அழுகிய கனியாக, பயன்படாததாகப் பார்ப்பது பிழை. அந்தப் பார்வை துன்பநோக்கு கொண்டது.''
தசரதர் முகம் மலர்ந்தார். ராமரின் மனநிலையை குருதேவர் சரி செய்திடுவார் என்று.
ஆனால் வசிஷ்டரோ, “ஒரு மாமுனிவர் போல் எதையும் புரிந்து கொள்ளும் ராமா! சிலர், ஒரு சில மாங்கனிகளைப் பார்த்து, எல்லாக் கனிகளும் எப்போதும் நல்லதாகவே இருக்கும் என நினைத்து உண்டபடியே இருக்கிறார்கள். இன்பம் மட்டுமே இவ்வுலக இயற்கை என்று எண்ணித் திரிவதும் தவறு” என்றார்.
“அப்படியானால், வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் சேர்ந்ததா குருவே?” ராமர் கேட்டார்.
“ஆம் ராமா, வாழ்க்கை, இன்பமும் துன்பமும் சேர்ந்தது மட்டுமல்ல; இந்த இரண்டையும் கடந்ததுதான் மெய்யான வாழ்க்கை. அழுகிய கனி உண்ணப் பயனற்றது. ஆனால் அதற்கே வேறு ஒரு முக்கிய பயன்பாடும் உள்ளதே. ஜகத்தும் அதுபோல்தான்.
“ஜகம் துன்பமயமானதுதான், அழுகல் கனியைப் போல. ஆனால், அக்கனியின் தோலையும், சதைப் பகுதியையும் நீக்கிவிட்டு, அடுத்த மாமரத்திற்கான விதையை - பீஜத்தைப் பார்ப்பவன், ஜகத்தைக் கண்டு அஞ்சமாட்டான். அவனே அசத்தில் சத் திருஷ்டி கொண்டவன்''
ராமர் கூர்ந்து கேட்டார். வசிஷ்டர் தொடர்ந்தார்.
“வேதாந்த விசாரம் செய்பவனின் புரிதல் எப்படி இருக்கும் தெரியுமா? சோகம், மோகம், மாயை இவற்றைப் புறந்தள்ளி எல்லாவற்றுக்கும் பீஜமான ஆன்மா மீதே அவனது திருஷ்டி இருக்கும்.
“அவன் அடுத்த மரத்திற்கான பீஜத்தை நடுவான்; பேணுவான்; எருவிடுவான்; என்னவெல்லாம் தேவையோ அவற்றை இட்டு விதையை மரமாக்குவான்; அதன் மூலம் ஆயிரக்கணக்கான மாங்கனிகளை விளைச்சலாக அடைவான். அவற்றை மக்களோடு பகிர்ந்துண்பான்...''
வசிஷ்டர் கூறிக் கொண்டே போக, சத்குருவின் திருவாயிலிருந்து வரும் சத்தான விஷயங்களால், தன் மனதின் பித்தான கருத்துகள் களைந்தெறியப்படுவதைக் கண்டார் ராமர். வசிஷ்டர் ராமரின் சிரசில் கை வைத்து ஆசீர்வதித்தார். இன்பம் - துன்பமற்ற ஆனந்தத்தில் நிலைத்து நின்றது ராமரின் சிந்தை.
‘ஆயிர வருடத்து இருள் என்றாலும், ஒளியின் முன் அரைக் கணத்தில் ஓடோடி விடும்' என்பதை நேரில் கண்டவர்போல் விசுவாமித்திரர் வசிஷ்டரை வணங்கி நின்றார். தனது அக்ஞான இருளைப் போக்கிய குருவின் பாதங்களில் ராமர் வீழ்ந்தார்.
விசுவாமித்திரர் புறப்பட்டார். வில்லை ஏந்திய ராமர் தாடகை வதம் நடத்திட, கம்பீரமாக அவரைப் பின்தொடர்ந்தார்.
சுவாமி விமூர்த்தானந்தர்
20 ஏப்ரல், 2021
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்